என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக"
- பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
- பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.
இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை-பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும்-அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
உத்தரபிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை-பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.
உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.
பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.
பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.
பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை கேட்க இந்தியா கூட்டணி கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
கோவை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படுகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.
தி.மு.க. அடங்கிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை சென்னையில் இருந்து கோவைக்கு வருகிறார். இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நெல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவைக்கு வருகிறார்.
தொடர்ந்து இரு தலைவர்களும், கோவை எல்.அண்ட்டி சாலையில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
இந்த கூட்டத்தில் 12 சட்டசபை தொகுதிகளில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து பா.ஜ.க. போட்டியிடுகிறது. பா.ஜ.க. சார்பில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு அவருக்கு ஆதரவு திரட்டி சென்றுள்ளார்.
அப்போதெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற தி.மு.க. மீது பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்து சென்றுள்ளார். நேற்று நடந்த கூட்டத்தில் கூட தி.மு.க. அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து பேசினார்.
இந்த நிலையில் தான், பிரதமர் வந்து சென்ற ஒரு நாள் இடைவெளியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல்காந்தியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை கேட்க இந்தியா கூட்டணி கட்சியினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இருபெரும் தலைவர்களும் கோவைக்கு வந்து ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வது இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
- தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் கி.வீரமணி, அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார்.
- 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் கி.வீரமணி, 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ந்தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ந்தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.
வருகிற 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ந்தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ந்தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ந்தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ந்தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ந்தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ந்தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ந்தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ந்தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ந்தேதி துறையூர், திருச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
- தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது.
- உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை:
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் பணியாற்றியது. அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் 'ஐபேக்' நிறுவனம் பணியை முடித்துக்கொண்டு வெளியேறியது.
இப்போது நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 'பென் டீம்' செயல்பட்டு பிரசார வியூகம் வகுத்து வருகிறது. இது தி.மு.க. தலைமையே உருவாக்கிய நிறுவனமாகும். ஐபேக் டீமில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டதோ? அதே வகையில் பென் டீம் சற்று வித்தியாசமாக தி.மு.க.வுக்கு ஆலோசனைகளை வழங்கி பணியாற்றுகிறது.
இந்த நிறுவனம் இப்போது தேர்தல் பிரசார பாடல்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
தி.மு.க.வுக்கு முதல் பிரசார பாடலாக, 'நமக்காகவே நமைக் காக்கவே எப்போதும் ஒலிக்கும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பிரசார பாடல் பட்டிதொட்டியெங்கும் மிகப் பிரபலமான நிலையில் இப்போது 2-வது பிரசார பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
அந்த பாடல் வரிகளில் ஆஜாகா, ஐஜாகா, ஊஜாகா வேணாமே வீணான பூஜாகா, ஏஜாகா ஐஜாகா ஓஜாகா நாமளா? அவங்களா? பார்ப்போம் வா...
உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்று பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரசார பாடல் இப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
- செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
- வழக்கை தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என உத்தரவு.
சென்னை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் 'அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில் 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகள் தவிர மீதமுள்ள 6 வழக்குகள் சுவரொட்டி ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான். வேலை வாங்கித் தருவதாக ரூ.67 கோடி வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்ட காலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில், 'சுமார் ரூ.67 கோடி வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு கோர்ட்டால் சான்றளிக்கப்பட்ட உண்மையான ஆவணங்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார். சாட்சிகள் அச்சுறுத்தப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
மனுதாரர் செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதனால், அவர் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறும் குற்றச்சாட்டை ஏற்க தேவையில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நான் ஏற்க முடியாது.
துறை இல்லாத அமைச்சராக பதவி வகித்த மனுதாரர், ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு, துறையில்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மனுதாரர் கடந்த 8 மாதங்களாக அமைச்சர் பதவியில் நீடித்துள்ளார்.
இதன்மூலம், துறையே இல்லாத அமைச்சராக சிறைக்குள்ளே இருந்தார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்குமிக்கவர் என்பதும், அவருக்கு மாநில அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.
அமைச்சர் பதவியை தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், ஆட்சி செய்கிற கட்சியின் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார். அதனால், தமிழ்நாடு அரசின் செல்வாக்கை தொடர்ந்து மனுதாரர் பெற்று வருகிறார் என்று கூறுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.
இப்படி ஒரு சூழ்நிலையில், இந்த வழக்கில் சாட்சிகளாக போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். எனவே சாட்சிகளை கலைக்கக்கூடும்.
அதுமட்டுமல்ல, வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்குகளில், புகார்தாரர்களை மனுதாரர் சமரசம் செய்து விட்டார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பிறகு, அவருக்கு எதிராக வழக்குகளின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவை எல்லாம் மனுதாரர் இந்த வழக்கில் நடந்துக் கொண்ட விதத்தை காட்டுகிறது.
இவர் முன்பு போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார். பலருக்கு வேலையும் வழங்கியுள்ளார். இதனால், இந்த வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பணம் கொடுத்தவர்கள் போக்குவரத்துத் துறையில் வேலையை கைப்பற்றிக் கொண்டனர்.
இதன்மூலம் ரூ.67.74 கோடியை சட்டவிரோதமாக மனுதாரர் பெற்றுள்ளதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கினால், அது இந்த சமுதாயத்துக்கு தவறான தகவலை தெரியப்படுத்தும். எனவே, இவருக்கு ஜாமின் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரர் 8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதனால், இவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கால நிர்ணயத்தை கீழ் கோர்ட்டுக்கு வழங்க வேண்டியது உள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தினந்தோறும் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
- கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.
தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.
அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.
கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.
இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.
இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.
எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.
இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.
- தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தோம்.
- வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பாளையம்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்து பேசி, தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தோம். வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.
- மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
- புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.
கோவை:
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.
பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.
- மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
- மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.
திருப்பூர்:
திருப்பூர் கொடுவாயில் தி.மு.க., இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இளைஞரணி மாநாட்டு நிதியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் ரூ.1 கோடி, தெற்கு மாவட்டம் ரூ.1 கோடி, வடக்கு மாவட்ட இளைஞரணி ரூ. 14 லட்சம், தெற்கு மாவட்ட இளைஞரணி ரூ.12 லட்சம், முன்னாள் மாவட்ட செயலாளர் சார்பாக 2 லட்சம் என ரூ. 2 கோடியே 28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநாட்டிற்காக 4 லட்சம் டீ- சர்ட்டுகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களுக்கெல்லாம் சட்டையில் செல்லும் நான் இங்கு மட்டும்தான் டீ-சர்ட்டில் வந்திருக்கிறேன். மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
காலில் விழுந்து முதல்வரானவர் அல்ல. மு.பெ.சாமிநாதன் வகித்த பொறுப்பை நான் வகிப்பது தான் எனக்கு பெருமை. இளைஞரணியில் கிளை அமைப்பாளராக பணியை தொடங்கியவர் மு.பெ. சாமிநாதன். சேலம் மாநாட்டை எழுச்சி மாநாடாக கொள்கை மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவே சேலம் மாநாடு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று முதல் தமிழக அரசால் அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க., 9 ஆண்டுகளில் என்ன செய்தது. மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
- ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவரப்படுத்தும் வகையில் பொற்கிழி விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தி.மு.க. ஈரோடு தெற்கு, வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார்.
இதேபோல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
- அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.
இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
- கூட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வேலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள பாப்பிஸ் அனுகுலா ரெசிடென்சி அரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாநில துணை செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, ஏ.என்.ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்துவது, கலைஞர் நூலகம் அமைப்பது, இளைஞர் அணி மாநில மாநாடு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்