என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் ஸ்டாலின்"

    • உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம்
    • வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

    தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் விமர்சித்துள்ளார்.

    சமீபத்தில் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்த நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    அவர் கூறியதாவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

    உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன"

    முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார்.
    • காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

    மதுரை:

    மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

    மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    • சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே அரசின் குறிக்கோள்

    சென்னை:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    "இன்று மிகவும் சிறந்த நாள்;

    எங்கள் நேரு பிறந்தநாள்;

    அன்பு மாமா உலகிலே

    அவதரித்த புனித நாள்!

    அன்று சிறிய குழந்தையாய்,

    அலகாபாத்தில் பிறந்தவர்

    என்றும் நமது நெஞ்சிலே

    இருந்து வாழும் உத்தமர்!"

    - என நேரு அவர்களைப் போற்றிப் பாடினார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. பண்டித நேரு அவர்கள் குறித்து "நேருவும் குழந்தைகளும்", "நேரு தந்த பொம்மை" ஆகிய நூல்களை இயற்றியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களைப் பாடியுள்ள அவரது நூற்றாண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021" கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

    குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம். எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு. குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.

    இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

    குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.

    குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு. கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். "குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
    • வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், உழவர்களுக்கு பல பயனுள்ள பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.

    வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு.

    நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.


    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

    ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    நடிகர் கார்த்தியின் பதிவிற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இணையப் பக்கத்தில், "அன்பின் கார்த்தி, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'! " என்று பதிவிட்டுள்ளார்.


    • அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம்
    • அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்

    அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கருக்கு உண்டு.

    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்ட மேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

    அண்ணல் அம்பேத்கரின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரைப் போற்றியுள்ளது தி.மு.க. அரசு

    சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் ! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்.!. என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது
    • புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை

    அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

    ×