என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tirupati temple"
- நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ், விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. சிபிஐ இயக்குனரின் மேற்பார்வையில் சிறப்பு குழு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. சி.பி.ஐ.யைச் சேர்ந்த 3 அதிகாரிகள்-ஐதராபாத் இணை இயக்குநர் வீரேஷ் பிரபு மற்றும் விசாகப்பட்டினம் சரக எஸ்.பி. ரம்பா முரளி மற்றும் 2 மாநில அதிகாரிகள், குண்டூர் சரக ஐ.ஜி சர்வஸ்ரேஷ் திரிபாதி மற்றும் விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி கோபிநாத் ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பு கூடம் மற்றும் ஏ.ஆர்.டெய்ரி உணவுப் பொருட்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர்.
லட்டு தயாரிப்பதற்கான நெய் டெண்டர் செயல்முறை, நெய் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது.
- நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 4 கிலோ மீட்டர் தூரமுள்ள புரோகிதர் சங்க கட்டிடத்தைத் தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனது. ரூ.300 டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரம் ஆனது. தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் காலை சிற்றுண்டி, மதியம் அன்னப்பிரசாதம், பால், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். இதுதவிர திருமலையில் உள்ள கல்யாண கட்டா, தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள், லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 785 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 38 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
- திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல் பருமன் உள்ள பக்தர்களும், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களும் திருப்பதி மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல. திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
இதனால் பாதயாத்திரை செல்வது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அது மேலும் மோசமாக்கும் என்பதால் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தீராத நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் தங்கள் அன்றாட மருந்துகளை எடுத்துச்செல்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அலிபிரி மலைப்பாதையில் 1500 படியில் மற்றும் காளி கோபுரம் மற்றும் பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளதால் அங்கு முதலுதவி பெறலாம். திருப்பதியில் உள்ள அஷ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ வசதி உள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர காலங்களில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி உள்ளதால் அதனை பயன்படுத்தி கொள்ளவும்.
திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 64,447 பேர் சாமி தரிசனம் செய்தனர். 25, 555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஹெலிகாப்டர் பறந்த நிகழ்விற்கு ஆச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திரப்படி கருவறையின் உச்சியின் மீது விமானங்கள், ஹெலிகாப்டர் பறக்க கூடாது என விதிமுறை உள்ளது. இதனால் திருப்பதி மலையில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ போட்டோ எடுக்கவும் திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அதிக சத்தத்துடன் ஏழுமலையான் கோவில் கருவறை மீது பறந்தது. ஹெலிகாப்டர் பறந்த நிகழ்விற்கு ஆச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.
- தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.
- ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வததற்காக பெங்களூருவைச் சேர்ந்த சாய்குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருடன் 'விஐபி பிரேக்' தரிசன வரிசையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் வைத்திருந்த தரிசன டிக்கெட்டை வாங்கி பார்த்த ஊழியர்களுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த விஜிலென்ஸ் அதிகாரிகள், இது பற்றி சாய்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர சட்டசபை மேலவை துணைத்தலைவர் மாயண்ணா ஜாகியா கானம் என்பவர் பரிந்துரை அடிப்படையில், அவரது செய்தி தொடர்பாளர் கிருஷ்ணதேஜா, மற்றொரு நபரான சந்திர சேகர் ஆகியோர், தங்களிடம் 65 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் வாங்கி கொடுத்ததாக சாய் குமார் தெரிவித்தார்.
இதுபற்றி தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின்பேரில், மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் உட்பட 3 பேர் மீதும் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சட்ட சபை மேல்சபை துணைத்தலைவர் ஜாகியா கானம் பொருளாதார ரீதியாக பலனடைந்தாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவருடைய பரிந்துரை அடிப்படையில் இதற்கு முன்னர் 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்ட பக்தர்களிடம் விசாரணை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.
- மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமலை:
கனமழை எச்சரிக்கையால் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை இன்று முதல் மூடப்படுகிறது, என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் காணொலி காட்சி மூலம் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
திருப்பதி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை வரையிலும், அதன்பிறகு அடுத்த 36 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவஸ்தான முக்கியத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பிற துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்கும், ஒவ்வொரு துறையின் தயார் நிலை குறித்தும் விரிவாகக் கேட்கப்பட்டது.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள கோகர்ப்பம் சர்க்கிளில் இருந்து தொடங்கும் பாபவிநாசனம் சாலையில் பக்தர்களின் நுழைவை தேவஸ்தானம் ஏற்கனவே மூடி தடுத்துள்ளது.
இந்தநிலையில் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று (வியாழக்கிழமை) முதல் முழுமையாக மூடப்படுகிறது. சூறாவளி காற்று, மழை குறைந்த பிறகு இந்த நடைபாதையில் பக்தர்கள் திருமலைக்கு நடந்து வர நடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் ஆலோசனை செய்யப்படும்.
திருப்பதி மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும், பாறைகள் உருண்டு கீழே விழுந்தாலும் அவற்றை அகற்ற, தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு போதுமான எரிபொருளை (டீசல்) வைத்திருப்பது குறித்து பொறியாளர் பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவக் கருவிகள், ஆம்புலன்சுகள், மருந்து, மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை நிலவரம் குறித்து பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க எஸ்.வி.பி.சி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவஸ்தான போக்குவரத்துப் பிரிவு பொது மேலாளர், பறக்கும்படை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி, மருத்துவக் கண்காணிப்பாளர் (சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்), என்ஜினீயர்கள் உள்பட 15 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைப் பதிலளிப்புப் படைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
காணொலி காட்சி நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மன், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர், என்ஜினீயர் சத்யநாராயணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
- சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
திருமலை:
திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 19-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடு, அவற்றின் தரிசன ஸ்லாட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள்.
- திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் நிறைய ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பக்தர்களுக்கு ஏற்றதாக இங்குள்ள உணவுகள் இருப்பதில்லை காலை, பகல் என எப்போது சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக பக்தர்களை திருப்பதி மலையில் உள்ள வீட்டு இட்லி கடைகள் வெகுவாக கவர்ந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பாலாஜி காலனி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வீடுகளின் முன்பு இட்லி கடைகள் வைத்துள்ளனர். காலையில் இட்லி, தோசை, பூரி, வடை என சுடச்சுட கிடைக்கிறது.
தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள். ஒவ்வொரு கடைகள் முன்பும் 50-க்கும் மேற்பட்டோர் இட்லிக்காக காத்திருக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன. ருசியாகவும் இருக்கிறது. இந்த கடைகளை கோவில் அருகில் திறக்கவும் தேவஸ்தானம் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
- கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது.
திருமலை:
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோவில். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. விழாவில் மலையப்ப சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, கடந்த 8-ந் தேதி இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி தரிசனம் செய்ய மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் முதல் 8 நாட்களில் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும் சிறிய லட்டுகள் 30 லட்சம் எண்ணிக்கையில் விற்பனையானது. கடந்த ஆண்டும் இதே எண்ணிக்கையில் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல், உண்டியல் மூலம் ரூ.26 கோடி வசூல் ஆனது. கடந்த ஆண்டைவிட ரூ.2 கோடி அதிகம் வசூலாகி உள்ளது. இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் பக்தர்கள் நலனுக்காக ஆந்திர அரசு பஸ்கள் 2 ஆயிரத்து 800 நடை இயக்கப்பட்டது.
திருமலையில் விற்பனை செய்யப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இருப்பினும், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும், லட்டு விற்பனையும் குறையவில்லை என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.
- பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
- முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வாஸ்திரத்தை கொண்டு வர உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருடைய மனைவியுடன் பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது. தங்கக்கொடி மரத்தில் இருந்த வளையம் கழன்று விழுந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- ஆந்திரா அரசு சார்பில் நாளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு வழங்க உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கோலாகலமாக தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு நேற்று கருடன் சின்னம் பொரித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் ஒப்படைத்தனர்.
இந்த கயிறு கொடி போன்றவை ரங்கநாயக மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் வைக்கப்பட்டது.
பிரம்மோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை அங்குரார்ப்பணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து விஸ்வக்சேனர் 4 மாட வீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை பார்வையிடும் வைபவம் நடைபெறுகிறது. நாளை மாலை 3 மணி முதல் 5 மணிக்குள் கொடியேற்று விழா நடக்கிறது.
இதனை தொடர்ந்து இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதனை தொடர்ந்து 9 நாட்கள் பல்வேறு வாகன உற்சவ சேவை நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பதி மலையில் முக்கிய இடங்கள் மற்றும் மாடவீதிகளிலும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா அரசு சார்பில் நாளை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு வழங்க உள்ளார்.
இதற்காக அவர் நாளை திருப்பதி வருகிறார். கோவிலில் பட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் அவர் சமர்ப்பிக்கிறார்.
இரவு திருமலையில் தங்கும் அவர் நாளை மறுநாள் காலை கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் தொடங்குவதால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் மின் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் தேவஸ்தான நிர்வாக அலுவலகம் உட்பட முக்கிய கூட்டுச் சாலைகளிலும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
அலிப்பிரி நுழைவு வாயில் உட்பட மலைப்பாதை நடைபாதை மாடவீதி கோவில் கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் அலங்காரத் தோரணங்கள் கட் அவுட்டுகள் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. இதனால் திருப்பதி மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் 12-ந் தேதி வரை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
- ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை:
திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு நாளை (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையடுத்து, ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* காலை 8 முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
* பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.
* திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* திருக்குடை ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* திருப்பதி திருக்குடை ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்