என் மலர்
நீங்கள் தேடியது "Thiruparankundram Murugan Temple"
- விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
- பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திருவிழா நாளை(திங்கட்கிழமை) வரை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற் படைவீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று "வேல்வாங்கும்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், சத்திய கிரீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்தநிலையில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து "சக்திவேல்" பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வேல் வாங்கி சகல பரிவாரங்களுடன் கோவர்த்தனாம்பிகை சன்னதியில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள நந்தியை வலம் வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது திரளாக கூடி இருந்த பக்தர்கள், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதைதொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி 6 முறை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நாளை(திங்கட்கிழமை) வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோவிலுக்குள் உள்ள மண்டபங்கள் மற்றும் சஷ்டி மண்டப வளாக பகுதியில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதமிருந்து வருகிறார்கள். இவர்களுக்காக பக்தி சினிமா, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
- கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந் தேதி வேல் வாங்குதலும் 30-ந்தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது, இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு மகாஅபிஷேகமும், சர்வஅலங்காரமும் தீப தூப, ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன்இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் காலை 9.05மணிக்கு எழுந்தருளினார்.
காலை 9.15 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டு சன்னதி தெரு கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் சட்டத்தேர் ஆடி அசைந்து வலம் வந்தது. தேரை பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
தமிழ்புத்தாண்டு தினத்திலும், கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகபெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கந்தசஷ்டியையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் முருகபெருமான் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 8-ந்தேதி மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
- 7-ந்தேதி மாலை 4.54 மணிக்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணி முதல் மாலை 6.32 மணி முடிய சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இதனால் அன்றைய தினம் கோவில் நடையானது, காலை 9 மணி அளவில் சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிவுற்ற பின் இரவு 7.31 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.
மேலும் 7-ந்தேதி பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் அன்று மாலை 4.54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.
- முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
- இந்த கோவிலில் 150 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைந்து உள்ளது.
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்". ஆனால் கோவில் வாசலில் நின்று ராஜகோபுரத்தை பார்க்க முடியாத நிலையாக கோவிலின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட சுப்பிரமணிய சுவாமி கோவிலானது திருப்பரங்குன்றத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கம்பீரமாக 150 அடி உயரத்தில் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்து உள்ளது.
அதில் நியான் ஓம் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரங்களில் ஓம் விளக்கு ஒளிருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு கோவிலின் முன்மண்டபத்தின் மேல்புறமான சாளகரத்தில் முதல் படைவீடு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருப்பரங்குன்றம் என்ற எழுத்து வடிவமும், ஓம்முருகா என்று எழுத்தும் கொண்டு எல்.இ.டி.யில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானோர் கோவிலுக்குள் செல்லும்போதும், சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலைவிட்டு வெளியே வரும் போதும் கோவில் வாசலில் நின்று தலைமேல் இரு கைகளை தூக்கி ராஜகோபுரத்தை நோக்கி வணங்குவார்கள்.
ஆனால் தற்போது கோவிலில் பெயர்பலகை வைக்கப்பட்டு இருப்பதால் கோவிலின் வாசலில் நின்று தரிசனம் செய்யும் போது ராஜகோபுரம் தெரியவில்லை. ஆகவே கோடி புண்ணியமான கோபுர தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை அடைகிறார்கள்.. கோவிலின் ராஜ கோபுரத்தின் வளாகத்தில் உயரமான இடத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி மிகுந்த பாதுகாப்புடன் ஒளிரும் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் சுரேஷ் கூறும்போது:- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு என்று வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்காக கோவில் இருக்கும் இடம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கோவில் ஸ்தானிக பட்டர்களின் கருத்து கேட்டு ஒளிரும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. கோவில் வாசலை விட்டு சற்று தூரத்தில் சன்னதி தெருவில் நின்று பார்த்தால் கோவிலின் ராஜகோபுரம் தெரியும் என்றார்.
- தீபத்திருவிழா இன்று தொடங்கி டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 5-ந்தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கி அடுத்த டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் பதினாறுகால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகின்ற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது
கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வருகின்ற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது.
