என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN fishermen"

    • கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜ்குமார் (வயது40) என்பவரது விசைப்படகில் அவருடன் தங்கவேல் (48), ஆறுமுகம் (47), பிரபு (42), மணிவேல் (50), மதன் (27) மற்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள், கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று காலை கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக துப்பாக்கி முனையில் 11 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவகிராம பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
    • மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
    • ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.

    இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.

    இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
    • எல்லைதாண்டி மீன்பிடித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த மாதம் 22-ந்தேதி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதோ அடுத்தடுத்த சிறைப்பிடிப்பு சம்பவங்களும், தாக்குதலும் தான்.

    முதன்முறையாக கடந்த மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 15 பேரை இன்று இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.

    ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கியராஜ் (45), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன் (40), பிரபு (36), மெல்டன் (45) ஆகிய 8 பேரும் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ் (44), கார்ச் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (25), ஜான் (30), ஜனகர் (32) ஆகிய 7 பேர் என மொத்தம் 15 பேர் மீன்துறை அலுவலக அனுமதியுடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அதிகவேகமாக வந்தது.

    அவர்களை பார்த்ததும் ராமேசுவரம் மீனவர்கள் அச்சத்தில் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதற்குள் அந்த 2 படகுகளையும் சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்ட தோடு, எல்லை தாண்டி வந்ததாக கூறி படகில் இருந்த 15 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களையும், மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாளை இலங்கை சிறையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்ற விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், இனிமேலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை ஒட்டிய இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்த சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    இது தொடர்பாக இந்திய-இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • விடுதலையான மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ந்தேதி கிறிஸ்து (வயது40), ஆரோக்கிய ராஜ்(45), ஜெர்மஸ்(33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன்(40), பிரபு(36), மெல்டன்(45) ஆகிய 8 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதேபோல் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ்(44), கார்ச்(30), அந்தோணி(45), பிரதீபன்(35), ஈசாக்(25), ஜான்(30), ஜனகர்(32) ஆகிய 7 மீனவர்களும் அன்றைய தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மேற்கண்ட 15 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் மீனவர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென தமிழக முதலமைச்சரும் கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களும் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜபதிபாலன் 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த முறை விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து கைது செய்யப்பட்டால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.

    • கடந்த 21-ந்தேதி 15 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்
    • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் காலம் காலமாய் தொடர்ந்து வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது, தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை அபகரிப் பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்போது சிறைப்பிடிக்கப்படும் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளையும் இலங்கைக்கு கொண்டு நாட்டுடமையாக்குவது நடந்து வருகிறது. இதனால் படகுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் தமிழக மீனவர்கள் மாற்று தொழிலை தேட தொடங்கி விட்டனர். இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நிரந்த தீர்வு எட்டப்படாமலேயே இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மேலும் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 200 விசைப்படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று பாம்பன் மீனவர்களின் படகுகளை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. இதைப் பார்த்து அச்சம் அடைந்த மீனவர்கள், நமது எல்லையில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குவார்கள் என்று பயந்தனர். மேலும் அவர்கள் அவர்கள் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனால் அதற்குள் 2 படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் வழக்கம்போல் பாம்பன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களை அபகரித்து கொண்டதோடு, கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் தங்களது ரோந்து கப்பலில் கட்டி இழுத்து சென்றனர். பின்னர் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு மீனவர்களை அழைத்து சென்று அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பின்னரே தெரியவரும்.

    கடந்த 8-ந்தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்த ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த 15 மீனவர்களை 9-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் ரணில் விக்கிரமசிங்கேயின் இந்திய பயணத்தை அடிப்படையாக கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    தற்போது மீண்டும் 9 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஒவ்வொரு முறையில் மீனவர்கள் கைதாகும்போது அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. நிரந்தர தீர்வு கிடைக்காமல் எப்போதும் துயர வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையின் தொல்லையின்றி மீன்பிடிக்க செல்வது எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
    • வாகனம் மூலம் 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி அதிகாலையில், கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் அவர்கள் அனைவரும் இன்று காலை கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் வாகனம் மூலம் 9 மீனவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாகும். இதில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் மீன்பிடி தொழிலில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த துறைமுகம் மூலமாக தினமும் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் என சுமார் 1 லட்சம் பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    மேலும் நாள்தோறும் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறுகிறது. இங்கு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து மட்டும் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக இந்த மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கச்சத்தீவை சார்ந்த பகுதியை நம்பியே உள்ளது. வாரத்திற்கு மூன்று நாட்கள் என மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு நாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றால் பெரிய விசைப்படகுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். சிறிய படகுகள் என்றால் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.

    மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய், நண்டு, மற்ற மீன்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தால் மட் டுமே தொடர்ந்து கட லுக்கு மீன்பிக்க செல்ல முடியும். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையின் தாக்குதல், விரட்டியடிப்பு மற்றும் கைது செய்யப்படும் நடவடிக்கை உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு அருகே கடற்படை கப்பல் களை சுற்றி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து படகுகளை இயக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
    • 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்றபோது ஒரு படகு, 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதே போன்று புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள், 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 27-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்பாணம் சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது, படகுகளை விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கையால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தலைமன்னார், காங்கேசம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளது.

    இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடியது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையில் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நடக்கும் இதுபோன்று நடக்கும் வேலைநிறுத்தத்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்களுடன் 5 படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சிறைபிடிப்பு தொடர்பாக இன்று ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று முதல் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. மேலும் வருகிற 18-ந் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ×