என் மலர்
நீங்கள் தேடியது "ரணில் விக்ரமசிங்கே"
- மலையக தமிழர்கள், வீடு கட்டிக்கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகிறது.
- மலையக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கொழும்பு :
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கொழும்பு போய்ச் சேர்ந்த மருந்து பொருட்களை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பெற்றுக்கொண்டார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:-
இலங்கை மலையக தமிழர்கள் சிலர், இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்து விட்டனர். வேறு சிலர் இணையவில்லை. அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களை எப்படி இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். அந்த சமயத்தில், மலையக தமிழர்களின் பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும்.
கடந்த 1964-ம் ஆண்டு, சிறிமா பண்டாரநாயகா-லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, மலையக தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு செல்லாமல் இலங்கையிலேயே தங்கிவிட்டனர்.
மலையக தமிழர்கள், வீடு கட்டிக்கொள்வதை இலங்கை அரசு ஊக்குவித்து வருகிறது. அவர்களுக்கு நிலம் வழங்குகிறது. மற்ற குழுக்களை போல் அவர்களும் சொந்த நிலத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறோம்.
மலையக தமிழர்களின் குழந்தைகள், படித்து முடிந்த பிறகு அந்த பகுதியை விட்டு வெளியேறுவதால், மலையக பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலையக தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத போராட்டம், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
- நமது பிரச்சினைகளுக்கு வெளிநாட்டின் தலையீடு தேவையில்லை.
கொழும்பு :
இலங்கை தமிழர் பிரச்சினை பல்லாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண போடப்பட்ட ஒப்பந்தங்கள் பலன் அளிக்கவில்லை.
விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத போராட்டம், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனார்கள். இதற்காக மனித உரிமை அமைப்புகள், இலங்கை அரசை குற்றம் சாட்டின.
இந்தநிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார். அப்போது, இலங்கை தமிழ் எம்.பி.க்களை பார்த்து அவர் பேசியதாவது:-
இலங்கை தமிழ் கட்சிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கிறேன். இலங்கை தமிழர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடுவதற்குள், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவோம்.
நமது பிரச்சினைகளுக்கு வெளிநாட்டின் தலையீடு தேவையில்லை. நமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண்போம். அதற்குத்தான் முயன்று வருகிறோம்.
ஏற்கனவே வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசி இருக்கிறோம். அதனால்தான், சில தமிழ் கைதிகளை விடுதலை செய்தோம். இன்னும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் இருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மேம்படுத்த விரும்புகிறேன். வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்துள்ளது. அங்கு பசுமை ஹைட்ரஜனை எடுத்தால், வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் உச்சத்துக்கு செல்லும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது.
- பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது.
கொழும்பு :
இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் வரிகள் மூலம் ஈட்ட நினைத்திருந்த வருவாய், குறைவாகத்தான் கிடைக்கும் என்று கருதுகிறோம்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது.
- தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது.
கொழும்பு:
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை வரலாறு காணத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டது. இதனால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளுடன் ஆதரவுடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வருகிறார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இலங்கையில் தொழிற்சங்கங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசிய ரணில் விக்ரமசிங்கே அப்போது கூறியதாவது: - இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து இருப்பது நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களையும் நன்கு அறிவேன். தொழிலாள்ரளின் எண்ணிக்கையும் சரிந்து விட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு உயர்ந்துள்ளது. இதனால், அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.
பொருளாதார பிரச்சினைக்கான மூலக்காரணம் என்பது பற்றி பேசுவது பயனற்றது. தற்போது இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவது மட்டுமே. இல்லாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மால் மீள முடியாது" என்றார்.
- கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது.
கொழும்பு :
இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தீர்வுகாண இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4-ந் தேதிக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதி பூண்டுள்ளார். கடந்த மாதம் அவர் தமிழ் தேசிய கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்சே, சிறிசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவர் சம்பந்தன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் கோரிக்கையான அரசியல் சுயாட்சி குறித்து விவாதித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த இக்கூட்டத்தில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.சமீபத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்று வந்த நிலையில், இந்த கூட்டம் நடக்கிறது.
- இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
- இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பங்கேற்றார்.
கொழும்பு:
ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்
- மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைத்தார்.
கொழும்பு :
மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இதில் முக்கியமாக, மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்தை நேற்று அவர் திறந்து வைத்தார்.
இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இலங்கையின் வளமான மற்றும் பலதரப்பட்ட கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பேசிய ரணில் விக்ரமசிங்கே, கலாசார மையத்தை கட்டுவதற்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கை சென்றபோது இந்த மையத்துக்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-இலங்கை நல்லுறவு குறித்து அவர்கள் ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது இலங்கை அதிபருக்கு திருக்குறள் புத்தகத்தை எல்.முருகன் பரிசாக வழங்கினார்.
- இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
- நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும்.
கொழும்பு :
மே தினத்தையொட்டி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.
அதில், 'நம் நாடு கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார சீர்குலைவுக்கு உள்ளானது. பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான கடினமான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக நாம் காத்திருந்தபோது, தொழிலாளர்கள் அதற்கு துணிவோடும், பொறுமையோடும் ஆதரவு அளித்தனர். தற்போது மே தினத்தை கொண்டாடும் வேளையில், இலங்கை தொழிலாளர்களின் பெருமையை உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
வருகிற 2048-ம் ஆண்டு, சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது இலங்கை ஒரு வளர்ந்த நாடாகும். அதற்கான பணியில் நாட்டின் தொழிலாளர்கள் அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட இந்த அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் அவர்களை வாழ்த்துகிறோம்.'
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை.
- எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது.
கொழும்பு :
இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினை தொடர் கதையாகவே நீடிக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக நேற்று அவர் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், நாட்டின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு விரும்புகிறேன். அப்படி தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஏனெனில் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது சர்வதேச நிதியம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துகிறோம்.
அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த ஒரு சமூகத்தையும் நாம் சிதைக்கக்கூடாது. பெரும்பான்மை சிங்களர், தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் ஏனைய சிறுபான்மைக் குழுக்களைப் பாதுகாத்து நாம் முன்னேற வேண்டும். அதை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளோம். இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் கூடுகிறது. அனைவரும் தங்கள் பணியை தடையின்றி மேற்கொள்கின்றனர்.
சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே நமது அடுத்த பணி. 2024-ம் ஆண்டுக்குள் தேவையான சட்டத்தை உருவாக்கி பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யும் 13-வது சட்ட திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே கூறி இருந்தார்.
ஆனால் இதற்கு சிங்களர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட பல்வேறு அனைத்துக்கட்சி கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் விடுத்திருக்கும் அழைப்புக்கு சிங்கள கட்சிகள் செவிசாய்க்குமா என்பது போகப்போக தெரியும்.
- தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
- தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
கொழும்பு :
இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தமிழர் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட ஏற்கனவே பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய அவர், இது தொடர்பான செயல் திட்டங்களை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழர்களுடன் நல்லிணக்கத்துக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, சட்டம் வகுத்தல், நிறுவன செயல்பாடுகள், நிலப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் ஆகிய 5 முக்கிய துறைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.
மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல், தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டன.
இதைத்தவிர காணாமல்போனோர் அலுவலகத்தின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தில் வலியுறுத்தினார். நிவாரண அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான தற்போதைய முயற்சிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அதிபர் விக்ரமசிங்கே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இறுதியாக இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு மூத்த ஆலோசகர் சகலா ரத்நாயகே உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
- இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.
கொழும்பு :
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை.
சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.
இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, சீனாவின் 'யுவான் வங்-5' என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.
அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார்.
- அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம் செய்கிறார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.
தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.
அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.