என் மலர்
நீங்கள் தேடியது "Theni"
- மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
- பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.
போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் டொம்பு சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது33). எலக்ட்ரீசியன் வேைல பார்த்து வந்தார். இவரது அண்ணன் மருதமுத்து (36). இவரது மனைவி வீரலட்சுமி (32). இவரும் அதே பகுதியில் வசித்த பிரவீன் (24) என்பவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் கள்ளத்தொடர்பு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் மூலம் பேசி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.
இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதனையும் மீறி வீரலட்சுமி, பிரவீன் கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 26ந் தேதி வீரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்த பிரவீனை கணவர் மருதமுத்து கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மருதமுத்துவை தினேஷ்குமார் (27) என்பவர் பிடித்துக்கொள்ள பிரவீன் கத்தியால் குத்த முயன்றார். ஆனால் தகராறை தடுக்க சென்ற ராஜா மீது கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், பிரவீனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் உடந்தையாக இருந்த தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் உத்தரவிட்டார்.
- எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேரடி என்ற இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நின்ற நிலையில் உள்ள சிலை உள்ளது. இந்த சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்த சிலையை சுற்றி தற்காலிக கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் காந்தியின் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
கைத்தடி ஊன்றியது போல இருந்த சிலையின் பாகம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அதில் சிலையை உடைத்த நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் காந்திய ஆதரவாளர்கள் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலையை சேதப்படுத்திய கும்பலை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்ததால் கம்பத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
- பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
- திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.
பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன. திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து, பவதாரிணியின் உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
- மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர்.
- போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட ஏத்தகோவில் போலீஸ் நிலையம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் அமைந்துள்ளது. இதற்கு அடுத்து கரடு பகுதியை கடந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் நகரங்களை அடையலாம்.
இந்த போலீஸ் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியில் உள்ளனர். தேனி மாவட்டத்தின் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக ஒருசிலர் மட்டுமே பணியில் இருப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்காக தேனி வருகை தந்தார். இதனையொட்டி பாதுகாப்பு பணிக்காக பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் போலீசார் அங்கு சென்றுவிட்டனர். இதேபோல் ஏத்தகோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாரும் அங்கு சென்றுவிட்டதால் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டனர்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு போட்டால் தங்கள் குறைகளை யாரிடம் தெரிவிப்பது என கூறினர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் சமூக வளைதலங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
- 2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர்.
- நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நந்த கோபாலன் கோவில் சித்திரை திருவிழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் முடிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் என மக்கள் கூறுகின்றனர். நான் எந்த வித கருத்து கணிப்பும் நடத்தவில்லை. கடந்த 1999-ம் ஆண்டு இங்கு போட்டியிட்டதில் இருந்து 2011ம் ஆண்டு நடந்த பல தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை.
2011ம் ஆண்டுக்கு பிறகுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை அதிக அளவில் பரவ விட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கோஷ்டியினர் தான் பணம் கொடுத்தனர். அதைப் பார்த்து டோக்கன் கொடுத்த விவகாரம் தெரியவரவே அதை நான் தடுத்து நிறுத்தினேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து நான் வெற்றிபெற வில்லை.
தற்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் கொடுத்தது யார்? என்று உங்களுக்கே தெரியும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பா.ஜ.வுக்கு நல்ல மரியாதை உள்ளது. அதனால்தான் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. என் கைக்கு வரும் என்று பேசினார். அவர் படித்தவர். 3 ஆண்டுகளாக யாத்திரை நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. அழிந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசினார்.
நான் பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவி செய்துள்ளேன். மோடி மீண்டும் பிரதமராக வர இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து கேள்வி எழுப்பிய போது, கோவில் விழாவுக்கு வந்துள்ளேன். எனவே அவரைப்பற்றி பேசி டென்சனாக்கி விடாதீர்கள் என கூறினார்.
விழாவுக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், தினகரனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
- மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரெயில் நிலையம் அருகே டி.வி.கே.கே.நகரில் செல்வ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த தெருவில் மாரிச்சாமி என்பவர் தனது வீட்டு முன்பு 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று நள்ளிரவு இந்த மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.
மேலும் பெட்ரோல் டேங்க் வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கேட்டு மாரிச்சாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து கொண்டு இருந்ததால் தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஏதோ ஒரு பொருளை வீசுவது போன்றும், தீ வைப்பது போன்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது.
- அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் நுற்றாண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கொட்டக்குடி ஆற்றில் இருந்து அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோவிலுக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் உடலின் மீது கத்தி போட்டு சென்றனர்.
அதன்பின் அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித நீர்த்தங்களை ஊற்றி நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது. இதனை பக்தர்கள் மெர்சிலிர்க்க கண்டு ரசித்தனர்.
இந்த திருவிழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
- சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கூடலூர்:
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.
இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.
கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.
கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.
இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
- வனத்துறையினர் அருவியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.
அதன் காரணமாக கடந்த வாரம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.
இதனால் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் தற்போது மழை அளவு குறைந்துள்ளது. அதனால் அருவியில் நீர்வரத்து சீரானது.
இதையடுத்து நேற்று முதல் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்ததால் மயிலாடும்பாறை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல மேகமலை வனத்துறையினரும் அருவியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
- ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு மற்றும் பெயர் மாற்றம் குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தார்.
இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும். ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும், பொதுமக்களிடமும் ஆதரவு கேட்டு கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தனர்.
இன்று தேனி மாவட்டத்தில் உள்ள கள்ளர் பள்ளிகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளிக்கு விடுமுறை என கூறி வந்த மாணவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் தங்களுக்கு பள்ளி விடுமுறை என நினைத்து மாணவர்கள் உற்சாகமாக திரும்பினர். அதன்பிறகு கள்ளர் பள்ளிகளை பெயர்மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
- தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.
- வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. வட மாநிலங்களில் கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லேசான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 முதல் 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளது.