என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VK Saxena"

    • டெல்லி அரசு ரூ.97 கோடியே 14 லட்சம் அளவுக்கு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
    • ரூ.54 கோடியே 87 லட்சம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

    புதுடெல்லி :

    டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆனால் அங்கு அரசுக்கும், துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி அரசு ரூ.97 கோடியே 14 லட்சம் அளவுக்கு ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. டெல்லி அரசு, மக்களின் வரிப்பணத்தில் அரசியல் விளம்பரங்களை அரசின் விளம்பரங்களாக வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறையால் உருவாக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ள விளம்பரங்களுக்கான உள்ளடக்க விதிமுறைகளை மீறி இந்த அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விளம்பரங்கள், அரசின் விளம்பரங்களாக வெளியிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த விளம்பரங்களுக்கு ரூ.42 கோடியே 26 லட்சம், டி.ஐ.பி. என்று அழைக்கப்படுகிற அரசு தகவல், விளம்பரத்துறை செலுத்தி உள்ளது. ஆனால் ரூ.54 கோடியே 87 லட்சம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

    இந்த விளம்பரங்களுக்கான மொத்த கட்டணமான ரூ.97 கோடியே 14 லட்சத்தை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து வசூலிக்குமாறு அரசு தலைமைச்செயலாளருக்கு டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் தேசிய கட்சியாக உருவாகி இருப்பதும், டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி இருப்பதும் பா.ஜ.க.வை பதைபதைப்புக்கு ஆளாக்கி உள்ளது. பா.ஜ.க.வின் வழிகாட்டுதல்படி டெல்லி துணை நிலை கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    அவர் விளம்பர விவகாரத்தில் பிறப்பித்துள்ள உத்தரவு, சட்டத்தின்முன் செல்லுபடியாகாது. டெல்லி துணை நிலை கவர்னருக்கு அத்தகைய அதிகாரம் கிடையாது. அவர் இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்கவும் முடியாது.

    பல்வேறு பா.ஜ.க. மாநில அரசுகள் இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. அவர்கள் விளம்பரங்களுக்காக செலவிட்ட ரூ.22 ஆயிரம் கோடியை எப்போது திரும்ப வசூலிப்பீர்கள்? என்றைக்கு அந்தப் பணம் வசூலிக்கப்படுகிறதோ, இந்த நாளில் நாங்களும் ரூ.97 கோடியை செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்-மந்திரி சந்திப்பது வழக்கம்.
    • இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை.

    புதுடெல்லி :

    டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும், மந்திரிகளும் பேரணி சென்றனர். ஆனால், கவர்னர் சந்திக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

    கவர்னர், தனக்கு தலைமை ஆசிரியர் போல் நடந்து கொள்வதாக சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அதை கவர்னர் மறுத்தார். கவர்னரை வெள்ளிக்கிழமைதோறும் முதல்-மந்திரி சந்திப்பது வழக்கம். ஆனால், இந்த மோதலால் இச்சந்திப்பு சில வாரங்களாக நடக்கவில்லை.

    இந்த பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று திடீரென அழைப்பு விடுத்தார். மந்திரிகள், 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார்.

    ஆனால், இந்த அழைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னரின் அழைப்புக்கு நன்றி. வெள்ளிக்கிழமை பஞ்சாப் செல்கிறேன். அங்கு 400 மக்கள் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறேன். ஆகவே, வேறு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
    • இதுதொடர்பாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. 2023ம் ஆண்டுக்கான காற்று தர அறிக்கையை நேற்று வெளியானது. அதில் உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

    இன்றைய குழப்பமான தேசிய தலைப்புச் செய்திகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க நான் எழுதுகிறேன். டெல்லி-உலகின் மிகவும் மாசுபட்ட-மறுபடியும் மோசமான தலைநகரம்.