பதினாறுகால் மண்டப வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- 5-ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று (திங்கட்கிழமை) பகல் 12.15 மணி முதல் 12.30 மணிக்குள்கொடியேற்றத்துடன் தொடங்கி நடக்கிறது. திருவிழா தொடர்ந்து 7-ந்தேதி வரை நடக்கிறது. அதில் 5-ந்தேதி பட்டாபிஷேகமும், 6-ந்தேதி காலையில் தேரோட்டம், மாலையில் மகாதீபம் ஏற்றுதல் நடக்கிறது.
மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் வழக்கம் போல கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 350 லிட்டர் நெய், 150 மீட்டர் கடா துணியிலான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் 3 அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.
இதனையொட்டி உழாவாரப் பணிகுழுவினர் நேற்று தாமிர கொப்பரையை சுத்தப்படுத்தி மெருகு ஏற்றி தயார்படுத்தினார்கள். மேலும் அவர்கள் கார்த்திகை திருவிழாவையொட்டி கோவில் கதவுகளையும் மெருகு ஏற்றினார்கள்.
- 6-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
- தாமிர கொப்பரை 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் 28-ந்தேதிதிருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 6-ந்தேதி மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக 3 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மற்றும் 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் நெய்யால் பதப்படுத்தப்பட்டு திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. கார்த்திகை மகாதீபம் ஏற்றுவதற்கு பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் கோவிலில் "நெய் "காணிக்கை செலுத்தலாம் என்று கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
- பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறகூடிய பங்குனி பெருவிழாவில் கிரிவல பாதையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதற்காக கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தை மாதத்தில் தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.
இதற்காக பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து கீழ ரதவீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி வழியாக தேர்வலம் வரும். அதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். இத்தகைய நிகழ்வானது காலம், காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 6-ந்தேதி திருக்கார்த்திகை நாளாகும்.
ஆகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பதினாறுகால் மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேரின் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டத்திற்கு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
- அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
- சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது.
திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனிபெருவிழா, தெப்பத்திருவிழா மற்றும் திருக்கார்த்திகை திருவிழா ஆகிய 3 திருவிழாக்களிலும் கொடியேற்றத்துடன் நடப்பது போலவே இந்த 3 திருவிழாக்களிலும் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது தனிசிறப்பு.
திருக்கார்த்திகை திருவிழாவான நேற்று வழக்கம்போல முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது.
மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் குவிகிறார்கள்.
- இன்று காலை 11.15 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணியளவில் ரதவீதிகளில் திருக்கார்த்திகை தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து தரிசனம் செய்கிறார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலை 6 மணியளவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள தீபமண்டபத்தின் நாலாபுறமும் வெள்ளை அடிக்கப்பட்டு சிவப்பு வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. மேலும் தீபத்துக்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை, 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் தயாரான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையே நேற்று திருவண்ணாமலையில் இருந்து தீப நிபுணா் குழுவினர் 4 பேர் வந்து திரியை நெய்யில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இன்று திருக்கார்த்திகை தினம் என்பதால் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்களிடையே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெரிய ரதவீதியில் கோவில் அலுவலகம் அருகே 2 பிரிவாக தடுப்பு ஏற்படுத்தி தர்ம தரிசனம் மற்றும் ரூ.100 செலுத்தக்கூடிய கட்டண சிறப்பு தரிசனம் என்று 2 வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமான பிரதான வழியில் கருப்பணசுவாமி சன்னதி அருகே கோவிலுக்குள் செல்வதற்கும், மடப்பள்ளியையொட்டி பெரிய கதவு வழியாக வெளியேறுவதற்கு உள்ளே - வெளியே என்று ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் மற்றும் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின்துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என்று தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் முதல்முறையாக மார்கழி 1 முதல் மார்கழிமாதம் முழுவதுமாக தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் கூறியதாவது:- மார்கழி மாதத்தில் 500 பக்தர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் சமைத்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதமும் சராசரி 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தற்போது பகல் 12 மணிக்கு 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கம்போல மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது நேற்று முதல் வருகிற 2023-ல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை (மார்கழி மாதம் முழுவதும்) தினமும் அதி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடைசாத்தப்படுகிறது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.