என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tngovt"
- ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது.
- விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிட்டார். விலங்குகளுக்கு தேவையற்ற வதை, வலியை தடுக்கும் அதே விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில், அவசியமான வலியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதி சுமக்கும் விலங்குகளை சுட்டிக் காட்டி வாதங்களை அவர் முன் வைத்தார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:
விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது. தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாச்சாரமாகும். அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
- கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும்.
- புதிய திட்டங்களை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது.
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசின் முயற்சிக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறி உள்ளதாவது: மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.
புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும். கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. இவ்வாறு அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்.
- பரந்தூர் விமான நிலையத்தில் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும்.
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக இரண்டாவது உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்ட போதிலும், தற்போதுதான் விமான நிலையம் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்.
இத்திட்டத்துக்கு ரூ.100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ. 325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூர் விமான நிலையத்துக்கு மாறியுள்ளன. அதேபோல ஹைதராபாத் விமான நிலையமும் தமிழக வாய்ப்புகளை தட்டிப் பறித்துள்ளது.
இவ்விரு விமான நிலையங்களின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ள சென்னை விமானநிலையம் பின்தங்கியதற்குக் காரணம் புதிய விமான நிலையத்தை உருவாக்காததே ஆகும். நிலையில், ஏற்கெனவே இயங்கிவரும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும்போது அதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.
குறிப்பாக விரிவுபடுத்த போதிய நிலம் சுற்றுப் பகுதிகளில் கிடையாது. ஏனெனில் ஒருபக்கம் அதிக அளவில் வளர்ந்துவிட்ட குடியிருப்பு பகுதிகள், மற்றொரு பகுதியில் ராணுவ பயிற்சிக் கல்லூரி வளாகம். மேலும் இன்னொரு பக்கமுள்ள அடையாறு கால்வாய் பகுதியிலும் விரிவுபடுத்த இயலாது. இதனால் விரிவாக்கப் பணிகள் ஓரளவோடு நின்று போனது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களில் 6-வது இடத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. ஒரு நாளைக்கு 400 விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதன்படி ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்குத்தான் இந்த விமான நிலையம் உள்ளது. தற்போது இங்கு மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளால் அதிகபட்சம் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்கே அது விரிவடையும்.
இந்தப் பணிகள் முடிவடைய 7 ஆண்டுகளாகும். அப்போது அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்தைக் கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது. புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும்.
600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் பெறும்போது சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும். பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக அல்லது டெல்லியிலிருந்து சென்னைக்கோ மாறி வர வேண்டிய சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க முடியும்.
சென்னை நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கான பயண தூரம் அதிகபட்சம் 54 நிமிடமாக உள்ளது, அதுவே பரந்தூராக இருப்பின் 73 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. இதற்காக மெட்ரோ ரயில் தடமும் விரிவுபடுத்தப்படும். அப்போது பயண நேரம் 1 மணி நேரமாகக் குறையும்.
அனைத்துக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறையினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகும். வேலை வாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.
- உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் நீதிபதி உத்தரவு
தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அணிவகுப்பு நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2ந் தேதி விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 47 இடங்களில் அணி வகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் 6ந் தேதி தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளரங்கு கூட்டமாக நடத்த சம்மதம் தெரிவித்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார்.
- 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது.
தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். மற்ற 47 இடங்களில் அனுமதி வழங்கவில்லை, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது என்று அவர் வாதிட்டார்
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ந்தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு சூழல் வேறு மாதிரியாக உள்ளது என்றார். தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 4ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
- செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்க பெற்றோர், மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கப்படும்.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை அவர்கள் அனைவரும் சென்னை உள்பட பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நாளை இரவே அவர்கள் புறப்பட வேண்டும். அதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் 25-ந்தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோரும் மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாளான 25-ம் தேதி விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுவிலக்கு சட்டத்தில் 2017-ம் ஆண்டு பதநீர் விற்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
- பனை தொழில் தொடர்புடைய சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை :
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க கோரியும், பனை ஏறுவோருக்கு எதிராக நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்தும் பனை மரத்தின் மகத்துவம் குறித்தும் தமிழகத்தின் 33 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநில எல்லைகளிலும் 79 நாட்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து சென்னையில் நேற்று தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் பாண்டியன், பெருமாள் உள்ளிட்டோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கள்ளுக்கான தடை காரணமாக பனை ஏறுவோர் மட்டும் அல்லாமல் பனை தொழில் தொடர்புடைய சுமார் 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மதுவிலக்கு சட்டத்தில் 2017-ம் ஆண்டு பதநீர் விற்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிறகும் பனை ஏறுவோர் மீது போலீசார் விஷ சாராய வழக்கு போட்டு சிறையில் தள்ளுவதும், போலீசாரால் மரியாதை குறைவாக நடத்தப்படுவதும் மனித உரிமை மீறலாகும். சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும், இதுவரை ஒரு வழக்குகூட இந்த சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படவில்லை.
