என் மலர்
நீங்கள் தேடியது "TN Minister"
- எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
- மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
- முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் என்னை ரிமாண்ட் செய்யட்டும்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடும் போராட்டத்திலும் ஈடுபடப் போகிறோம்.
சட்டத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை. அமைச்சர் ரகுபதி மீது சொத்து குவிப்பு வழக்க நிலுவையில் உள்ளது.
முதல்வரை A1 என்று கூறிய விவகாரத்தில் தைரியமிருந்தால் எனு்னை ரிமாண்ட் செய்யட்டும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்.
இவ்வாறு கூறினார்.
- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- வேலை தேடி சென்று இன்னல்களுக்கு ஆளானவர்களை அரசு மீட்டு வருகிறது.
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;-
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, ராமச்சந்திரன் சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அங்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
- இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
விழுப்புரம்:
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார்.
தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது.
நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.
ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார்.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும்
மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
- வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
- குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
சென்னை:
தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை.
* சோதனைகளை எதிர்கொள்வது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல.
* எனது சகோதரர் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி அதிகாரிகள் உள்ளே சென்ற வீடியோ எனக்கு வந்துள்ளது, அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
* எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தரப்படும்"
* வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
* குடும்ப உறுப்பினர்கள் பெயரில் புதிதாக எந்த சொத்தும் வாங்கவில்லை.
* இருக்கின்ற சொத்துக்களே போதுமானது, புதிய சொத்துக்கள் தேவையில்லை.
* சோதனைக்கு பிறகு தவறை சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்து கொள்ளவும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, செந்தில் பாலாஜி சந்தித்தார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.
பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை.
- உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
UPA அரசில் திமுக அங்கம் வகித்த போது, கனிம வளங்களை ஏலம் விடாமல், தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளை அடிக்கப்பட்டது மற்றும் UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது கனிமச் சுரங்கங்களை அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமம் வழங்கினார்கள்.
NDA ஆட்சியில் கனிம வள உரிமங்கள் ஏலமுறையில் விடப்படும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வந்து, கனிம வள ஊழலை தடுக்க ஏலமுறையை ஆதரித்துதான் திரு. தம்பிதுரை அவர்கள் பேசி உள்ளார். தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி
தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. இந்த கனிம வள திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, திமுக M.P-க்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை மு.க. ஸ்டாலின் 'X' வலைதளத்தில் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது. கேவலமானது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
- தமிழக ஆளுநர் அவருடைய ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க கூடாது என்றார்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை, சீர்குலைக்க ஆளுநர் தொடர்ந்து குறுக்கீடு செய்கிறார் என
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய தேர்வுக் குழுவில் 3 நபர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், நாங்கள் முறையாக, சரியாக அரசின் விதிப்படியும், பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் தான் தேர்வுக் குழுவை நியமித்தோம்.
மாறாக, தன்னுடைய எல்லையின் அளவு என்ன ? எதில் தலையிட வேண்டும் ? எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் அதை கண்டித்திருப்பதும், யுஜிசி தேர்வுக் செய்யக்கூடிய உறுப்பினரை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 4வது உறுப்பினரை எங்களின் தலையில் சுமக்க வைப்பதும் ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல.
இதுவரையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அளவிற்கு மாநில உரிமைகளை கட்டிக்காப்பதில் மத்திய அரசுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, பல்வேறு மாநில வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வியை பொறுத்தவரையில் பல்கலைக்கழங்களுடைய செயல்பாடு தமிழக அரசை விரும்பி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் அதில் நலன் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள்.
அப்படி தொடர்ந்து திமுக அரசு அமையும்போதெல்லாம் உயர்கல்வியில் அக்கறை காட்டிய காரணத்தால் தான் கலைஞர் காலத்தில் இருந்து இன்று வரை உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்கிற நிலையை எட்டி இருக்கிறோம்.
இதை சீர்குலைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வித்துறையின் பணிகளையும், அரசின் பணிகளையும் குறிக்கிட்டு இடர்பாடுகளை உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்.
எனவே தான், நேற்று ஆளுநர் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும், அண்ணாமலை வேலையை பார்க்க வேண்டாம் என்ற நிலையில் கருத்து தெரிவித்திருந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
- குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்தார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள்.
5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார்.
இதனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தேர்ச்சி முறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.
5ம், 8ம் வகுப்பு தேர்ச்சி தொடர்பாக தமிழகத்தில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்.
மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்.
ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் மத்திய அரசு பெரிய தடை கல்லை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு பொருந்தாது.
தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகள் குறித்து குழப்பம் அடைய தேவையில்லை.
கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது" என்றார்.
- கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள்.
- கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், " இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு மு.க.ஸ்டாலின்?" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?
தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.