search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the sand covering the road"

    • கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும்.
    • கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பழவேற்காடு அடுத்த கருங்காலி பகுதியில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடல் அலைகள் கரையை தாண்டி வெளியே வந்தது. அந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சில அடிதூரத்திலேயே சாலை உள்ளது. மேலும் சாலையை ஒட்டி குறைந்த உயரத்திலேயே தடுப்பு சுவர் இருப்பதால் அதனை தாண்டி கடல் நீர் சாலைக்கு வந்தது.

    இதன்காரணமாக கருங்காலி பகுதியில் உள்ள பழவேற்காடு சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் கடல் மணலால் மூடப்பட்டது. சாலையில் சுமார் 4 மீட்டர் உயரம் அளவிற்கு கடல்மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம்,காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது கடல் அலையின் சீற்றம் குறைந்து உள்ள நிலையில் பழவேற்காடு சாலையில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பழவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பள்ளப்பாடு பகுதி வரைக்கும் சென்று பின்னர் அங்கிருந்து மணலில் 1½ கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    எனவே பள்ளப்பாடு பகுதியில் கடல் நீர் சாலைக்கு வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்திடம் மனு அளித்து உள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வழக்கமாக மழை காலங்களில் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும். ஆனால் இப்போது இது ஏற்பட்டு உள்ளது. வரும் மழை காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே கருங்காலி பகுதியில் கடல் அலை சாலைக்கு வராத அளவில் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும். அல்லது கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    தற்போது சாலையில் உள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 40 கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×