    வரும் மாதங்களில் நீங்கள் சில உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இந்த முக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதற்கான உங்கள் திட்டங்களை டெல்லி மக்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • உடல்நிலையை குறைக்க வேண்டுமென்றே கலோரி உணவுகளை கெஜ்ரிவால் எடுத்துக் கொள்ளவில்லை.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகு கெஜ்ரிவால் 2 கிலோ எடை குறைந்துள்ளார்- துணை நிலை ஆளுநர்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கதுறை டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும்போது சிபிஐ-யால் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாகவும், பலமுறை இவ்வாறு நடந்ததாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.

    இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை ஆளுநரான வி.கே. சக்சேனா கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து சிறைத்துறை கண்காளிப்பாளர் அறிக்கை அடிப்படையில் தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அப்போது கெஜ்ரிவால் சிறைக்குள் வேண்டுமென்றே மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்திருக்கலாம். போதுமான அளவு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் கெஜ்ரிவால் உடல்நிலையை குறைக்க குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் அநத் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மருத்துவ பரிசோதனையில் உள்ள வேறுபாட்டை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிய துணை நிலை ஆளுநர் போதுமான கலோரி உணவை எடுக்காததன் காரணமாக கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஜூன் 2-ந்தேதியில் இருந்து 2 கிலோ எடை குறைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டை திட்டவட்டாக மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி மந்திரி அதிஷி "முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 8 முறைக்கு மேல் 50 mg/dL-க்கு கீழ் வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கோமா நிலைக்குக் கூட செல்ல முடியும். பிரைன் ஸ்ட்ரோக் ஆபத்து கொண்டது." என்றார்.

     ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சங் சிங் "என்ன வகையிலான ஜோக்கை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் துணைநிலை ஆளுநர் சார்?, ஒரு மனிதன் இரவில் சர்க்கரை அளவைக் குறைப்பானா? இது மிகவும் ஆபத்தானது. துணைநிலை ஆளுநர் சார், உங்களுக்கு இந்த நோய் பற்றி தெரியவில்லை என்றால், அதன்பின் நீங்கள் இது போன்ற கடிதம் எழுதக் கூடாது. அப்படி ஒரு காலம் உங்களுக்கு வராமல் கடவுள் தடுக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    துணைநிலை ஆளுநர் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் நீரிழிவு நோயில் நிபுணத்துவம் பெற்றவரா என்பது எனக்குத் தெரியாது என ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    • அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது
    • தேவையில்லாத குறுக்கீடுகளால் முக்கிய பணிகளில் தாமதம் ஏற்படுத்துகிறார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்ளை தொடர்பான மோசடி வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த உடன் மக்கள் தன்னை நிரபராதி என அழைக்கும் வரை முதல்வர் பதவியை பெற மாட்டேன் என தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி டெல்லி முதல்வராக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பதவி ஏற்றார்.

    இந்த நிலையில்தான் அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது என டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது என்று நேற்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் ஆளுநர் சக்சேனாவுக்கு அதிஷி பதிலடி கொடுத்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் சக்சேனாவின் கருத்துக்கு பதிலளித்த அதஷி, வரவிருக்கும் புத்தாண்டில் ஆளுநர் தனது கட்டைப் பை அரசியலை [baggage of politics] விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆளுனரின் நடவடிக்கைகளில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய அதிஷி, [அரசுக்கு] ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பதை விட [அரசியல்] விமர்சனம் செய்வதற்கே ஆளுநர் முக்கியத்துவம் அளிக்கிறார். தேவையில்லாத குறுக்கீடுகளால் முக்கிய பணிகளில் குறுக்கிட்டு தாமதம் செய்கிறார். மகிளா சம்மான் யோஜனாவை [மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை] நிறுத்தினார்

    உங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட ஒரே வேலையான நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலையிலும் ஆளுநர் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளீர்கள். டெல்லியில் தினந்தோறும் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு வரும் நிலையில், எங்கள் தலைவர்கள்[ ஆம் ஆத்மி] மீது தினமும் ரெய்டு மற்றும் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவுகளை வழங்கி, அர்த்தமற்ற கலங்கத்தை ஏற்படுவதை வேலையாக வைத்துள்ளீர்கள்.

