search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை"

    • சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

    வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடந்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

    இந்த போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், உண்மையில் பந்து வீசியதில் ஷகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.

    இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் பவுலிங் செய்வதிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல், ஐசிசி- ஆல் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருவதை சில நாட்கள் தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

    கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியிலிருந்து மூங்கில்காடு கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து கொண்டு ஆற்றை கடந்து வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூங்கில்காடு கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். மேலும் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் மலைக்கிராம மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.


    எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை மலைக்கிராமப்பகுதியில் இருந்து மூங்கில்காடு பகுதிக்கு செல்ல விரைவில் பாலம் அமைத்து தர வேண்டும்.

    பலமுறை இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு முடிவுக்கு கொண்டுவர துறை சார்ந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்மலை கிராம பகுதியில் கீழான வயல் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை கடந்து செல்வதில் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் சாலை ஓரங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு மண் சரிந்து வீடுகளில் விழுந்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டாலும் முறையான சாலை பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    நள்ளிரவு மிக கனமழையாக பெய்த நிலையில் காலையிலும் மிதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல் நகரின் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதே போல் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனிடையே பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அலுவலர்கள் விழுந்த பாறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்து வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாறைகள் விழும் அபாயம் இருப்பதால் வாகனங்கள் மறு உத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உள்ளூர் சிறு வாகனங்கள் மட்டும் எச்சரிக்கையுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
    • மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாக பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர்.

    இதனைத் தொடர்ந்து மகா தீப மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    மகாதீப தரிசனத்திற்காக ஆண்டு தோறும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

    மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழு மூலமாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

    மகா தீப மலையில் ஈரப்பதம் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.

    வழக்கம்போல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப கொப்பரை, நெய், காடா துணி சுமார் 30 கிலோ கற்பூரம் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இதற்கு கோவில் ஊழியர்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை.

    இது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.
    • அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.

    ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தடையால் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே இதற்கான முயற்சி நடந்தது. ஏற்கனவே சொன்னது மாதிரி, ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊழியர்கள் எனது வீட்டிற்கு வந்து மாதிரியை கேட்ட போது அவர்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் பழையது. காலாவதியானது என்பதை கண்டறிந்து தான் சிறுநீர் மாதிரியை கொடுக்கவில்லை.

    இந்த விவரங்களை அப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களின் தவறை ஏற்கவில்லை. கடந்த 10-12 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். எல்லா விளையாட்டு தொடர், பயிற்சி முகாம்களின் போது ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரியை வழங்கி இருக்கிறேன்.

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன். இந்த அரசாங்கத்தின் நோக்கம் எனது உத்வேகத்தை சீர்குலைத்து, என்னை தலைவணங்க வைக்க வேண்டும் என்பது தான். ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்' என்றார்.

    • சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன
    • பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை குறிப்பிட்டார்

    சர்தார்ஜி ஜோக்குகள் என்பது இந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்றாக உள்ளது. சீக்கிய மதத்தை பின்பற்றும் குறிப்பாக பஞ்சாபி மற்றும் அரியானா ஆண்கள் சர்தார்ஜி என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை முன்னிறுத்தி கூறப்படும் ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகள் எனப்படும்.

    வெகு காலமாவே மக்கள் மத்தியில் புழங்கி வரும் இந்த ஜோக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சில சர்தார்ஜி ஜோக்குகள் மனதை புண்படுத்தும் வகையாக அமைந்துவிடுகிறது. எனவே இந்த முறையற்ற சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி சீக்கிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி கடந்த 2015 தாக்கல் பொது நல வழக்கு (பிஐஎல்) தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

     

    அப்போது பேசிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி, இத்தகைய நகைச்சுவைகள் சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள்,   முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடைக்காக கேலி செய்யப்படுகின்றனர், சீக்கிய குழந்தைகள் பள்ளி தோழர்களால் கேலி செய்யப்படுகின்றனர். நகைச்சுவைகள் அடிப்படை சிந்தனையையே மாற்றியமைக்கிறது. இந்த நகைச்சுவைகள் மனித மனதை பாதிக்கின்றன என்று அவர் கூறினார்.

    மேலும் பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சவுத்ரி எடுத்துக்காட்டினார். சமூகத்திற்கு இந்த ஸ்டீரியோடைப்கள் ஏற்படுத்தும் தீங்குகளை மேற்கோள் காட்டி, டிஜிட்டல் தளங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தை கொண்ட இந்த ஜோக்குகள் கையாளப்படுவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சௌத்ரி தெரிவித்தார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இது ஒரு முக்கியமான பிரச்சினை, சீக்கிய சமூகத்தை குறிவைத்து பரவி வரும் புண்படுத்தும் நகைச்சுவைகளைப் பற்றியும், இதை கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பாக பள்ளிகளில் இதுகுறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு ஒத்தி வைத்தனர்.   

    • ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.
    • தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.

    மேலும் 57 சதவீதத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.

    இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கக் கேடான அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்திருக்கிறது.

    ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் வருமாறு:-

    தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா சீரியல்களை நிறுத்த வேண்டும். ஒரு தொடரின் எபிசோட்களின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

    சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றை முறையான தணிக்கை செய்யப்பட வேண்டும்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தற்போதுள்ள திரைப்பட தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப் பேற்க வேண்டும்.

