search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandalur zoo"

    • சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    • யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

    மேலும் வண்ணத்துப்பூச்சி, பூங்கா மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் ஆகியவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பாதுகாக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அவைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள்.

    பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி சணல் கோணி மூலம் கட்டப்பட்டு அவைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டா மிருகத்திற்கு ஷவர் குளியல் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் ஏற்பாடு செய்து உள்ளனர். நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடி ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர். அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி வரிக்குதிரை போன்றவைகளுக்கு மதியம் 11 மணி 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்சி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோடை வெயிலில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்கும் பணியில் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • வார விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
    • கீழ் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் மற்றும் பறவைகள், பாம்புகள் பாலூட்டிகள் என 2700-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது.

    இந்த பூங்காவுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். வார விடுமுறை நாட்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்கு மற்றும் பறவைகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை ராட்சத கூண்டுகள் மூலம் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த கழுகுகளை கண்டுகளித்து விட்டு சென்றனர்.

    இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு கழுகை கடந்த மாதம் முதல் காணவில்லை என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அந்த கழுகு கிடைக்கவில்லை. ஒரு மாதம் ஆகியும் பூங்காவிலிருந்து தப்பிச்சென்ற கழுகை கண்டுபிடிக்க முடியாமல் பூங்கா நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து பூங்கா இயக்குனர் சீனிவாசரெட்டியிடம் கேட்டதற்கு, 'தப்பிச்சென்ற கழுகை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பிடித்து விடுவோம்' என்றார்.

    • பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது.
    • இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டு வரப்பட்டது. அதனை பரிசோதனை செய்து தனியாக அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். விரைவில் பயணிகள் பார்வைக்கு அவற்றை திறந்து விட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. அனுமன் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டை ஊழியர்கள் சுத்தம் செய்த போது 2 அனுமன் குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டன. அதனை பிடிக்க முயன்றபோது மரங்களில் தாவி சென்று விட்டன. இரவு வரை தேடியும் அந்த அனுமன் குரங்குகளை பிடிக்க முடியவில்லை.

    வண்டலூர் பூங்காவில் உள்ள சூழ்நிலைக்கு அனுமன் குரங்குகள் இன்னும் பழக்கப்படாததால் அதனை பிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் ஊழியர்களின் பார்வையில் சிக்காமல் பூங்காவில் உள்ள மரங்களில் பதுங்கிக்கொண்டது. அதனை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவை சுற்றி பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அதனை ஆய்வு செய்து வருகிறோம் விரைவில் தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளையும் பிடித்து விடுவோம். அவை பூங்காவை விட்டு தப்பி செல்ல வாய்ப்ப்பு இல்லை என்றார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது.
    • வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், இன்று (செவ்வாய்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணும் பொங்கலான வருகிற 17-தேதி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முன்னேற்பாடு பணிகளை செய்வது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ ஆம்புலன்சு ஒன்று தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் கையில் அடையாள சீட்டு கட்டுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி நுழைவு சீட்டு பெறும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
    • கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    மிச்சாங் புயல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. புயல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் மூடப்பட்டது.

    இந்நிலையில், 4 நாட்களாக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது. புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தேங்கிய மழைநீர் அகற்றப்பட்ட நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வெளியே விடப்பட்டுள்ளது.

    • விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது.
    • தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன.

    சென்னை:

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி அங்கு 172 இனங்களை சேர்ந்த 2,368 உயிரினங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான விலங்குகளுக்கு பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவாக கூடுதலாக பழங்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:- வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு பழங்களை உணவளிப்பதற்காக தனியாக பழத்தோட்டம் உள்ளது. விலங்குகளுக்கு கூடுதல் பழங்களை உணவாக வழங்குவதற்காக பழத்தோட்டத்தில் அதிகமாக பழ மரங்கள் நடப்பட உள்ளன. கொய்யா, நாவல், பப்பாளி மற்றும் வாழை மரங்கள் அதிகம் நடப்பட உள்ளன. இந்த வாரம் மட்டும் 150 கொய்யா மரங்களை நட முடிவு செய்துள்ளோம். தற்போது விலங்குகளுக்கு உணவளிக்க இங்குள்ள தோட்டங்களில் இருந்து 197.2 கிலோ பழங்கள், 400 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன. கோடை காலத்தில் விலங்குகளின் உணவில் ஒரு பகுதியாக தர்பூசணி மற்றும் வெள்ளரி ஆகியவை சேர்க்கப்படுகிறது.

    தற்போது பழத்தோட்டம் விரிவு படுத்தப்படுவதால் விலங்குகளுக்கு தேவையான பழம், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும்.

    மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்ப்பறவைகள் மற்றும் முதலைகளுக்கு உணவளிக்க 602 ஹெக்டேர் பரப்பளவில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.
    • பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    கோவையில் வ.உ.சி. மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

    இதையடுத்து அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்படுகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளன. கோவை மாநகராட்சி நடத்தும் உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்ததால், அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கோவை உயிரியல் பூங்காவில் 487 பறவைகள், 62 ஊர்வன பிராணிகள், 8 நாகப்பாம்புகள், 8 சாதாரண வகை பாம்புகள், 5 கட்டு விரியன் பாம்புகள், 11 மலைப்பாம்புகள், 86 பாலூட்டி விலங்குகள் உள்ளன. இதில் கொக்கு, கிளிகள் போன்றவையும் அடங்கும்.

    பாம்பு போன்ற ஊர்வன பிராணிகள் வனப்பகுதியில் விடப்படும் நிலையில், அவற்றில் சில சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கும், மற்றொரு வகை விலங்குகள் மற்றும் ஊர்வன பிராணிகள் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவிற்கும் அனுப்பப்படும். பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். புதிதாக வரும் விலங்குகளை தனிமைப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் தேவையான வசதிகள் மிருகக்காட்சி சாலையில் தயாராக உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை கோவையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும்.

    ஜம்மு-காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து கரடிகளை கொண்டுவர ஒப்புதல் கிடைத்துள்ளது. கரடிகள் ரெயில் மூலம் சென்னைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது.
    • அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் இதனை ரசித்து செல்கிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த 8 மஞ்சள் நிற அனகோண்டா குட்டிகள் பார்வையாளர்கள் பார்வைக்கு விடப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாறையில் ஏறி அனகோண்டா குட்டிகள் சறுக்கி செல்வதை சிறுவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரியிடம் கேட்டபோது, இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. கடந்த 2020 -ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது. இதன் இனப்பெருக்கத்தின் மூலம் 6 குட்டிகள் கிடைத்தது. அதனை தனியாக பராமரித்து வந்தோம். இப்போது நல்ல நிலையில் உள்ள அனகோண்டா குட்டிகளை பார்வைக்கு விட்டுள்ளோம். இதற்கு உணவாக சிறிய கோழி குஞ்சுகள், மூஞ்சூறு எலிகள் வழங்கப்படுகிறது. அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.

    பூங்காவில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெருப்பு கோழிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன என்றார்.

    • கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
    • இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து விலங்குகளை பார்த்து செல்கிறார்கள்.

    கொரோனோ காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டு முன்பு வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்வையிடும் லயன் சபாரி வசதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந்தேதி வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் லயன் சபாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் லயன்சபாரி தொடங்கப்பட்டு இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. லயன்சபாரி தொடங்கப்பட்ட நாள் அன்று மட்டும் 18 முறை வாகனங்கள் இயக்கப்பட்டு சுமார் 500 பேர் சிங்கம், மான்களை பார்த்து ரசித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) 25 முறையும், ஞாயிற்றுக்கிழமை 32 முறையும் லயன்சபாரிக்கு வாகனங்கள் சென்று உள்ளன. சனிக்கிழமை சுமார் 650 பேரும், ஞாயிற்றுக்கிழமை 850 பேரும் கண்டுகளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்வையிடும் வசதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. விடுமுறை நாட்களில் லயன்சபாரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே லயன் சபாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 2 குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

    • ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம்.
    • ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து இதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் "லயன்சபாரி" நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

    இதனால் சிங்கங்களை பார்வையிடும் "லயன் சபாரி"யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வார கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். இதேபோல் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம். ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.

    இதேபோல் நுழைவுச் சீட்டில் கியூஆர் கோடு ஸ்கேனர் வசதி, நுழைவுச் சீட்டு வழங்க 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், முதுமலை வனத்துறை என்ற இணையதளம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பூங்கா நிர்வாகத்தினரின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.
    • இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை.

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. இதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும் 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது.

    இந்தநிலையில் தற்போது பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் மொத்தம் 33 முட்டையிட்டுள்ளது. அதனை நெருப்புகோழிகள் குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன.

    பொதுவாக நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில் 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நெருப்புகோழியின் முட்டை மற்றும் நெருப்புகோழிகளின் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறும்போது, நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை. இவை ஈரப்பதத்தை விரும்பாது. இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக் கொண்டு இருக்க வேண்டும்.

    இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை. நெருப்புகோழிகள் பறக்க முடியாத பறவை என்பதால் அவை சுதந்திரமாக ஓடுவதற்கு போதுமான இடம் தேவை.

    தற்போது மழையும் குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதம் ஆகிறது. எனவே அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம் என்றார்.

    ×