என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger"

    • கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார்.
    • ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    மனிதர்கள்-விலங்குகள் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் புலி ஒன்று உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    அதில், வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வரிப்புலி ஒன்று சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. இதை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை ராஜ்லக்கானி என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் புலியையும், மனிதனையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளனர்.

    வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

    ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

    இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

    பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

    அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ளனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ள னர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்பட்ட புலி கால்தட ங்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. முக்காலேகர் பகுதி அதிக குடியிருப்புகளை கொண்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பிரச்சினைக்கு வனத்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிமாலி நகரில் இருந்து சில கி.மீ தொலைவில் புலி நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இங்கு உலாவி வரும் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரி பகுதியில் வனப்பகுதிக்கு அருகே விவசாய தோட்டங்கள் இருக்கும் இடத்தில் புலி நடமாட்டம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அதன்பேரில் புலி நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் கூண்டுகளை வைத்தனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுல்தான் பத்தேரி அருகே உள்ள கோளரட்டுகுன்று மூலம்காவு பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை புலி சிக்கியது.

    புலி சிக்கிய அந்த கூண்டுக்குள் ஆடு ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடிப்பதற்கு முயன்றபோது கூண்டுக்குள் புலி சிக்கியது. இது குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கூண்டில் சிக்கிய புலியை பார்த்தனர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'கூண்டில் சிக்கிய புலியை கால்நடை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புலி ஆரோக்கியமாக இருந்தால் காட்டுக்குள் விடப்படும். காயம் ஏற்பட்டிருந்தால் சுல்தான் பத்தேரியில் உள்ள கால்நடை நோய் தடுப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

    புலி சிக்கியதை தொடர்ந்து சுல்தான் பத்தேரி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதைபோல் வடக்கு வயநாடு வனச்சரகத்திற்குட்பட்ட திருநெல்லி பகுதியில் மற்றொரு புலி அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை பிடிக்கவும் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும்.
    • ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. இறந்து கிடந்த புலிகளின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டதால் பலியாகவில்லை என்று வனத்துறையினர் கருதுகின்றனர்.

    அவலாஞ்சி வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடக்கும் 2 புலிகளுக்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டிதலின்படி இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    பிரேத பரிசோதனைகளின் முடிவில் புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன்பின்னரே புலிகள் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி வனப்பகுதியில் புலிகள் சாவு தொடர்கதையாக நீடித்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. அங்கு உள்ள மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி செத்து கிடந்தது.

    நடுவட்டம் தேயிலை தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்த நிலையில் அவலாஞ்சி வனப்பகுதியில் தற்போது மேலும் 2 புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 புலிகள் பலியான சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அவர்கள் காட்டு விலங்குகளை கொன்று அவற்றை ஊருக்குள் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். புலியின் தோல், பற்கள் ஆகியவை மதிப்புவாய்ந்தது. எனவே வனவிலங்கு வேட்டைக்காரர்கள் வியாபார நோக்கத்துக்காக புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது.

    புலிகள் இறப்பு தொட ர்பாக உண்மை நிலையை கண்டறிய வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி வனக்கோட்ட தலைமையிட மாவட்ட அலுவலர் தேவராஜ் தலைமையில் ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் (பொறுப்பு) சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள், வனக்கா ப்பாளர், வனகாவலர்கள் என 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் சம்பவ இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது எப்படி இறந்தது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    • நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேரு நகர் பாலத்தில் இருந்த அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனப்பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாக கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் அவை பெண் புலிகள் என்பதும், உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

    மாட்டின் மீது விஷம் தடவப்பட்டு அதன் மாமிசத்தை புலி உட்கொண்டதால் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

    இதையடுத்து, புலிகளை கொன்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், உதகை அருகே அவலாஞ்சி அணை பகுதியில் 2 புலிகள் இறந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் சேகர் (58) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    சேகரிடம் விசாரணை நடத்தியதில், அவரது மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொன்றதாக தெரியவந்துள்ளது.

