என் மலர்
நீங்கள் தேடியது "World Athletics Championships"
- நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
- ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.
ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).
- 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டியில் ஜோதியால் 29-வது இடத்தையே பிடிக்க முடிந்தது
- ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் கிருஷ்ணன் குமார் சோபிக்க தவறினார்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான 100மீ தடைதாண்டி ஓட்டம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி கலந்து கொண்டார்.
ஆனால் அவர் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து, அவருடைய தகுதிச்சுற்று பிரிவில் (ஹீட்) ஏழாவது இடம் பிடித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார். ஜோதியின் தேசிய சாதனையாக 12.78 வினாடி உள்ளது. இந்த இலக்கைக் கூட அவரால் எட்ட முடியவில்லை.
ஒவ்வொரு பிரிவிலும் (ஹீட்) இருந்து முதல் நான்கு பேர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்பின் வேகமாக பந்தய தூரத்தை கடந்த மேலும் 4 பேர் (அனைத்து பிரிவிலும் இருந்து மொத்தமாக) அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ஜோதியால் 29-வது இடத்தையே பெற முடிந்தது.
ஆண்களுக்கான 800மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் கிருஷ்ணன் குமார், அவருடைய பிரிவில் (ஹீட்) 7-வது இடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 50.36 வினாடிகளில் கடந்தார். அவருடைய சிறந்த ஓட்டம் ஒரு நிமிடம் 45.88 வினாடியாகும். ஒவ்வொரு ஹீட்டிலும் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மேலும், வேகமாக ஓடிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுவாரக்ள்.
ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தகுதி சுற்றோடு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்க நாளான கடந்த சனிக்கிழமை 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சப்ளே இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
ஏற்கனவே, 20கி.மீ. ஆண்கள் நடைபயணம், ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கான நீளம் தாண்டுதல், ஆண்களுக்கனா டிரிபிள் ஜம்ப், 400மீ தடைதாண்டி ஓட்டம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள்- வீராங்கனைகள் சோபிக்க தவறினர்.
- கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- 23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக பெண்மணி யார்? என்பதை தீர்மானிக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது. இறுதிப்போட்டியில் 9 வீராங்கனைகள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் கடைசி ஓடுபாதையில் இருந்து ஓட தொடங்கிய அமெரிக்க வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன் முதலில் சற்று பின்தங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அனைவரையும் பின்னுக்கு தள்ளி 10.65 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் 2-வது இடம் பிடித்த ஜமைக்கா வீராங்கனை ஷெரிகா ஜாக்சன் (10.72 வினாடி) மீண்டும் வெள்ளிப்பதக்கம் பெற்றார். நடப்பு சாம்பியனும், 5 முறை தங்கப்பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியவருமான மற்றொரு ஜமைக்கா வீராங்கனை 36 வயது ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் 10.77 வினாடியில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.
23 வயதான ஷாகாரி ரிச்சர்ட்சன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்துள்ளார்.
2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க தகுதி சுற்றில் வெற்றி கண்ட ஷாகாரி ரிச்சர்ட்சன் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் ஒரு மாதம் தடையுடன் அந்த ஒலிம்பிக்கையும் தவறவிட வேண்டியதானது. அத்துடன் அவர் கடந்த ஆண்டு (2022) நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் ஏற்கனவே வாகை சூடியிருந்தார். பெண்கள் பிரிவில் ஷாகாரி ரிச்சர்ட்சன் வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டத்தில் இரு பிரிவிலும் அமெரிக்கா 2017-ம் ஆண்டுக்கு பிறகு முழுமையாக கோலோச்சியுள்ளது.
ஷாகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில், 'எனது முதலாவது பெரிய சர்வதேச போட்டியிலேயே தங்கப்பதக்கம் வென்று இருப்பதால் இதனை நிச்சயமாக ஒரு நல்ல தொடக்கம் என்றே சொல்வேன். இதில் எனது சிறந்த திறன் வெளிப்பட்டது. நான் முன்பை விட நல்ல நிலையை எட்டி இருக்கிறேன். இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்' என்றார்.
