search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை"

    • தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை இன்று (வியாழக்கிழமை) வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது விவசாயிகள் மழையால் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை எடுத்து அமைச்சர்களிடம் காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் 13 ஆயிரத்து 749 ஹெக்டேர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 947 ஹெக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 3300 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 7681 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 958 ஹெக்டேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 822 ஹெக்டேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஹெக்டேர் அளவிற்கு கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. முதல் கட்ட கணக்கீட்டில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

    தண்ணீர் வடியாததால் பயிர்கள் மூழ்கியுள்ளது. தற்போது வேளாண் துறை அதிகாரிகள் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    33 சதவீதம் அளவிற்கு பயிர்களின் பாதிப்பு இருந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

    அதிகமாக மழை பெய்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் , துறை அதிகாரிகள் என அனைத்து துறை அதிகாரிகளையும் பாதிப்பு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். இது தவிர அந்தந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் யாரும் செய்யாத வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் சி அண்ட் டி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதுவும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை காலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிக்கு பட்ஜெட்டிற்கு முன்பே அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.75 கோடி அளவுக்கு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.
    • நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி முதன்மையானதாக விளங்கி வருகிறது.

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக வயல்களில் நெல் நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வயல்களில் நடவு பணியில் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில் வேளாண் குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பாரம்பரிய நெல் ரகங்களை அறிந்து கொள்ளவும், நடவு பணிகளில் ஆர்வம் ஏற்படவும் நடவு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, தஞ்சை அருகே உள்ள கருப்பட்டிப்பட்டி கிராமத்தில் மாணவ- மாணவிகளுக்கு பாரம்பரிய முறையில் நெல் நடவு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் நாற்று நடுவது எப்படி? என்று கற்றுக்கொடுத்தனர்.

    இதையடுத்து 'அம்மா முத்துமாரி, அழகு முத்து மாரி, ஆனந்தமாய் கொண்டாடுவோம் அழகு முத்துமாரி' என நாட்டுப்புற பாடல்களை பாடியபடி மாணவ- மாணவிகள் உற்சாகமாக நாற்று நட்டனர். தொடர்ந்து, ராஜமுடி, சொர்ன சீரிகை உள்பட 56 நெல் ரகங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இவற்றை மாணவ- மாணவிகள் பார்த்து ஒவ்வொரு நெல் ரகங்களின் பெயர்களையும் தெரிந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறும் போது:- நாட்டுப்புறப் பாடல் பாடியபடி நாற்று நட்டது மகிழ்ச்சியாக உள்ளது. நம்மாழ்வார் மீட்டெடுத்த 7 நெல் ரகங்களை நடவு செய்துள்ளோம் .

    இளைய தலைமுறை விவசாயத்தை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். நஞ்சில்லாத உணவை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும் என்றனர்.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில்.
    • நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார்.

    கோவில் தோற்றம்

    பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நித்திய சொர்க்க வாசல் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தா்கள், பின்னர் சொக்கவாசலைப் பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே இத்தலம் நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

    தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள், `தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசலைப்போல நுழைவுவாசல் வைத்து ஒரு கோவில் கட்டு' என பணித்தார். மேலும் அவர் கூறுகையில், `இத்தலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கலியுக வெங்கடேசப் பெருமாளாகவும், மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜப் பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன்.

    இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்ய சொர்க்க வாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனையும், வைகுண்ட பதவியையும் தந்தருள்வேன்' என்று கூறி மறைந்தாராம்.

    அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், மராட்டிய சிற்பக்கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இக்கோவிலை கட்டினார்கள். இத்தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமைதோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.

    தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். இதன் காரணமாக இக்கோவில் 'நித்திய சொர்க்கவாசல் கோவில்' என அழைக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள், இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நித்ய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.

    இந்த கோவிலில், நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும், கலசமும் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    வைணவத் திருக்கோவிலான இந்த ஆலயத்தில், சிவாலயங்களில் காணப்படும் கணபதி, கொற்றவை, பிச்சாடனர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் கருவறை கோஷ்டத்தில் இடம் பெற்று உள்ளன. மேலும் சிவாலயங்களில் சிவனுக்குரிய வில்வ மரம் இந்த கோவிலில் மகாலட்சுமி அம்சமாகவும், தல விருட்சமாக இருப்பது அபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    • தஞ்சையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது.

    தஞ்சாவூர்:

    பொது வினியோக திட்டத்திற்காக தனித்துறையை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

    மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 4 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தஞ்சை பாலாஜி நகரில் உள்ள மண்டல இணைபதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து நியாயவிலை கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் இன்று 897 கடைகள் திறந்திருக்க வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 825 கடைகள் திறக்கப்படவில்லை. 72 கடைகள் மட்டுமே திறக்கபட்டது என்றார்.

    ரேஷன் கடை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரதெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் இல்லை. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பூக்கள் சாகுபடி செய்யப்படவில்லை.

    ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது பூக்கள் விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாக பூச்சந்தைக்கு வரக்கூடிய பூக்களின் அளவு அதிகமாகவே இருக்கிறது. முகூர்த்ததினத்தையொட்டி பூக்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது.

    நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ, கனகாம்பரம் ரூ.400-க்கும், ரூ.100-க்கு விற்ற அரளி பூ ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ ரூ.200-க்கும் விற்பனையானது.

    இதேபோல ரோஸ் பூ, சாதி அரும்பு, மருக்கொழுந்து, கோழிக்கொண்டை பூ போன்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. விலை உயர்ந்திருந்தாலும் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் மக்கள் அதிக அளவில் வந்து வாங்கி சென்றனர். வருகிற 5-ந் தேதி வரை விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றனர். 
    தஞ்சையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் பலியான சம்பவம் புதுப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புதுப்பட்டினம் கிராமம் கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களது மகள் தனுஸ்ரீ (3).

    இந்த நிலையில் சரண்யாவின் சகோதரி இறந்து விட்டார். இதனால் அவரது மகள்களான சாய்வர்சினி (10), ஸ்ரீவர்சினி (8), என்ற 2 குழந்தைகளையும் சரண்யாவின் தந்தை தட்சிணா மூர்த்தி வளர்ந்து வந்தார்.

    விஜயகுமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார். விஜயகுமாரின் மாமனார் தட்சிணா மூர்த்தி (55), மாமியார் உமாராணி (50) ஆகியோரும் உடன் சென்றனர்.

    திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு நேற்று இரவு அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். காரை தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த டிரைவர் அரவிந்த் (27) என்பவர் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் தஞ்சை- திருச்சி புறவழிச்சாலை அருகே உள்ள கிரீன் சிட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரோட்டோரத்தில் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிய ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்ற லாரி மீது ‘டமார்’ என்ற பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த விஜயகுமார், அவரது மனைவி சரண்யா, மற்றும் மாமனார் தட்சிணா மூர்த்தி, சிறுமி தனுஸ்ரீ, டிரைவர் அரவிந்த் ஆகிய 5 பேரும் இடி பாடுகளில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் காரில் இருந்த உமாராணி, சிறுமிகள் சாய்வர்சினி, ஸ்ரீவர்சினி ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சையில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், டிரைவரும் பலியான சம்பவம் புதுப்பட்டினம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #TamilNews

    ×