என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Tamil Nadu politics"
- 2021ல் திமுக மற்றும் அதிமுக, முறையே 37 மற்றும் 33 சதவீத வாக்குகள் பெற்றன
- பெரிய கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவி சிறு தலைவர்களை கவர்கிறது
தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் உள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், பதிவான வாக்குகளில், தி.மு.க. சுமார் 37 சதவீதமும் அ.தி.மு.க. சுமார் 33 சதவீதமும் பெற்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006143-india-tamilnadu-2024elections5.webp)
இரு கட்சிகளை தவிர தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை முறையே 4.26 சதவீதம் மற்றும் 2.61 சதவீதம் என வாக்குகளை சேகரித்தன.
இவை தவிர, சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., தே.மு.தி.க. ஆகியவை குறைந்த அளவே வாக்கு சதவீதத்தை சேகரித்தன.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் தற்போது வரை உறுதியாகவில்லை. இந்நிலையில், சிறு கட்சிகளின் நிலைப்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
வன்னிய சமுதாய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக உருவான விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொழிலாளர்களின் நலனுக்கான கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்வதையே விரும்புகின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006144-india-tamilnadu-2024elections2.webp)
(நாம் தமிழர் கட்சி, அனைத்து மத்திய, மாநில மற்றும் ஊராட்சி தேர்தல்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது).
தங்கள் சுயபலத்தை அக்கட்சிகளும், பொதுமக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் தனித்து போட்டியிட்டால்தான் அவர்களுக்கான வாக்கு வங்கியின் உண்மையான சதவீதம் வெளிச்சத்திற்கு வரும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006160-india-tamilnadu-2024elections7.webp)
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு வலியுறுத்தி தங்கள் சாதி வாக்கு வங்கியின் பலத்தை காட்டிக்கொள்ள முயலும் கட்சிகள் கூட தனித்து போட்டியிட்டு பலத்தை காட்ட முன்வர மறுக்கின்றன.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006145-india-tamilnadu-2024elections3.webp)
மேலும், சமூக நீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குதல், பாதுகாப்பான வாழ்க்கை, சிறப்பான உள்கட்டமைப்பு உள்ளிட்ட ஒரு சமுதாய வளர்ச்சிக்கு அவசியமான அம்சங்களில் நிலவும் சிக்கல்களை தீர்க்க, தங்கள் பார்வை, சித்தாந்தம், தீர்வுகள் உள்ளிட்டவைகளை மக்களிடையே எடுத்து சொல்லி பிரசாரம் செய்து, ஆளும் கட்சிகளின் குறைகளை ஊடகங்களின் வழியே கேள்வி கேட்டு தங்களை வளர்த்து கொள்ள எந்த ஒரு கட்சியும் முயல வேண்டும்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006162-india-tamilnadu-2024elections6.webp)
ஆனால், கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி பேரங்களில் கிடைக்கும் குறைந்த இடங்களை "போதும்" என பெற்றுக் கொண்டு, பெரும் கட்சிகளின் நிதி மற்றும் தொண்டர்களின் உதவியுடன் எளிதாக வெல்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/01/2006146-india-tamilnadu-2024elections4.webp)
இந்நிலை தொடர விமர்சகர்கள் முன்வைக்கும் காரணங்கள்:
* புது கட்சிகளின் தலைவர்களை பார்க்க மக்கள் கூட்டமாக வந்தாலும், வாக்களிக்கும் போது அவர்களை மறந்து விடுகின்றனர்.
* 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., தனித்தனியே 30 சதவீதத்திற்கும் மேலாக வாக்குவங்கியை சிதறாமல் வைத்துள்ளன.
* வாக்களிக்க பணம் கொடுக்கும் வழிமுறை தமிழகத்தில் ஆங்காங்கே நிலவுவதால், சிறு கட்சிகளின் சித்தாந்தங்கள் கவர்ந்தாலும், பணம் தரும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பது என்னவோ தொடர்கிறது.
* பொதுவாக கட்சிகளின் தலைவர்களிடம் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம். தலைவர்கள், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என வாக்காளர்கள் கருதுகின்றனர்.
* சட்டசபை மற்றும் மக்களவையில் ஸ்திரமான ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
* பெரிய கட்சிகள் சாதி, செல்வாக்கு மற்றும் நிதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் போது தங்கள் தொகுதியில் வெல்வதற்கு வழிமுறைகளை வேட்பாளர்களே கண்டறிகின்றனர். இதை சிறு கட்சிகளால் எதிர்க்க முடிவதில்லை.
சுயபலத்தை காட்டி தங்களால் தனித்து ஜெயிக்க முடியாது என்றால் பெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதை விட, கட்சியையே கலைத்து விட்டால், நல்லது என்ற எண்ணமும் மக்கள் மனதில் தோன்றக்கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
- தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
- முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.
2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.
சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.
இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/12/16/1993128-india-premalatha-1.webp)
மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது
பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.
இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.
பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.
"கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.
இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/12/16/1993136-india-premalatha-2.webp)
ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.
2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.
திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.
இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம்.
- அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
வெள்ள நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில் அரசியலுக்கான வியூகத்தையும் பா.ஜனதா வகுத்தது. 39 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம். அதேபோல் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஒரு அலுவலகம்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் எவ்வளவு உறுப்பினர்கள் புதிதாக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரையும் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என்று கட்சி சாராமல் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து அவர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்வது களத்தில் பணியாற்றும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. தெலுங்கானாவில் பூத் கமிட்டிகள் சரியில்லாததால் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது. கூட்டணியைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
தனித்து நின்றும் சாதிக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலிமைப்படுத்துங்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் தகுதியானவர்களுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். இந்த அடிப்படை பணிகளே நமது வெற்றிக்கும் அடித்தளம் ஆகும் என்றார்.
- உதயநிதியின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது
- எந்தவிதமான சட்ட நடவடிக்கைக்கும் தயார் என்றார் உதயநிதி
கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எனும் அமைப்பு, "சனாதன ஒழிப்பு கருத்தரங்கம்" எனும் பெயரில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதில் உரையாற்றும் போது, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதனம் குறித்து பேசுகையில், "சமூக நீதிக்கும் சமநீதிக்கும் எதிரானது சனாதனம். சனாதன தர்மம் என்பது வெறுமனே எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; அது டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார்.
இந்த கருத்துக்கு தி.மு.க.வில் உள்ள தலைவர்களும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினரில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், மாநில எதிர்கட்சியான அ.தி.மு.க.வின் தலைவர்களும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் தமிழக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களும், நாடு முழுவதும் உள்ள இந்து மத ஆன்மிக அமைப்புகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தான் தெரிவித்த கருத்திலிருந்து தான் பின் வாங்க போவதில்லை என்றும், எந்தவிதமான சட்ட ரீதியான நடவடிக்கையையும் சந்திக்க தயார் என்றும் கூறி வரும் உதயநிதி, தனது கருத்திற்கு ஆதாரமாக புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாததை சுட்டிக்காட்டி, "சனாதனத்தில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுகிறது" என கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, "பா.ஜ.க.வின் எதிர்கட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக படித்து பார்க்க வேண்டும். உதயநிதியின் கருத்திற்கு தக்க வகையில் பதிலடி தரப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை உருவானதில் இருந்து தற்போது தான் பிரதமர் மோடி, முதல் முறையாக இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மத நம்பிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உத்தர பிரதேச ராம்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.