என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppur"

    • போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
    • ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
    • அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.

    அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் பணியாற்ற வெளிமாவட்டம் மற்றும் வடமாநில தொழிலாளிகள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு கொண்டாட திருப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்ளை தடுக்க மாநகர போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகன சோதனையின்போது வாகன ஓட்டுனர் பெயர், வாகன எண் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும் இருசக்கர வாகனம், தலைக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தனர்.

    • கடுமையான சூறைக்காற்று வீசியது.
    • கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு.

    பல்லடம்:

    திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செய்த மழையின் போது மங்களம் சாலை, இடுவாய், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான சூறைக்காற்று வீசியது.

    இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பங்களும் சாய்ந்த தால் சின்ன ஆண்டி பாளையம், குளத்துபுதூர், இடுவாய் பல்லடத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார வினியோகம் தடைப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தவித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியிலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மழை காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பூர் அம்மா பாளையம் பாறைக்குழி பகுதியில் உள்ள தகர கொட்டகையில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ் என்பவர் தங்கி இருந்தார்.

    மழையின் போது மேற்கூரை தகரம் மற்றும் கல் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. பல்லடம் மங்கலம் ரோடு சிதம்பரனார் வீதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்லடம் நகரில் மின்தடை ஏற்பட்டது.

    பல்லடம் மகாலட்சுமி நகர் அருகே பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.இதே போல காமநாய க்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    பல்லடம் அருகே பச்சாங்காட்டுபாளையம் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மதுரையை சேர்ந்த செல்லையா என்பவரது மகன் வினோத் (40), ரோட்டில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த மின்சார வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு ள்ளனர்.

    • பனியன் நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ், ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான பனியன் நிறுவனமானது 35,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பேப்ரிக், பேக்கிங், ஸ்டிச்சிங் என பல்வேறு பிரிவுகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று இரவு பணி முடிந்து நிறுவனத்தை மூடி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை பனியன் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்து பனியன் நிறுவன காவலாளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் பின்னலாடை எந்திரங்கள் மற்றும் துணிகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திருப்பூர் மாநகர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கஞ்சம்பாளையம் பிரிவு பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து குடோனை பூட்டி விட்டு அண்ணாதுரை மற்றும் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    அதிகாலையில் குடோனுக்குள் இருந்து புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    குடோன் முழுவதும் பனியன் கழிவு துணிகள் இருந்ததால், அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது
    • கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-

    ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பினரும் உதவி வருகிறார்கள். மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பரிசோதனைகள் வழங்கும் பணிகளை பெண்கள் தொழில்முனைவோர் துணை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு மூலமாக 5 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

    உலகளாவிய காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் 3 நகரங்களில் காற்று மாசுபாடு குறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் திருப்பூர் முதன்மை இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வின்படி வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலமாக திருப்பூரில் வெப்பநிலை கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தி வரத்து குறைவு மற்றும் நூலுக்கான தேவை அதிகரிப்பை அடுத்து நூல் விலை உயர்வு
    • ரூ.220 முதல் ரூ.380 வரை விற்பனையாகி வந்த நூலின் விலை அனைத்து ரகங்களிலும் ரூ.3 அதிகரிப்பு

    திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி கிலோவுக்கு 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.178, 16-ம் நம்பர் ரூ.188, 20-ம் நம்பர் ரூ.246, 24-ம் நம்பர் ரூ.258, 30-ம் நம்பர் ரூ.268, 34-ம் நம்பர் ரூ.286, 40-ம் நம்பர் ரூ.306, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.243, 24-ம் நம்பர் ரூ. 253, 30-ம் நம்பர் ரூ.263, 34-ம் நம்பர் ரூ. 276, 40-ம் நம்பர் ரூ.296-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றம் இல்லாமல் சீராக இருந்தது. இந்நிலையில் திடீரென நூல் விலை ரூ.3 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

    • 10 நாட்களுக்கு முன்பாக 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.
    • குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் , பில்டிங் காண்ட்ராக்டர். இவர் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறார். 4 வீடுகள் வைத்திருக்கும் இவர் முதல் 2 வீடுகளில் தனது குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

    மீதமுள்ள 2 வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் குடும்பத்துடன் ஒருவர் கடைசி வீட்டிற்கு குடிவந்துள்ளார்.10 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மற்றும் மதுரையை சேர்ந்த சக்திவேல் என்ற 2 வாலிபர்கள் குடிவந்துள்ளனர்.

    பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் இவர்களுக்கும் அருகில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே லேசான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் பேச்சுவார்த்தை நடத்திய வீட்டின் உரிமையாளர் சேகர், குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணிய வாலிபர்கள் இருவரும் நேற்று இரவு மது போதையில் அரிவாளுடன் சேகரின் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து டி.வி., சின்டெக்ஸ் டேங்க், கதவு ஜன்னல்களை பட்டா கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். அப்போது சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர்.

    இதுகுறித்து சேகர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அலெக்ஸ் மற்றும் சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வாடகைக்கு குடி வந்த 10-ம் நாள் உரிமையாளர் வீட்டை பட்டா கத்தி கொண்டு இளைஞர்கள் சூறையாடிய சம்பவத்தின் சிசிடிவி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 25). இவர் அதே பகுதியில் தங்கி குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்றதுடன், அங்கிருந்த அரவிந்தனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகேசன் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் ரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அப்போது இருவரையும் அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி , ஆகாஷ் , ஸ்டீபன் ராஜ், ஆதி, லலித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    அரவிந்தன் இடுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரவிந்தனை கொலை செய்யும் நோக்கில் இது போன்ற செயலில் 5 பேர் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    • உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
    • பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். 

    • கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு.
    • உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம்

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன. இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விசைத்தறி கூடங்கள் அனைத்து மூடப்பட்டு அந்த பகுதியே தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடியது. கடந்த 2 நாட்களாக ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இன்று 3-வது நாளாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகளும் தேக்கம் அடையும் அபாயம் உருவாகியுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு உடனடியாக தலையிட்டு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
    • 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இதில் எந்தவித தீர்வும் எட்டப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

    இதனையொட்டி கோவை சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே வெறிச்சோடி கிடக்கிறது.

    கோவை, திருப்பூ மாவட்டங்களில் உள்ள 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி கூடங்களின் முன்பு இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் ஜவுளி உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு மேலாக வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அத்துடன் இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் அடைந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் சங்கத்தின் தலைவர் பூபதி கூறியதாவது:-

    விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் முதல்கட்டமாக இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினைகளில் தலையிட்டு விசைத்தறியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×