என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக மறியல்"

    • சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    சேத்தியாத்தோப்பு:

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நெய்வேலி அருகேயுள்ள ஆணைவாரி, எரும்பூர், காரிவெட்டி, வளையமாதேவி, கத்தாழை போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராமத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., த.வா.க. போன்ற கட்சிகளும் களம் இறங்கின. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அண்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை இன்று தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் பணிகளை தொடங்கும் போது கிராம மக்களின் போராட்டம், பா.ம.க. போன்ற கட்சிகளின் போராட்டம் நடைபெறும். அது போல இந்த முறை போராட்டம் நடைபெற்றால் அதனை தடுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    இவர்கள் சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டிலும், வடக்குத்து ஜெகன், செல்வமகேஷ் தலைமையில் வளையமாதேவியிலும் மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்டிருந்த பா.ம.க.வினரை கைது செய்தனர்.

    மேலும், கலவரம் ஏதேனும் நடந்தால் அதனைக் கட்டுப்படுத்த வஜ்ரா, வருண் போன்ற வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    ×