search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai Deepatri Festival"

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னர் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்கள் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் நேற்று காலையில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 1,008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜையும், தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    மேலும் ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவான நேற்று கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களும் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். விழாவையொட்டி கோவில் கலையரங்கத்தில் பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.

    இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தீபத்திருவிழாவை யொட்டியும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×