என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆர்த்தி"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 290 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். தொடர்ந்து இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22 ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினை வழங்கினார்.

    மேலும், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மகளிர் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
    • கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள். எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது.
    • சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும்.

    இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதுப் புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாது காப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

    பழரசம், சர்பத், கம்மங் கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும் நன்னீராகவும் இருக்கவேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

    உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும்.

    திரவ ஆகாரங்களைத் தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுத்தர ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்கவேண்டும்.

    பெரிய ஐஸ் கட்டிகளை எடுத்து செல்ல வைக்கோல், சணல் பை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

    அதே போல் நுகர்வோர் கடையில் திரவ உணவுப் பொருள்களை வாங்கும் போது கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டுபோகும் நிலையில் பொருட்கள் இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும்.

    திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடைக் காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதிநாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்கவேண்டும்.

    நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என்.எம்.எம்.எஸ் செயலியில் வருகை பதிவு மேற்கொள்ள முடியும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டு முதல் அனைத்து பணிகளும் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்களின் வருகை பதிவு 21.05.2021 முதல் இரு முறை என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டால், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கைமுறையாக வருகைப் பதிவு அனுமதிக்கப் பட்டிருந்தது.

    தற்போது இந்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக இயக்குநர் காந்தியின் தேசிய ஊரக கடிதத்தில், 16.05.2022 முதல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் மட்டுமே வருகை பதிவு மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 01.05.2022 முதல் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும்போது கையால் எழுதப்படும் வருகைப்பதிவேடு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முழுமையாக என்.எம்.எம்.எஸ் செயலியில் தொழிலாளர்களின் புகைப்படத்துடன் வருகை பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் என்.எம்.எம்.எஸ் செயலியில் வருகை பதிவு மேற்கொள்ள முடியும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் அனைத்தும் என்.எம்.எம்.எஸ் செயலி மூலம் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள விவரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×