search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    • ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
    • ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரி எழில்மலையின் மருமகனும், பிரபல வக்கீலுமாக இருந்தவர் காமராஜ். இவரை கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட்டு, காமராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த ஐகோர்ட், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கும்படி மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே 9 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விசாரித்து முடிக்க கெடு விதிக்கும்படி கொலையுண்ட காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி, மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், காமராஜ் கொலை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. இன்று (19-ந்தேதி) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவ கடாட்சம் இந்த வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனந்த், கார்த்திக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

    ×