search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu Government"

    • முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவிப்பு.
    • முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் .

    முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    வரும் ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிப்க்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்கள்.

    இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

    முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் (B-Pharm / D.Pharm) சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் உத்தரவு.
    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியால், தமிழகத்தில் மலைப்பகுதிகளில் இருக்கும மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி, மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்தன.
    • வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை கட்ட ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமடைந்தன.

    மழை வெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வரையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுதுநீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.
    • வாரத்தின் 5 நாட்கள், பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் துவங்காமல் உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    அதன்படி , தற்போது நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    தொழிற்கல்வி இணை இயக்குனர் அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.

    மேலும், பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.

    மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.

    நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.

    அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.

    திங்கள்-தாவரவியல், கணிதம்; செவ்வாய்-இயற்பியல்; புதன்-விலங்கியல், கணிதம்; வியாழன்-வேதியியல்; வெள்ளி-மீள்பார்வை, சிறுதேர்வு என பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

    நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப் பகுதியில் இருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

    இப்பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்களுக்கு 2 ஆசிரியர்கள் என 10 பேர்) அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

    பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வு சார்ந்த ஏற்பாடுகள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

    மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பி இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாட ஆசிரியர்கள் குழு) வாட்ஸ்அப் உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல் வேண்டும்.

    இதற்கு விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை தேர்வு செய்ய வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்.

    பயிற்சிக்கான கால அட்டவணையை மாநிலக் குழுவின் உதவியோடு தயார் செய்வது. பயிற்சிக்குரிய வினாத்தாள்களைத் தயார் செய்ய முகாம் நடத்துதல். வினாவிற்கான விடைகளைத் தயாரித்தல்.

    பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல். குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல். மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல்.

    அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பு கள் நடைபெறச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல். பயிற்சிக்குரிய வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள் தயார் செய்தல்.

    ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை கண்காணித்தல். மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணிப்பது. அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணிப்பது, பாடம் ஒன்றிற்கு 4 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
    சென்னை:

    பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

    9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

    இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.



    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
    மதுரை:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    சமூக வலைத்தளங்களால் கல்வி, தகவல்தொடர்பு போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிக அளவில் உள்ளன. பாலியல் உள்பட பல்வேறு கொடூர குற்றங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரப்பப்படுகிறது.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை மற்றும் கோர்ட்டு ஆவணங்கள், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228ஏ பிரிவின் கீழ் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கலாம்.

    சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின்(கல்லூரி மாணவி) விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணை படை அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோ, புகைப்படம், ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.செந்தில்குமார், ஏ.கே.மாணிக்கம் ஆகியோர் வாதாடுகையில், “பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது. இதை கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உரிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று கூறினார்கள்.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் பாதிக் கப்பட்டுள்ளது தெரியவருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த பெண்ணின் தனிப்பட்ட விவரத்தை வெளியிட்டது ஏன்? இனி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது மனுதாரர் வக்கீல்கள், “இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ‘பார்’ நாகராஜ் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் பரவி வருகின்றன. இதை பார்த்த உள்ளூர் மக்கள் அவருடைய பாருக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே பாலியல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவை கலெக்டரிடம் ‘பார்’ நாகராஜ் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன” என்றும் தெரிவித்தனர்.

    அதற்கு நீதிபதிகள், இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினர்.

    விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஒருவனை நம்பிச் சென்ற பெண்ணை சில விரோதிகள் சூழ்ந்து துன்புறுத்தும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து உள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதுபோல நடப்பதற்கு தூண்டுவதாக அமையும் என்று மனநல டாக்டர் ஷாலினி தெரிவித்து உள்ளார்.

    எனவே பொள்ளாச்சி சம்பவ வீடியோக்களை பொதுநலன் கருதி சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், இணையதள சேவை வழங்குபவர்கள் சங்கத்தின் செயலாளரையும் எதிர்மனுதாரராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது.

    பாலியல் சம்பவ வீடியோக்கள் அடங்கிய செல்போன்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சகோதரரும் போலீசில் புகார் செய்து, செல்போன்களையும் ஒப்படைத்து உள்ளனர். செல்போன்களில் இருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவாமல் போலீசார் தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

    பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

    அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் தைரியமாக, மனிதாபிமானமற்றவர்களின் அட்டூழியங்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக வைக்க போலீசார் தவறிவிட்டனர். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீசார் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

    இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் பின்பற்றவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய தனிப்பட்டவரின் விவரங்களை போலீசார் வெளிப்படுத்தி உள்ளனர்.

    அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இணையதளத்தின் நன்மை, தீமைகளை அனைவரும் அறியும் வகையில், குறிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நம் நாட்டில் நூறு கோடி பேரின் கைகளில் செல்போன்கள் உள்ளன. தினமும் செல்போன் இல்லாமல் சிறிது நேரத்தை கூட நம்மால் கழிக்க முடியாது என்ற நிலையில் உள்ளோம். ஒரு சிலர் செல்போன்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் சினிமா, குறும்படம், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிப்பதுடன், அனைவருக்கும் விழிப்புணர்வு செய்து தெரியப்படுத்த வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல் இணையதளம், செல்போனின் நன்மை, தீமைகளை பள்ளி, கல்லூரி பாடங்களிலும் சேர்க்க வேண்டும். பெற்றோரின் அரவணைப்பு இல்லாததன் காரணமாக பெண் குழந்தைகள் பாதை மாறிச் செல்கின்றனர். இதை தவிர்க்க, நாள்தோறும் தங்களது குழந்தைகளிடம் குறிப்பிட்ட நேரத்தை பெற்றோர் செலவிடுவது அவசியம். தேவையான அன்பை செலுத்தினால் குழந்தைகள் பாதை மாறி செல்வது தடுக்கப்படும்.

    பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்.



    இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    அத்துடன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள். #PollachiAbuseCase #MaduraiHighCourt
    ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோகுல் என்ற பள்ளி மாணவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் ஜனவரி 25-ந்தேதிக்கு முன்பாக பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    எனினும், நேற்றும் ஆசிரியர்கள் பலர் வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, மனுதாரர் வக்கீல் நவீன்குமார் மூர்த்தி நேற்று நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டும், ஆசிரியர்கள் அந்த உத்தரவை அவமதிக்கும் விதமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு நீதிபதிகள், ‘ஆசிரியர்களின் போராட்டத்தை நாங்கள் சட்டவிரோதம் என்று அறிவிக்கவில்லை. மாணவர்களின் நலன் கருதி 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டோம். ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், ஐகோர்ட்டு தலையிட முடியாது’ என்று கூறினர். #ChennaiHighCourt #TNGovernment
    திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #ThiruvarurByElection #GajaCyclone #ECI #TNGovernment
    புதுடெல்லி:

    திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளை தொடங்கின.

    இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், திருவாரூரில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடருவதற்கு தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், திருவாருரில் நிவாரண பணிகளை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.

    நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது. தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #CycloneGaja #ECI #TNGovernment
    விருதுநகர் மற்றும் சென்னை பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #TNGovernment
    புதுடெல்லி:

    விருதுநகர் மாவட்டத்தில் 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் ரத்த வங்கி ஊழியர் அந்த ரத்தத்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்யவில்லை என்றும், அந்த ரத்தம் பாதுகாப்பானது என குறிப்பு ஒட்டப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரியிலும் பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்கு செலுத்தியதும் தெரிந்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு அனைத்து ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தையும் ஆய்வு செய்யும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக 27 வயது பெண் புகார் கூறியுள்ளார்.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 சம்பவங்களும் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த பிரச்சினை குறித்து நீங்கள் விசாரணை நடத்தி, விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #HIVBlood #PregnantWoman #TNGovernment
    தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. ஸ்டெர்லைட், மேகதாது பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. #TNGovernment #Sterlite #MekedatuDam
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 24-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

    இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.

    இந்த கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினையில் அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    மேலும் மேகதாது பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை காக்க எத்தகைய வழிமுறைகளை கடைப்பிடிப்பது என்பது குறித்தும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேகதாது குறித்த தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 தமிழர்கள் விடுதலை, சேலம்-சென்னை 8 வழிச்சாலை, விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டம் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் சட்டசபை கூட்டம் தொடங்கும். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவு எடுப்பது வழக்கம். சட்டசபை நிகழ்வை தொடங்கி வைக்க கவர்னருக்கு அமைச்சரவை மூலம் அழைப்பு அனுப்பப்படும். அதற்கான கூட்டம் தான் இது’ என்றார்.

    அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஜனவரி 3-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. #TNGovernment #Sterlite #MekedatuDam
    மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

    பதில்:- மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் இதற்கு ஒரே வழி.



    கேள்வி:- ‘பேட்ட’ பட டீசர் பற்றி...

    பதில்:- நல்லா வந்திருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

    கேள்வி:- ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிப்பீர்களா?

    பதில்:- முதலில் ‘பேட்ட’ படம் திரைக்கு வரட்டும். அது பற்றி பின்னர் பார்ப்போம்.

    கேள்வி:- ரிசர்வ் வங்கி இயக்குனர் ராஜினாமா பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- அதில் உண்மையை சரியாக தெரிஞ்சுக்காமல், என்னால் பதில் சொல்ல முடியாது.

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஓராண்டு ஆகிவிட்டதே...

    பதில்:- இதற்கு பல முறை பதில் சொல்லிவிட்டேன்.

    இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார். #MekedatuDam #TNGovernment #Rajinikanth
    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue #CMAChairman
    புதுடெல்லி:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரிலும் செயல்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான மசூத் உசைன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஆணையத்தின் பணிகள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



    “காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவரான மசூத் உசேன் பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே, அவர் ஆணைய தலைவராக நீடிப்பது பொருத்தமற்றது. மசூத் உசேன் இரட்டைப் பதவி வகிப்பதால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்க மத்திய நீர்வளத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மசூத் உசேனை தலைவராகக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் அவரது தலைமையில் இயங்கும் காவிரி ஆணையமோ, அணை கட்ட அனுமதிக்க முடியாது என கூறியது. இவ்வாறு ஒரே தலைவரின் கீழ் இரட்டை நிலைப்பாடு எடுப்பதால் காவிரி ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கும்படி தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue #CMAChairman
    ×