    இளைய பார்வை யாளர்கள் பார்க்க பொருத்த மானதாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பங்கள் மற்றம் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும்.

    கருப்பொருள் பெரும்பாலும் உண்மைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. இது இளம் பார்வையாளர்களிடையே தீங்கு விளைவிக்கும் சாயல்களுக்கு வழி வகுக்கும்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும். பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    • ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது தடை செய்யப்பட்டுள்ளது.
    • இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன.

    பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதித்துள்ளன.

    இந்நிலையில், ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ, மற்ற பெண்களின் முன் குர்ஆனை ஓதுவதோ தடை செய்யப்பட்டுள்ளது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் நடந்த நிகழ்ச்சியில் நல்லொழுக்கத்துறை மந்திரி காலித் ஹனாபி பேசியதாவது:

    ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன் சத்தமாக பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அல்லா ஹு அக்பர் கோஷம் எழுப்ப அனுமதி கிடையாது. இஸ்லாமின் நம்பிக்கை வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப்பொருள் என்கின்றனர்.
    • செகந்திராபாத்தில் மயோனைஸ் நிரப்பப்பட்ட சவர்மா சாப்பிட்ட 4 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    திருப்பதி:

    மயோனைஸ் இதனுடன் சவர்மா, பீட்சா உள்ளிட்ட துரித உணவுகள் கலந்து சாப்பிட்டால் அதிக ருசி கிடைக்கிறது.

    நகர பகுதிகளில் மயோனைஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்சியில் அரைத்து தயாரிக்கப்படுகிறது.

    அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப்பொருள் என்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மயோனைஸ் நிரப்பப்பட்ட சவர்மா சாப்பிட்ட 4 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதேபோல் அடுத்தடுத்து 10 சம்பவங்கள் மாநிலத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மயோனைஸ் விற்பனை செய்யப்படும் கடைகள் மற்றும் தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அதில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் முட்டை மயோனைஸ் விற்பனைக்கு தடை செய்ய அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

    • குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை பதிவு.
    • யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம்.

    சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார்.

    இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

    ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனை மீது தடை இருந்தாலும், ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன
    • எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஈரான் இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஈரான் அணுசக்தி நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த இந்த சைபர் தாக்குதலால் ஈரான்  அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரான் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதித்துறை நிர்வாகங்களையும், அணுசக்தி, எரிசக்தி மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளையும் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முடயங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த தாக்குதல் குறித்து பேசிய ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளன. முக்கியமாக  ஈரான் அணுசக்தி மையங்களின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகம், போக்குவரத்துக்கு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம், துறைமுகங்கள் என அனைத்தின் மீதும் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்தார்.

     

    முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

     

    இந்நிலையில் தற்போது ஈரான் அரசு நிர்வாகங்கள் மீதே நடந்துள்ள இந்த சைபர் தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்களில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

    • காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக கொண்டு, இன்று வரை இந்த நடைமுறையை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • காமனூர் கிராமம் ‘காந்தி கிராமம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    கொப்பல்:

    கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 600 வீடுகள் உள்ளன. இங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஓட்டல் கூட இந்த கிராமத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

    அதாவது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனது. மேலும் மக்கள் நிம்மதி இழந்து தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இனி கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுத்தனர். மேலும் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அன்றைய தினம் முதல் இன்று வரை இந்த கிராமத்தில் மதுபாட்டிலோ, புகையிலை பொருட்களோ விற்பனை செய்யப்படவில்லை.

    காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக கொண்டு, இன்று வரை இந்த நடைமுறையை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் காமனூர் கிராமம் 'காந்தி கிராமம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. கிராம மக்களின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருவதுடன், இதேபோல மற்ற கிராமங்களும் மாற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
    • ரூ.20 ஆயிரம் வரை செலுத்தி விளையாடும் வகையில் திருத்தம்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் புதிய பரிந்துரைகளை செய்துள்ளது.

    ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

    ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி கட்டுப்படுத்தலாம்? சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம்? என்பது போன்ற ஆலோசனைகள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    நள்ளிரவு 12 மணி முதல் அதிகாரி 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கலாம். ஒரு நாளைக்கு 4 மணி நேரத் துக்கு மேல் விளையாட அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதமும் ரூ.5 ஆயி ரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே செலுத்தி விளையாடும் வகையில் திருத்தங்களை செய்யலாம்.

    சுமார் 1½ லட்சம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலர் தங்களது பெற்றோர்களின் செல்போன்களையே ஆன்லைன் விளையாட்டுக்காக பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    இப்படி குறிப்பிட்ட நேரம் தான் விளையாட முடியும் என்பதை கொண்டு வந்து விட்டால் நிச்சயமாக ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அதிகமாக நேரத்தை செலவழிப்பது குறையும்.

    சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருப்பது போன்று விளையாடும் நேரம் மற்றும் பணப்பரிமாற்ற தகவல்களை செல்போன்களுக்கு அனுப்பும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் பணம் கட்டாமல் பொழுதுபோக்காக விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ஆன்லைன் விளையாட்டு தடுப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×