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
- 5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
5-வது நாளான நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதலின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கர் உள்பட மொத்தம் 37 பேர் களம் இறங்கினர். இதில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தனது முதல் முயற்சியில் 8 மீட்டர் நீளம் தாண்டினார். அடுத்த இரு முயற்சியில் 'பவுல்' செய்தார். என்றாலும் 12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு 12-வது வீரராக தகுதி பெற்றார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டியை எட்டிய முதல் இந்தியர் இவர் தான். தூத்துக்குடி மாவட்டம் முதலுரைச் சேர்ந்த 21 வயதான ஜெஸ்வின் ஆல்ட்ரின் கடந்த மார்ச் மாதம் தேசிய சாதனையாக 8.42 மீட்டர் நீளம் தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 3 வாய்ப்புகளில் முறையே 7.74 மீட்டர், 7.66 மீ., 6.70 மீ. நீளம் தாண்டி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டு தகுதி சுற்றோடு நடையை கட்டினார். ஸ்ரீசங்கர் பல போட்டிகளில் 8 மீட்டர் தூரத்தை எளிதில் கடந்திருக்கிறார். ஆனால் இந்த போட்டியில் அவர் 8 மீட்டரை நெருங்காதது ஆச்சரியம் அளித்தது. அவர் கடந்த ஆண்டு உலக தடகளத்தில் இறுதிசுற்றில் கால்பதித்திருந்தது நினைவிருக்கலாம். ஜமைக்காவின் வெய்ன் பினோக் 8.54 மீட்டர் நீளம் தாண்டி தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்தார். பதக்கமேடையில் ஏறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் 12 பேர் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
பெண்களுக்கான ஈட்டி எறிதலின் தகுதி சுற்றில் மொத்தம் 34 வீராங்கனைகள் தங்களது திறமையை காட்டினர். இதில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 57.05 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 19-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார். முந்தைய இரு உலக தடகள போட்டியில் இறுதிசுற்றை எட்டியிருந்த 30 வயதானஅன்னு ராணி இந்த முறை தனது சிறந்த செயல்பாட்டை கூட (63.24 மீட்டர்) நெருங்க முடியாத சோகத்துடன் வெளியேறினார்.
முன்னதாக பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் யர்ராஜி ஜோதி 13.05 வினாடிகளில் இலக்கை கடந்து தகுதி சுற்றோடு பின்வாங்கினார்.
நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாம்பியன் இத்தாலி வீரர் கியான்மார்கோ தம்பேரி, அமெரிக்காவின் ஜூவான் ஹாரிசன் இருவரும் அதிகபட்சமாக தலா 2.36 மீட்டர் உயரம் தாண்டி சமநிலையில் இருந்தனர். 2.38 மீட்டர் உயரத்தை தொடுவதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இருவரும் சமநிலை வகித்தாலும் ஹாரிசன் 2.36 மீட்டர் உயரத்தை தனது 2-வது முயற்சியில் தான் எட்டினார். ஆனால் தம்பேரி தனது முதல் வாய்ப்பிலேயே அதை தாண்டினார். அதன் அடிப்படையில் தம்பேரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உலக தடகளத்தில் ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஹாரிசனுக்கு வெள்ளிப்பதக்கமும், கத்தாரின் முதாஷ் பார்ஷிமுக்கு (2.33 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கிடைத்தது.
பெண்களுக்கான வட்டு எறிதலில் அமெரிக்க வீராங்கனை லாலாகா தசாகா 69.49 மீட்டர் தொலைவுக்கு வட்டுவை வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 65.56 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததே அதிகபட்சமாக இருந்தது. மகுடம் சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் சாம்பியனும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையுமான வலரி அல்மான் 69.23 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
23 வயதான தசாகா கூறுகையில், 'கடந்த இரு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் கடைசி இடத்துக்கு (12-வது) தள்ளப்பட்டேன். 12-ல் இருந்து இப்போது முதலிடத்துக்கு வந்திருப்பதை நம்ப முடியவில்லை. நான் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று விட்டேன். இது நிஜமா என்றே என்னால் நம்ப முடியவில்லை' என்று கூறி சிலாகித்தார்.