    • மனித உயிர் பலி போவதற்குள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை
    • கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதாக வனத்துறை தகவல்

    ஊட்டி,

    கூடலூர் அடுத்த தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி மாடு இறந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்திருந்து ஆய்வு மேற்கொண்டார்,

    அப்போது அங்கு வசிக்கும் கிராமத்தினர், மனித உயிர் பலி போவதற்க்குள் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், பசுவின் உரிமையாளருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கூடலூர் தாலுக்கா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்- 1 எஸ்டேட் பகுதியில் மாமிசஉண்ணி தாக்கி கால்நடை உயிரிழந்து இருப்பதால் அந்த பகுதிகளில் கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

    • உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம் கல்லாபுரம் சுற்று கழுதகட்டி ஓடை பகுதியில் இன்று காலை புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு 9வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் காயங்கள் இருந்தது. அந்த புலி எப்படி இறந்தது என்று தெரியவில்லை. உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக வனத்துறையினர் உயிரிழந்த புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2 மாதத்தில் 11 புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புலிகள் இறப்பு குறித்து தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி சென்றனர். இந்தநிலையில் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மற்றொரு புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே உள்ள நஞ்சன் கூடு தாலுகா பல்லூர் ஹுண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்னம்மா (50). இவர் பந்திப்பூர் தேசிய பூங்கா அருகே உள்ள தனது தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு பதுக்கி இருந்த ஒரு புலி திடீரென ரத்னம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் புலியிடம் இருந்து ரத்னம்மா தப்பிக்க முயன்றார். ஆனாலும் புலி விடாமல் தாக்கியதில் ரத்னம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரத்னம்மாளின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஹெடியாலாவில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    போராட்டம் நடத்திய பொதுமக்கள் கூறும் போது புலி தாக்கி ரத்னம்மா இறந்த இடத்துக்கு வனத்துறையினர் வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.மேலும் அந்த புலியை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர். 

    • விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் பிரஜீஷ்(வயது36). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு அவற்றிற்கு புல் அறுப்பதற்கு சென்ற போது, புலி அவரை அடித்துக் கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவசாயியை கொன்று சாப்பிட்ட புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விவசாயியை வேட்டையாடிய புலியை சுட்டுக்கொல்ல கேரள அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து விவசாயியை கொன்ற புலியை தேடும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். விவசாயி கொல்லப்பட்ட பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் புலியை தேடினர். மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் அந்த புலி சிக்கவில்லை.

    இந்நிலையில் புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை தள்ளுபடி செய்தது. மனிதனை கொன்ற புலியை சுட்டுக்கொல்லுவது தவறு இல்லை என்று கருத்து கூறிய ஐகோர்ட்டு, வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்நிலையில் விவசாயியை கொன்ற புலியை பிடிக்க 80 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். வனத்துறையைச் சேர்ந்த அவர்கள் புலி நடமாட்டம் கண்டறியப்பட்ட இடங்க ளில் 5-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புலி சிக்குவதற்காக பல இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதனையும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருப்பதால் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி வருகின்றனர். 

    • புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.
    • புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள மூடக்கொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரஜீஷ் (வயது36) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புல் அறுக்க வனத்துறையொட்டி உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அவரை ஒரு புலி அடித்து கொன்று சாப்பிட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது மட்டுமின்றி, பீதியையும் ஏற்படுத்தியது. விவசாயியை கொன்று தின்ற புலியை சுட்டு கொல்ல அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த புலியை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் களம் இறங்கினர்.

    புலி நடமாட்டத்தை கண்டறிய வனப்பகுதியில் பல இடங்களில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. மேலும் புலியை சிக்க வைக்க கூண்டுகளும் அமைக்கப்பட்டன. புலியை தேடும் பணியில் 80 பேர் அடங்கிய வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் இதுவரை அந்த புலி சிக்கவில்லை. வனத்துறை குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயியை பிரஜீசை கொன்ற புலி 13 வயதுடைய ஆண் புலி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த புலியைப்பற்றிய தகவல்களின் அடிப்படையில் அதனை பிடிக்க வனத்துறையினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

    விவசாயியை கொன்ற ஆள்கொல்லி புலியை கண்டுபிடிக்கும் பணிக்காக திணைக்களம் முத்தங்கா பகுதியில் இருந்து விக்ரம் மற்றும் பரத் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை கொண்டு புலியை தேடும் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது புலி தென்பட்டால் மயக்க மருந்து செலுத்தி புலியை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×