என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி"
- ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை அறையாக சோதனை நடத்தினர்.
- போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.
தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
- 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.
இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
- விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
- மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.
இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர்.
- பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர்.
இதற்கிடையே அன்றைய தினம் இரவே 2 மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, மாணவிகள் இருவரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்துள்ள குருசுக்குப்பத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜூ என்ற புஷ்பராஜ் (வயது 25), வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணி என்ற மணிமாறன் (27) ஆகியோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்கள். மாணவிகளும் அந்த ஆசை வார்த்தையை நம்பி அவர்களுடன் பழகி இருக்கிறார்கள். கடந்த 2-ந்தேதி இருவரையும் கடற்கரை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு வெகுநேரமான பின்னர் மாணவிகள் வீடு திரும்பிய தகவல் வெளியானது.
போலீசார் மாணவிகள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மாணவிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாணவிகள் இருவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.
- புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான சாலை போக்குவரத்து கழகத்தின் (பி.ஆர்.டி.சி.) சார்பில் நகரம், கிராமம், வெளிமாநில பகுதிகளான சென்னை, பெங்களூரு, குமுளி, கடலூர், நாகர்கோவில், மாகி, திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 40 ஊழியர்கள் மட்டும்தான் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். டிரைவர், கண்டக்டர், பணிமனை ஊழியர்கள் என சுமார் 130-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அவ்வப்போது பணி நிரந்தரம் கோரி போராட்டமும் நடத்திவந்தனர். அரசு சார்பில் உறுதிமொழி அளித்தவுடன் போராட்டம் கைவிடப்படும்.
இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீசை நிர்வாகத்திடம் வழங்கியிருந்தனர்.
இதன்படி இன்று காலை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசின் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. காலை நேரத்தில் சென்னைக்கு மட்டும் நிரந்தர பணியாளர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது.
நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஷிப்ட் முறையில் பணியாற்றுவதாலும் அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம். தமிழக அரசின் பஸ்கள் புதுவையில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளில் தனியார் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இயங்காததால் உட்புற கிராமப்புற மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணி மனை முன்பு திரண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.
- கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டாலும், மாநில அளவிலான தேர்தல்களில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் எதிர் எதிரில் போட்டியிட்டது. அடுத்த ஆண்டில் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி என அடுத்தடுத்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கோட்டை என கருதப்பட்ட புதுச்சேரி கடந்த சட்டமன்ற தேர்தலில் கைநழுவி போனதோடு, 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்து பலகீனமாகியுள்ளது.
இதனால் புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி கண்டது.
ஆனாலும் இந்த வெற்றியை காங்கிரசாரால் முழுமையாக தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க. சரிபாதி தொகுதிகளை பிரித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
அதோடு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதுதான் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என தி.மு.க. உரக்க குரல் கொடுத்து வருகிறது. அதோடு, சுமார் கால் நுாற்றாண்டாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறது.
இதனால் அவ்வப்போது இந்தியா கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்ற ரீதியில் தி.மு.க. பேசியும், செயல்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவதுபோல, புதுச்சேரிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என காங்கிரசார் அடித்து கூறி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க.வும், காங்கிரசும் இப்படி மோதி கொள்ளும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆகிய கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை எதிர்த்து தனித்தனி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த புதிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், கூட்டணியை பற்றி காங்கிரசார் கவலைப்பட வேண்டாம். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை தொடங்குங்கள், பூத்களை வலுப்படுத்துங்கள் என கூறினார்.
இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டணி பற்றி தேர்தலின்போது முடிவு செய்யலாம், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ? அவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும். கூட்டணி கட்சிகளின் தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என தெரிவித்துள்ளனர். அதோடு காங்கிரஸ் சார்பில் தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட அகில இந்திய தலைமை தனியார் நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதில், புதுவை, காரைக்காலில் 12 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது புதுச்சேரி காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு சில தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதிகள். இருப்பினும் இந்த தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பெரும் வகையில் இன்னும் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி, அந்த தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனால் கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.
- கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
- புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
பைக் விபத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ம் ஆண்டு 123 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால் இந்தாண்டு சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அடுத்து சில நாட்கள் மட்டுமே மக்கள் குறைந்த அளவில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து போலீசார் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகள் நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தியும், 3 மாதத்தில் 24 பேர் விபத்தில் உயிரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் 8.45 மணி அளவில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது. பொதுமக்கள் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 ½ மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
- புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான்.
- போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.
புதுச்சேரி:
கடலூரில் 2 போலீஸ் காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கொள்ளையன் விஜய் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் என்ற மொட்டை விஜய் (வயது 19) புதுவை திலாசுபேட்டை வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்தவ ராவார். விஜய் 7-ம் வகுப்பு படிப்பை முடிக்கவில்லை.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே 13 வயது முதல் விஜய் ஆங்காங்கே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 15 வயது முதல் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட தொடங்கினான். மோட்டார் சைக்கிள், நகை, லேப்-டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி அவற்றை விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தான்.
மேலும் புதுவையை சேர்ந்த ரேவந்த், அசோக் அன்பரசன் அகியோரை தனது கூட்டாளியாக்கிக் கொண்டு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தான்.
விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது புதுவை கோரிமேடு, மங்களம் உருளையான்பேட்டை, மேட்டுப்பாளையம், பாகூர், வில்லியனூர், தவளக் குப்பம், சேதராப்பட்டு, அரியாங்குப்பம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருந்தாலும் திருடுவதை விடவில்லை. இதனால் புதுவை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக விஜய் இருந்து வந்தான்.
இதனால் புதுவையில் கைவரிசை காட்டினால் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தமிழக பகுதிக்கு இடம் பெயர்ந்தான்.
புதுவையையொட்டிய தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தன்னுடைய கும்லுடன் கைவரிசையை காட்டத் தொடங்கினான். இதனால் தமிழகத்தின் ஆரோவில், கோட்டகுப்பம், கிளியனூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் விஜய் மீது வழக்குகள் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் எம்.புதூரில் பதுங்கியிருந்த விஜயை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.
- விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
- சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
- இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வும் எழுதியுள்ளனர். திடீரென சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாடம் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஆங்கிலப் புலமை இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மிஷன் இங்கிலிஷ்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் ரூ.22 லட்சம் செலவில் பெங்களூருவில் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புத்தகம் வழங்குவதோடு மட்டுமன்றி தினசரி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடவேளை இந்த 'மிஷன் இங்கிலிஷ்' புத்தகத்தை நடத்தவும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.