search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taj Mahal"

    • நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
    • இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

    நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

    இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.

    பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.

    மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.

    ஆக்ராவில் நமையில் பெய்த கனமழையால் தாஜ்மஹாலில் நீர் கசிவு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தாஜ்மகாலின் மேற்கூரையில் செடி வளர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றுலா பயனை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

    இதனையடுத்து, உலக அதிசயமான தாஜ்மஹால் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல், "கடந்த ஆகஸ்ட் மாதமே தூணில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டது. இந்த செடி 15 நாட்களுக்கு முன்பு உருவாகியுள்ளது. இது விரைவில் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்தனர்
    • கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை [ABHM] சேர்ந்த சேர்ந்த சியாம்பாபு சிங், வினேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ் மாலின் உள்ளே  மும்தாஜ் -ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட  கல்லறைப் பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள சுவர்களில் ஓம் ஸ்டிக்கர்களையும் ஒட்டியுள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்து, கல்லறை அமைந்துள்ள தரைதளத்தின் கதவைப் பூட்டிவிட்டு கங்கை நீரை அங்கு ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது. இதனையடுத்து இருவரையும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பாஜக ஆட்சியில் உலக அதிசயமான தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
    • தாஜ்மஹாலில் சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்ததாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன

    தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன.

    தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    தற்போது கன்வார் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

    தன்னை அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என கூறிக்கொண்ட அவர், "தாஜ்மஹால முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார். ஆனால் போலீசார் என்னை தடுத்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

    • ‘இளவரசரை போல் உணர்ந்தேன்’ என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளமான டிக்-டாக் மூலம் உலக அளவில் பிரபலமானவர்களில் ஜெர்மனியை சேர்ந்த நோயல் ராபின்சனும் ஒருவர் ஆவார். சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ராபின்சன் மும்பையில் பரபரப்பான பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன் நடனம் ஆடிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் அவர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ராபின்சன் மெருன் நிற குர்தா அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    'இளவரசரை போல் உணர்ந்தேன்' என்ற தலைப்பில் ராபின்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்பு.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் நசுக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

    இளம்பெண் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டம்.
    • விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    டெல்லியில் அபாய அளவை கடந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் காற்று மாசுவால் சூழ்ந்து காணப்படுகிறது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல், டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வாகனக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் இன்று வந்தது.

    அப்போது, தாஜ்மகால் வழக்கில், மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    • டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    லக்னோ:

    வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.

    டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.

    இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    • தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர்.
    • பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தாஜ்மகால் முன்பு பெண்கள் 5 பேர் யோகாசனம் செய்தனர். அங்குள்ள சிவப்பு மணற்கல் மேடையில் நான்கு பெண்கள் சூரிய நமஸ்காரம் செய்ய அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    இதையடுத்து அந்த பெண்களிடம், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது பெண்கள், தாஜ்மகாலில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் அவர்களை எச்சரித்து, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கடிதத்தை அதிகாரிகள் பெற்றனர்.

    • ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.
    • இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.

    சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம் காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.

    முகலாய மன்னரான ஹாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டியதாகத்தான் நாம் படித்து வந்தோம்; வருகிறோம்.

    ஆனால், இதைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்துள்ளார் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ்.

    இதுதொடர்பாக, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சுர்ஜித் யாதவ், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை. ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என கோரியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    • டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி இந்தியா வந்தடைந்தனர்.
    • டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.

    புதுடெல்லி:

    டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்காக அவர்கள் நேற்று காலை புதுடெல்லி வந்தடைந்தனர்.

    டென்மார்க் நாட்டு அரச குடும்பத்தில் இருந்து அரச தம்பதி வருவது 2 தசாப்தங்களில் இது முதன்முறை ஆகும். கடந்த 2003-ம் ஆண்டில் கடைசியாக டென்மார்க் இளவரசர் வந்து சென்றார். அதற்கு முன் 1963-ம் ஆண்டு டென்மார்க் அரசி 2-ம் மார்கரெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்காரை, டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் கிறிஸ்டியன் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் நேரில் சந்தித்து பேசுகிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் அவர்கள் ஆக்ரா கோட்டைக்கும் சென்றனர்.

    • 2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர்.
    • டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹாலும் ஒன்று. இந்த நிலையில் உலக சுற்றுலா தினத்தையொட்டி மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்கிற பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.

    அதில் 2021-2022-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2021-2022-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப் மினார் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக உள்ளன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×