- இரண்டு முறை தவறு செய்த ஆல்டிரின் 3-வது முறையாக சோபிக்கவில்லை
- ஸ்ரீசங்கர் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஜேஸ்வின் ஆல்டிரின் ஏமாற்றம் அடைந்தார்.
தகுதிச்சுற்றில் 8 மீ தாண்டி கடைசி வீரராக (12-வது நபர்) இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதி சுற்றில் மூன்று முறை தாண்ட வேண்டும். இதில் சிறந்த தாண்டுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனடிப்படையில் முதல் 8 பேர் அடுத்த சுற்றில் பங்கேற்க வேண்டும்.
ஜேஸ்வின் ஆல்டிரின் முதல் இரண்டு முறை தாண்டும்போது Fouling ஆனது. 3-வது முறையாக அவரால் 7.77 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இது முதல் 8 இடத்திற்குள் வருவதற்கு போதுமானது அல்ல. கடந்த மார்ச் மாதம் 8.42 மீ தூரம் தாண்டி சாதனைப் படைத்திருந்தார் என்து குறிப்பிடத்தக்கது.
ஆல்டிரின் உடன் ஸ்ரீசங்கரும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால், 7.74 மீ தாண்டி இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.
முன்னதாக, ராம் பாபூ 35 கி.மீ. நடை போட்டியில் 37-வது இடத்தையே பிடிததார். அவர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 39 நிமிடம் 07 வினாடிகளில் கடந்தார். அவரது தேசிய சாதனை 2:29:56 ஆகும்.
- பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
- இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
2வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அபாரமாக வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
இந்திய வீரர் கிஷோர் ஜெனா 84.77 மீ. தூரம் ஈட்டியை வீசி, 5ம் இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் டி.பி.மானு 83.72 மீட்டருடன் 6ம் இடம் பிடித்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2ம் இடம் பிடித்தார்.
- உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், ஆண்கள் தொடர் ஓட்ட தகுதிச்சுற்று போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன்மூலம், உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் தொடர் ஓட்டப்பிரிவு வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் 4*400 தொடர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது.
4*400 தூரத்தை 2<59.92 வினாடிகளில் கடந்து இந்திய வீரர்கள் 5ம் இடம் பிடித்துள்ளனர்.
- மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.
- 9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார்.
பந்தய தூரத்தை 9.15.31 நிமிடங்களில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார் பாருல் சவுத்ரி.
9.23 நிமிடங்களில் இலக்கை கடந்ததால் அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
- 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார்
- உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்
ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
அவருக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் "நீரஜ் சோப்ராவால் இந்தியா பெருமை அடைந்துள்ளது. அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்கள் என்று, இந்திய விளையாட்டு சாதனைப் பக்கத்தில் மேலும் தங்க பக்கத்தை இணைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தில் ''உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல் விளையட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
- பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் கடந்த கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்று கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றது.
9 தினங்கள் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 பேர் (23 வீரர்கள், 5 வீராங்கனைகள்) 15 பிரிவில் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.45 மணிக்கு தொடங்கியது. நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா ஆகிய 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். 12 பேர் இதில் பங்கேற்றனர்.
அனைவரும் எதிர்பார்த்தப்படி நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் 88.17 மீட்டர் தூரம் எறிந்தார். அவர் தனது 2-வது வாய்ப்பில் இதை எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.
25 வயதான நீரஜ் சோப்ராவின் முதல் வாய்ப்பு பவுலாக அமைந்தது. 3-வது வாய்ப்பில் 86.32 மீட்டரும், அதைத்தொடர்ந்து 84.64 மீட்டரும், 87.73 மீட்டரும், 83.98 மீட்டரும் எறிந்தார்.
பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், செக்குடியரசுவை சேர்ந்த ஜாகுப் வேட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
உலக தடகள போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நீரஜ்சோப்ரா புதிய வரலாறு படைத்தார்.
40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை தங்கப்பதக்கம் பெற்றது இல்லை. நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடந்த உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் பெற்றார். தற்போது அதில் இருந்து முன்னேறி புதிய முத்திரை பதித்தார்.
நீரஜ்சோப்ரா ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்து இருந்தார்.
உலக தடகள போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கத்தை பெற்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.
தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தால் நீரஜ் சோப்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பதக்கம் இந்திய மக்களுக்கானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீரஜ்சோப்ரா கூறியதாவது:-
நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தங்கப் பதக்கம் இந்திய மக்களுக்கானது.
நான் ஒலிம்பிக் சாம்பியன். தற்போது உலக சாம்பியன். தொடர்ந்து பல்வேறு துறைகளில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் பெயர் எடுக்க வேண்டும்.
போட்டிக்கு முன்பு நான் எனது செல்போனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் 'நேற்று நான் பார்த்தேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி என்று தான் முதலில் பார்த்தேன். ஆனால் ஐரோப்பிய வீரர்கள் ஆபத்தானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் ஈட்டி எறிதலை செய்ய முடியும்.அர்ஷத், ஜாகுப் மற்றும் ஜூலியன் வெப்பர் உள்ளனர். எனவே கடைசி எறிதல் வரை நீங்கள் மற்ற வீரர்கள் எறிவதை பற்றி யோசித்து இருக்க வேண்டும்.
ஆனால் வீசயம் என்னவென்றால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பீடுகள் இருக்கும்.
ஈட்டி எறிதலில் ஐரோப்பிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நிலைக்கு வந்துள்ளன.
பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நன்றாக வீசியதை உணர்ந்தேன். தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐரோப்பிய வீரர்கள் முன்பு இதில் இருந்தனர். ஆனால் தற்போது நாங்கள் அவர்களின் நிலையை அடைந்து உள்ளோம்.
இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
ஈட்டி எறிதலில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 5-வது இடத்தையும் (84.77 மீட்டர்), டி.பி.மானு 6-வது இடத்தையும் (84.14 மீட்டர்) பிடித்தனர்.
ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடத்தை பிடித்தது. முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 59.92 வினாடியில் கடந்தனர். முன்னதாக தகுதி சுற்றில் இந்திய அணி ஆசிய சாதனையை முறியடித்து இருந்தது.
- 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.
- ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலக தடகள போட்டியிலும், தங்கம் வென்று முத்திரை பதித்துள்ளார். ஒலிம்பிக்கிலும், உலக தடகள போட்டியிலும் தங்கம் வென்ற 3-வது ஈட்டி எறிதல் சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா ஆவார். செக் குடியரசை சேர்ந்த ஜான் ஜெலன்சி, நார்வேயை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் தார்கில்சென் ஆகியோர் ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இருந்தனர்.
ஜெலன்சி 1992, 1996, 2000 ஒலிம்பிக்கிலும், 1993, 1995, 2001 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், தார்கில்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகளத்திலும் தங்கம் வென்று இருந்தனர்.
- இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார்.
- நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.
புடாபெஸ்ட்:
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது.
எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
இறுதிப் போட்டிக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் இருவரும் களத்தில் தங்களது தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என நிரஜ் சோப்ரா தெரிவித்திருந்தார்.
அது சமூக ஊடகங்கள் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. நீரஜ் மற்றும் நதீம் களத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவினர். அவர்களின் பிணைப்பு இந்தியா-பாகிஸ்தான் வேற்றுமைக்கு அப்பால் செல்கிறது.
இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார். நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார். அவர்களுடன் வெண்கலப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜும் நின்றார்.
நீரஜ் மற்றும் நதீம் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்த தருணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மூவர்ண கொடியுடன் புகைப்படம் எடுத்த பாகிஸ்தான் வீரரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.