என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanni Arasu"

    • ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
    • ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.

    திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

    அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.

    மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.

    ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.

    இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.

    நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?

    அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?

    தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.

    ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற

    புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் அடிப்படை கொள்கை.
    • திமுகவுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது.

    சென்னை:

    சினிமாவில் இருந்து வந்தோருக்கு துணை முதல்வர் பதவி வரும்போது திருமாவுக்கு கூடாதா? என்று துணை முதல்வர் பதவி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜூன் கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியதாவது:

    * துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூன் கூறிய கருத்தில் ஏற்பில்லை.

    * ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் அடிப்படை கொள்கை. அதில் எந்த மாற்றம் இல்லை.

    * ஆதவ் அர்ஜூன் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்துதான். கட்சியின் கருத்தல்ல.

    * திமுகவுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று கூறினார்.

    • விரைவில் வெளிவரவிருக்கிற அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
    • இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள 'அலங்கு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு சங்கமித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விரைவில் வெளிவரவிருக்கிற 'அலங்கு' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் திருமணம் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

    இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

    • படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.
    • தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூக அக்கறையுள்ள இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் 20-ந்தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

    படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.

    குறிப்பாக, 'அரசு''அரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.

    'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார்.

    ஆபாசம், பிற்போக்குத்தனம், சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும் சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் வெற்றிமாறன்.

    விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும்.

    தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
    • எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புரட்சியாளர் அம்பேத்கர் யாத்து தந்த இந்திய அரசியலமைப்புச்சட்டம் தான் பாராளுமன்றத்தை வழிநடத்துகிறது. அந்த பாராளுமன்றத்துக்குள்ளேயே புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சரும் சனாதனவாதியுமான அமித் ஷா.

    அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டை பெருமையோடு கொண்டாடுவதாக சொல்லி பெருமைப்படும் பிரதமர் மோடியோ இது குறித்து இதுவரை கண்டிக்கவே இல்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கவாவது சொல்லியிருக்க வேண்டும்.

    இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பாராளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்த போராட்டத்தில் அதிமுகவோ, பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டிக்ககூடவில்லை.

    அது கூட போகட்டும், கடந்த 6-ந்தேதி அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் இதுவரை அமித் ஷாவை கண்டிக்கவில்லை.

    எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    அதுவே புரட்சியாளர் அம்பேத்கரை மதிப்பதாக பொருள். இல்லையேல், அடையாள அரசியலை செய்வதாகத்தான் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறியுள்ளார். 



    • ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும்.
    • தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம்.

    இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறியவர் பெரியார்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை விமர்சித்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "தந்தை பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் சீமான். நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான். கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

    தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள். அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு. அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே.

    ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர். அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது RSS கும்பல்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார்.

    ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது" என்று பதிவிட்டுள்ளார். 

    • மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.
    • நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை.

    எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.

    நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.

    எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது"

    -அனைத்துலக பெண்கள் தினத்தில் 1992 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் விடுத்த அறிக்கையிலிருந்து…

    பெண்கள் விடுதலை குறித்து மேதகு பிரபாகரன் பார்வை தனித்துவமானது. அதனால் தான் பெண்கள் படையணியை 1985 ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் மேதகு பிரபாகரன். ஆனால் சீமான் நேற்று (28.2.2025)மட்டும் கொடுத்த பேட்டிகளை பார்த்தால் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனை உள்ளவராக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். பொது வெளியில் பெண்களை இவ்வளவு இழிவாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.

    தான் செய்த பாலியல் சம்பவங்களை பெருமையோடு Normalize பண்ணுகிறார். அருவருப்பான உடல் மொழியோடும் அநாகரீகமான உரையாடலை தொடரும் சீமானை மாதர் சங்கங்கள் மற்றும் #meetoo என்ற பெயரில் இயங்குபவர்கள் இதுவரை கண்டிக்கவில்லை.

    மவுனம் காப்பது பெண்களுக்கு செய்ய கூடிய துரோகமாகும்.

    நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்கும் விசாரணையை திமுகவுக்கு எதிராக திசை திருப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

    அதிலும் விசாரணைக்கு மேதகு பிரபாகரன் படத்தோடு வந்திருப்பது எத்தனை கொடுமையான அயோக்கியத்தனம்?