எனவே, பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுவதற்கு தமிழ்நாடு மதுவிலக்கு பிரிவின் கீழ் உரிமம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பதநீரை சுதந்திரமாக இறக்கிக் கொள்ளவும், பதநீரில் கலப்படம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றால் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையான பனை ஏறுவோரை மட்டுமே தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். மேலும் கள் மீதான தடையை நீக்கி, பனை சார்ந்த தொழில்களுக்கு உரிய அங்கீகாரமும், உதவிகளும் அரசு தரப்பில் இருந்து வழங்க வேண்டும்.
இது தொடர்பாக, நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாக இது இருக்கும்.
- ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஒடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது.
பல்கலைக்கழக நல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப் பேராசிரியர் ஒருவரும் நியமிக்கப் பெற்று 2007 முதல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என மூவகையாக விரிவுப்படுத்தி நேரு பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது
தமிழ்நாடு அரசு. இதற்கென ரூபாய் 5 கோடி நிதி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழின் ஆய்வுத் தொன்மையை நிலைநாட்டும் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ் வளர்ச்சிக்கான தனிப்பெரும் விழைவின் அடையாளமாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்தி ஸ்ரீ பண்டிட், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தாங்கள் செய்கின்ற மாபெரும் தொண்டாகக் கருதுகிறேன் என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்ற முறையிலும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்ற முறையிலும் முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு மிகுந்த பெருமை அளிக்கிறது என்றும் பல்கலைக்கழகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியோடு தமிழ் வாழ்க எனவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியவியல் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர்வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே என் யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்தும் விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான்றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
- தண்டோரா போடும் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க நடவடிக்கை.
தண்டோரா போடும் நடைமுறைக்கு தடைவிதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள் மற்றும் இன்ன பிற அரசின் முக்கிய செய்திகளை பொது மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் பொருட்டு, விளம்பரம் செய்யும் விதமாக 'தண்டோரா' போடும் முறை காலம் காலமாக நடைமுறையில் இருந்த பழக்கம். அஃது இன்று வரை நடைமுறைப் படுத்தப்படுகிறது.
அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்தில், தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்தல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மாற்று ஏற்பாடுகளை செய்யும் வண்ணம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தமுக்கடிப்பினால் தண்டோரா போட்டு அரசின் முக்கிய செய்திகளை விளம்பரம் செய்வதை அரசு கூர்ந்தாய்வு செய்து, தமுக்கடிப்பினால் 'தண்டோரா' போடும் நடைமுறை எந்தெந்த துறைகளில் நடைமுறையில் உள்ளதோ, அதற்கு முழுமையாக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
இது தொடர்பான அரசின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் மாற்றியமைக்க உத்தரவிடப்படுகிறது மாற்று ஏற்பாடாக, அரசின் முக்கிய செய்திகளை மிக விரைவாக மக்களிடம் சேர்க்கும் விதத்தில், பொருத்தமான வாகனங்களில் (தானிழுவை வாகனம் (Auto Rickshaw),மிதிவண்டி (Cycle) ஒலி பெருக்கிகளை பொருத்தி, தமிழ்நாட்டின் கிராமப் புறங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் விளம்பரம் செய்வதை நடைமுறைப்படுத்தலாம்.
தண்டோரா' போடும் பணியில் ஏதேனும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி தண்டோரா போடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், இதனை ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவும் அளவுக்கு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்” இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளி வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.
250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றம் சாட்டப்பட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களையோ, ஆளுங் கட்சியின் முக்கியப் புள்ளிகளையோ மாவட்டக் காவல்துறையும் விசாரிக்க வில்லை.
பிறகு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.
மாணவ-மாணவியரின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய அ.தி.மு.க அரசு, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது” என்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டது. அதைக்கூட முறையாக வெளியிடாமல் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக்கொண்டது அ.தி. மு.க அரசு.
அந்த அரசு ஆணையைச் செயல்படுத்த தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து, வழக்கினை சி.பி.ஐ.யிடம் கூட இதுவரை ஒப்படைக்க முடியாமல் இந்த அரசு செயலிழந்து நிற்கிறது. அ.தி.மு.க அரசின் அலட்சியத்தைப் பார்த்த சென்னை உயர்நீதிமன்றம் “ஏன் வழக்கை இன்னும் நீங்கள் எடுத்துக் கொள்ள வில்லை” என்று சி.பி.ஐ. இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் “பொள்ளாச்சி” வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்.
“பொள்ளாச்சி” விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் தோல்வி இப்போது பெரம்பலூரில் எதிரொலித் திருக்கிறது.
பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திடவும், “பொள்ளாச்சி பாலியல் வழக்கை” விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப் படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மே 23-ந்தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும். இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tngovt #perambalurmolestationissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்