     

    உங்கள் செயல்களால் மக்கள் லெப்டினன்ட் கவர்னர் பதவி மேல் வைத்திருந்த மரியாதையை குலைத்துள்ளீர்கள். உங்கள் குறுக்குபுத்தி அரசியலை கைவிடுங்கள்.

    டெல்லி ஆளுநர் மாளிகை இப்போது பாஜகவின் பினாமி அலுவலகமாக செயல்படுகிறது என்று விளாசிய அதிஷி, தற்காலிக முதல்வர் என்ற கருத்து குறித்து எழுதுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் உண்மையில் தற்காலிகமானவர்கள் மற்றும் காலம் வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள் என்பது நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு சான்று.

    ஜனநாயகத்தின் இந்த யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் எந்தவொரு அறிக்கையையும் நீங்கள் புண்படுத்துவதைக் கண்டிக்கிறேன். இதற்கு பதிலாக டெல்லி மீது கவனம் செலுத்துங்கள் என்று காட்டமாகத் தெரித்துள்ளார்.    

    • இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன

    துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி டெல்லியில் உள்ள பல்வேறு இந்து மற்றும் பௌத்த மதக் கோவில்கள் மற்றும் கட்டமைப்புகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆளுநருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், நவம்பர் 22 ஆம் தேதி நடந்த மதக் குழு கூட்டத்தில் உங்கள் வழிகாட்டுதலின் பேரில் டெல்லி முழுவதும் உள்ள பல மதக் கட்டமைப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு படேல் நகர், தில்ஷாத் கார்டன், சுந்தர் நாக்ரி, சீமா புரி, கோகல் பூரி மற்றும் உஸ்மான்பூர் போன்ற பகுதிகளில் உள்ள கட்டமைப்புகள் இடடிக்கப்பட உள்ளது என்று அதஷி பட்டியலிட்டார். இவற்றில் பல கோயில்கள் மற்றும் புத்த வழிபாட்டுத் தலங்கள் உள்ளடங்கும்,

    டெல்லி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற முறையில், எந்த மத உணர்வுகளும் புண்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மதக் கட்டமைப்புகளை இடிப்பது சட்டம் ஒழுங்கின் கீழ் வருகிறது என்று கூறி, இது நேரடியாக சக்சேனாவின் அலுவலகத்தின் அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    மதக் குழுவின் பணியை நீங்கள் நேரடியாகக் கண்காணித்து வருகிறீர்கள். மதக் குழுவின் அனைத்து கோப்புகளும் முதலமைச்சர் அலுவலகத்தை புறக்கணித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகின்றன என்று அதிஷி மேலும் தெரிவித்துள்ளார்.

     

    இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த துணை நிலை ஆளுநர் சக்சேனா, தனது முன்னோடியான அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப மலிவான அரசியல் செய்து ஆட்டம் காட்டுகிறார் முதல்வர் அதிஷி. அரசியல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே நாசவேலையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

    • கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
    • 'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் குறித்து விசாரணை நடந்த உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இரங்கல் செய்தி வெளியிட்டார். முதலில் அந்த செய்தியில் 'கூட்டநெரிசல்' என்று சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அதை நீக்கி துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று மட்டும் மறுபதிவு செய்துள்ளார்.

    அவரது திருத்தப்பட்ட எக்ஸ் பதிவில்,

    'புது டெல்லி ரயில் நிலையத்தில் "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது. தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையரிடம் பேசி நிலைமையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரணப் பணியாளர்களை அனுப்புமாறு தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.

    மீட்புப் படையினர் மற்றும் காவல் ஆணையர் சம்பவ இடத்தில் இருக்கவும், நிவாரண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    நான் தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக முதல் வரியில், 'புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல் மற்றும் குழப்பம் காரணமாகப் பல உயிர்கள் பறிபோன "ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" நடந்துள்ளது என்று எழுதியிருந்தார். 

     

    ×