என் மலர்
நீங்கள் தேடியது "TN Congress"
- 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேசம் காப்போம் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் நடத்துவது, காங்கிரஸ் மைதானத்தில் 4-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ள கட்சி பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.
கூட்டத்தில் கட்சி பிரச்சனைகளையும் மாவட்ட தலைவர்கள் கிளப்பினார்கள். பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் பேசும் போது, கட்சி அமைப்பு ரீதியாக நமக்கு 72 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட வேண்டாமா? தி.மு.க. கூட்டணியில் குறைந்த பட்சம் 60 தொகுதிகளையாவது கேட்டு பெற வேண்டும். இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரும் அணியில் சேர வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கேட்க கூட கட்சியினருக்கு உரிமை இல்லையா? அதற்காக கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என்றார்.
இதே போல் மேலும் சில மாவட்ட தலைவர்களும் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டும். ஆட்சியின் தவறுகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ் பேசும் போது, எம்.எல்.ஏ. பதவி மீது அனைவருக்கும் ஆசை இருக்கலாம். அதற்கு நேரம் வரும் போது பேசிக் கொள்ளலாம். இப்போது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். கிராம கமிட்டிகள் அமைப்பதில் சென்னையில் இன்னும் 2 மாவட்ட தலைவர்கள் பட்டியல் தரவில்லை என்றார்.
இதற்கு மாவட்ட தலைவர் திரவியம் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார். மற்றொரு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் மேலிட பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு இதுவரை அவரது முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இறுதியாக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசும் போது, என் அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கட்சியினர் தங்கள் பிரச்சனைகளை என்னிடம் நேரிலேயே தெரிவிக்கலாம் என்றார்.
- தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.
நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.
எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
- பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை:
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.
மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.
அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.
நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.
நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.
பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-
மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
- முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.
எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.
புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.
கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.
கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.
- எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது.
- அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியலில் வலிமை மிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது.
பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை புரிந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறுவதற்கு அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஐந்து விசைப்படகுகளை பறிமுதல் செய்து 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை ராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 26ம் தேதி 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.
அதில் 3 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 60 லட்சமும், மேலும் 16 மீனவர்களுக்கு ரூ 50,000 ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் கைது இருக்காது, படகுகள் பறிமுதல் இருக்காது என்று 2014 இல் கடல் தாமரை மாநாடு நடத்தி நீலிக்கண்ணீர் வடித்த பாஜகவினர் ஆட்சியில் தான் இத்தகைய தொடர் கைதுகள் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 வருடம் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு 140 கோடி மக்களை ஆட்சி செய்கிற பிரதமர் மோடி வெறும் 2 கோடி மக்களை ஆட்சி செய்கிற சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணமுடியவில்லை என்றால் ஒன்றிய பாஜக அரசின் கையாளாக தனத்தை தான் வெளிப்படுத்துகிறது.
கடந்த காலங்களில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட முற்றுகை நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் பகுதி தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதை உணர்ந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் அனுமதி கோரினார்.
இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் 32 விசை படகுகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு இந்திய அரசு அனுப்பியது.
அதை இலங்கை அரசு தடுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 6 இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக 25 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை எல்லையை மீறி வான் வழியாக யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்கிற தமிழர்களுக்கு தலைவர் ராஜீவ் காந்தி வழங்கியதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நடவடிக்கையை ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது.
தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய இலங்கை கூட்டுப் பணிக்குழு கடந்த நவம்பர் 5, 2016 அன்று அமைக்கப்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களுக்கு ஒருமுறை அக்குழு கூடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை அந்த கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 6 முறை தான் அந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-க்கு பிறகு கூட்டுப்பணிக்குழு கூட்டப்படவே இல்லை. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசுக்கு மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. இக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
எனவே, நடப்பாண்டில் மட்டும் 50 நாட்களில் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
- கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.
மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
- தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்.
- ஆகஸ்ட் 9 முதல் 14 வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ள முடிவு.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.
இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP