search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thoothukudi shooting"

    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #ThoothukudiShooting
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரை கிளையில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது, ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக என பல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அனைத்து வழக்குகளையும் சென்னைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

    மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜூலை 2-ம் தேதி பிற்பகலில் பட்டியலிட வேண்டும் என ஐகோர்ட் பதிவாளருக்கும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.#ThoothukudiShooting #SterliteProtest
    அரியலூர்:

    அரியலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பால்பாண்டி. இவர் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குறித்து இழிவான தகவல்களை பரப்பியுள்ளார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் கருத்து வெளியிட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.

    இதுகுறித்து அறிந்த அரியலூர் நகர வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து, துப்பாக்கி சூடு குறித்து இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் பால்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரியலூர் போலீசில் புகார் மனு அளித்தார்.

    ஆனால் இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரியலூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய ஆயுதப்படை போலீஸ்காரர் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் சுபா ஆகியோர், பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting #SterliteProtest
    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக உளவுத்துறையின் தோல்விக்கு உதாரணம் என்றும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந்தேதி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது, போலீசார் நடத்திய கண் மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    தூத்துக்குடி போராட்டம் குறித்து தகவலை சேகரிக்க முடியாததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தவேண்டும்.

    மே 22-ந்தேதி மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற போவதை தெரிந்து இருந்தும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை ஏனோ தானோ என்று போக்கில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கவேண்டும்.

    போலீசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி, கொலை செய்ய முயன்றதால், போலீஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு போலீசாரும் கொடூர காயம் அடையவில்லை. போலீசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.



    தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, 9 சிறப்பு தாசில்தாரர்கள், துணை தாசில்தாரர்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்து, சப்-கலெக்டர் கடந்த மே 21-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தாசில்தார் எந்த இடத்தில் பணி செய்யவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    துணைதாசில்தார் சேகர், திரேஸ்புரம், பனிமய மாதா தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பணி செய்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

    அதேபோல, மாத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் கண்ணன், 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திரேஸ்புரம் சந்திப்பில் துப்பாக்கி சூடு நடத்தவும், எஸ்.ஏ.வி. மைதானத்தில் பணியில் இருந்த மண்டல வரித்துறை அதிகாரி சந்திரன், அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்ட விரோதமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

    மே 22-ந்தேதி நடந்த கலவரத்தின்போது, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்துள்ளார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் வாய்மொழியாக பெற்ற உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. எனவே, மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கனிமொழி கூறியுள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    தூத்துக்குடியில் 18-ந்தேதி அமைதி பேரணி நடத்த அனுமதி கேட்டு டி.ஜி.பி.யிடம் திருமாவளவன், தெகலான் பாகவி ஆகியோர் மனு கொடுத்தனர். #ThoothukudiShooting #Thirumavalavan
    அடையாறு:

    சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், அடக்குமுறைக்கான ஜனநாயகசக்தி என்ற பெயரில் வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் 6 பேரை விடுதலை செய்ய வேண்டும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேல்முருகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

    பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி போராட்டத்திற்கு பிறகு பல்வேறு வழக்கு பதிவுகளும் கைது சம்பவங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது, இதுபோன்ற ஒடுக்குமுறைகளை கைவிட்டு, ஜனநாயகரீதியாக போராடுபவர்களை தண்டிக்கக்கூடாது. அவர்களுக்கான ஜனநாயக உரிமையை வழங்க வேண்டும். சிறையில் வேல்முருகனுக்கு போலீசாரால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    வருகிற 18-ந்தேதி தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தூத்துக்குடியில் அமைதி பேரணி மற்றும் இரங்கல் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #ThoothukudiShooting #Thirumavalavan
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் சடலங்கள் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடலை ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி எவ்வளவு சீக்கிரம் உடற்கூறு பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். #ThoothukudiShooting
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலோ அல்லது துப்பாக்கிச்சூடு குறித்து எந்த கருத்தும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்த முழு அறிக்கை வெளியாகாததாலே பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று அவர் சென்னையில் பேசும் போது அரசியலில் இருந்து நடிகர்கள் விலகியே இருக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி தகவல்களோ, காவல்துறை அத்துமீறல் குறித்த தகவல்களோ இருந்தால் ஜூன் 22-ம் தேதிக்குள் தரலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22-ந்தேதி நடை பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள், அதன் விளைவாக நிகழ்ந்த இழப்புகள் மற்றும் காயங்கள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகள் குறித்து விசாரிக்க உள்ளது.

    காவல் துறை தரப்பில் அத்துமீறல் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

    இதுபற்றி நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உள்ளவர்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சத்திய பிரமாண உறுதி மொழி பத்திர வடிவில் விசாரணை ஆணையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் விசாரணை ஆணையம் செயல்பட உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தூத்துக்குடி செல்கிறேன்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து விட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட உள்ளேன்.

    மறுநாள் (5-ந்தேதி) துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட முடிவு செய்துள்ளேன்.

    விசாரணை ஆணையம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் செயல்படும். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணியாக சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. #ThoothukudiShooting #sterliteProtest #UN
    நியூயார்க்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் (மே) 22-ந் தேதி போராட்டம் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர் பேரணியாக சென்றனர். அப்போது நடந்த கலவரத்தை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

    இதற்கு ஐ.நா.சபை மனித உரிமைகள் குழு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் இங்கிலாந்தில் இயங்கும் வேதாந்தா குழுமத்தின் வர்த்தக நிறுவனமாகும். மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்றவர்கள் மீது அளவுக்கு அதிகமான போலீசார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து காலதாமதமின்றி சுதந்திரமான ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசை (மத்திய அரசை) வலியுறுத்தி இருக்கிறோம்.

    வர்த்தக நிறுவனங்கள் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் போது போராட்டம் நடத்தும் உரிமை மக்களுக்கு உண்டு. ஐ.நா.வின் வழி காட்டுதல் கொள்கைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.



    அனைத்து தொழில் நிறுவனங்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க இந்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அர்த்தமுள்ள உரிய பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்திய சுற்று சூழல் விதிகளுக்குட்பட்டு நடப்பதாக முழு உத்தரவாதம் அளித்த பிறகே ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #sterliteProtest #UN
    ×