search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvaparana Procession"

    • இன்று திருவாபரண ஊர்வலம்.
    • நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக பக்தர்கள் அனைவரும் சமம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    அப்போது மேள தாளம் முழங்க, ஐயப்பனின் சரண கோஷமும் எதிரொலித்தது. எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

     பின்னர் ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து, பம்பை விளக்கு ஏற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி சென்று அன்றைய தினம் இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்கள். மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு பக்தர் குழு சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இன்று திருவாபரண ஊர்வலம்

    இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்படும். இந்த திருவாபரணம் நாளை மறுநாள் மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    ×