search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi Accident"

    • கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் (வயது 42). இவர் வியாபார நிமித்தமாக தனக்கு சொந்தமான மினி லோடு வேனில் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். வேனை தளவாய்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(32) என்பவர் ஓட்டி வந்தார்.

    லோடு வேன் இன்று அதிகாலையில் புளியங்குடி எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கனிமவளம் ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கனிமவள லாரியும், லோடு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் லோடு வேனின் முன்பக்க கேபின் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கணேஷ் குமாரும், முத்துக்குமாரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரையும் மீட்டனர். ஆனால் எனினும் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேஷ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் சிறுமி ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஸ்ரீராமுக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.

    சாம்பவர் வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவிற்கு கோவில்பட்டியை சேர்ந்த சில குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

    நேற்றும் அதேபோல் சுவாமி தரிசனம் செய்யவும், சாம்பவர் வடகரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லவும் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்த குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது அவரது மூத்த மகளான 7-ம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி (வயது 11) தனது உறவினரான ஸ்ரீராமுடன் சாம்பவர் வடகரை சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவில் அருகே டிராக்டர் ஒன்று தண்ணீர் டேங்குடன் வந்து கொண்டிருந்தது.

    எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கோவிலுக்குள் திரும்பும் போது டிராக்டர் அதன் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஸ்ரீராமுக்கு தலையில் அடிபட்டு உயிருக்கு போராடினார்.

    உடனே அவர்களது உறவினர்கள் ஓடி வந்து பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, முத்துப்பாண்டி விரைந்து சென்றனர். தொடர்ந்து ஸ்ரீராமை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுமி ராஜேஸ்வரி உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது.
    • விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    மதுரை கடைச்சந்தை பகுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ஸ்ரீராம் (வயது 32), துரைமுருகன் (31) மற்றும் கார்த்திக்குமார் (28) ஆகிய 3 பேரும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிப்பதற்காக நேற்று காரில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலையில் ஊருக்கு காரில் மீண்டும் புறப்பட்டனர்.

    அவர்கள் சென்ற கார் தென்காசி அருகே நயினாகரம் பகுதியில் சென்ற போது, உப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி உள்ளது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆய்க்குடி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ஸ்ரீராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினனரை மட்டுமல்லாது ஆனைகுளம் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    • விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த ஆனைகுளத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகன் கலையரசன்(வயது 27). கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி தான் இவருக்கு திருமணம் நடந்தது. இவர் நேற்று பணிக்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிளில் சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மொபட்டில் சாம்பவர்வடகரையை சேர்ந்த மூர்த்தி(45) என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கலையரசனின் மோட்டார்சைக்கிளும், மூர்த்தி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் கலையரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார் கலையரசனை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அவரது குடும்பத்தினனரை மட்டுமல்லாது ஆனைகுளம் கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தான நல்ல ஜெகன் சிவா (வயது 33).

    இவரது மனைவி பிரியா(27). இவர்களது மகன்கள் ராகவன் என்ற முகிலன்(4), வெற்றிவேல் நவீன் பாரதி(4). இவர்கள் 4 பேரும் சொக்கநாதன்புத்தூரில் இருந்து தென்காசி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி பால் ஏற்றும் டேங்கர் லாரி எதிரே வந்து கொண்டிருந்தது.

    கடையநல்லூரை அடுத்த மங்களாபுரம் மஸ்தான் பள்ளிவாசல் வளைவில் கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த சந்தான நல்ல ஜெகன் சிவா மற்றும் 2 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த வேம்பநல்லூர் அண்ணா காலனி 1-வது தெருவை சேர்ந்த குமார் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆவுடையானூர் பேருந்து நிலையத்தை அருகில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.
    • இந்த சாலையில் மாலை வேளைகளில் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து ஏற்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் முப்புடாதி அம்மன் கோவில் அருகே நேற்று மாலையில் 10 வயது சிறுமி ஒருவர் தனது 1 வயது தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு சாலையை கடக்க முயன்றார்.

    அப்பொழுது பொட்டல்புதூரில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது பயங்கரமாக மோதி கீழே தள்ளியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரில் சிறுமி சம்பவ இடத்தில் பேச்சு மூச்சு இன்றி மயங்கினார். 1 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக தலையில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினான். உடனடியாக அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் சிறுவனையும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மயங்கி கிடந்த சிறுமியையும் மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

    இருவருக்கும் சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் சென்று மோதிய நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் வேண்டாம் என கூறி சிறுமி தனது தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

    காயமடைந்த இருவருக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் தான் பணம் தருவதாக கூறி மோட்டார் சைக்கிள் வந்து மோதிய நபர் தனது முகவரியையும் கொடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்பகுதி மக்கள், மற்றும் தமிழன் மக்கள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:-

    ஆவுடையானூர் பேருந்து நிலையத்தை அருகில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.

    இந்த சாலையில் மாலை வேளைகளில் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து ஏற்படுகிறது.

    தொடர் விபத்துகள் நடந்து வரும் ஆவுடையானூர் பேருந்து நிலையம் மூன்று முக்கு சாலையில் உள்ள தென்வடல், கிழமேல் சாலையில் வேகத்தடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    ஆலங்குளத்தில் சகோதரி திருமணத்திற்கு வந்தவரை வழியனுப்பிவிட்டு வந்த வாலிபர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 23). இவர் ஆலங்குளத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது சகோதரி திருமணத்திற்கு வந்த நண்பர் ஒருவரை ஆலங்குளம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு விட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தெற்கு கரும்பனூர் திரும்பி உள்ளார்.

    ஆலங்குளம்- தென்காசி சாலை மலைக்கோவில் அருகே வந்த போது தென்காசியில் இருந்து செய்துங்கநல்லூர் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்து மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான செய்துங்கநல்லூரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தென்காசி:

    புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகன் (வயது 25). தொழிலாளி. கடந்த 31-ந் தேதி முருகன் தனது மோட்டார் சைக்கிளில் டி.என். புதுக்குடி- அய்யாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சமுத்திர மலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தென்காசி அருகே மின்வாரிய ஜீப் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி கீழப்பாறையடி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 27). இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் கோபி (23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தென்காசி-மதுரை சாலையில் அலங்கார் நகர் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மின்வாரியத்திற்கு சொந்தமான ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் ராஜா, கோபி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தென்காசி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய கோபியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலியான ராஜாவின் உடலை மீட்டபோலீசார் பிரேத பரிசோதனைக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×