    தமிழ்த்தேசியத்தின் அரசியல் இது தானா?

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!

    வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்றார் பாரதி.

    இன்று தமிழ்த்தேசியத்தின் பெயரில் அதுவும் மேதகு பிரபாகரன் பெயரில் பெண்களை இழிவுபடுத்துவதும் அதை பெருமைப்படுத்துவதும் அருவருப்பின் உச்சம். அமைதி காப்பது அதனினும் உச்சம் என்று கூறியுள்ளார். 



    • இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் விஜய்
    • CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் விஜய்

    இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், வன்னி அரசு பேச்சுக்கு த.வெ.க. கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக எள்ளளவும் அறமற்ற அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் சகோதரர் திரு.வன்னியரசு அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எங்கள் கழகத்தின் மாநிலக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த என்னை நியமனம் செய்தவர் எங்கள் தலைவர்!

    கழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தவர் எங்கள் தலைவர்!

    கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்கள் பலருக்குப் பரிசளித்துப் பாராட்டியவர் எங்கள் தலைவர்!

    CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் எங்கள் தலைவர்!

    எங்கள் தலைவர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் நீங்கள் பேசியுள்ள அப்பட்டமான பொய்யின் வாயிலாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் ஏதோ தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் போலச் சித்திரித்து அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க.வின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யினைச் சர்வ சாதாரணமாகப் பேசும் நீங்கள், நாங்கள் பெருமதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தங்கள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் அவப்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்.

    இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் எங்கள் தலைவர்!

    இஸ்லாமிய மக்களும் எங்கள் தலைவரைத் தங்கள் மனத்தில் வைத்து மதிப்பவர்கள்! உங்களை ஏவிவிடுவோரின் பொய், புரட்டுகளால் ஒருபோதும் இதனை மாற்றவோ மறைக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் இது போன்று அநாகரிகமான முறையில் இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, நாகரிக அரசியல் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #vanniarasu #vaiko

    சென்னை:

    தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்த வைகோவிடம், திராவிட கட்சிகள் தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகோ பதில் அளிக்கும் போது, தலித்துகளுக்கு எதிராக என்னை சித்தரிக்க நினைக்கிறீர்கள். அது நடக்காது. எங்கள் வீட்டில் வேலை செய்பவர் கூட தலித்துதான் என்று கூறினார்.

    வைகோவின் இந்த பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது முகநூலில் பதில் அளித்தார்.

    தலித் குறித்த கேள்விக்கு வைகோ நேர்மையாக எதிர் கொள்ளவில்லை. அவர் சொன்ன வார்த்தை ஆதிக்க மனோநிலையில் இருந்து கூறியது போல உள்ளது. இதை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.


    இது குறித்து திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முகநூலில் வைகோவை பற்றி வன்னியரசு கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல, அதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். அதனால் உடனடியாக நீக்கி விட்டார்

    வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதன் பின்னரும் வைகோ கூறிய கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

    2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவருடைய இல்லத்துக்கு வரும்படி அழைத்தார், தேர்தலுக்காக உதவி செய்தார் அதற்காக நான் அவருக்கு நன்றியும் தெரிவித்தேன். அது வெறும் வெளிப்படையான ஒரு கருத்து. அதில் ஒளிவு மறைவு இல்லை.

    ஆனால் வன்னியரசு எழுதிய பதிவிற்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது.எதன் அடிப்படையில் வைகோ பேசினார் என்பது தெரியவில்லை. என் மீது உள்ள கோபமாஅல்லது வன்னியரசுவின் கருத்திற்கு பதிலா என்று தெரியவில்லை.

    அரசியல் தரம் தாழ்ந்த அரசியல் செய்பவன் திருமாவளவன் அல்ல. என்னை கடுமையாக விமர்சித்தவர்களை கூட நான் விமர்சிப்பதில்லை. அப்படியே என்னுடைய விமர்சனங்களை சொல்ல வேண்டுமென்றால் கூட அது தைரியமாக தெரிவிப்பேன். அந்த துணிச்சல் என்னிடம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #vanniarasu #vaiko

    ×