என் மலர்
நீங்கள் தேடியது "பேரறிவாளன்"
+2
- என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
- தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் தற்கொலைப்படையால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேர் நேற்று ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தனர்.
வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து முதலில் நளினி வெளியே வந்தார். அங்கிருந்து காரில் ஆண்கள் ஜெயிலுக்கு காரில் வந்தார். பின்னர் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகன், சாந்தன் இருவரும் வெளியே வந்தனர். முருகன் கையை பிடித்து நளினி கண்ணீர் மல்க வரவேற்றார்.
முருகன், சாந்தன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை போலீசார் திருச்சியில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றார். உடன் அவரது தாய் மற்றும் சகோதரர் தங்கி உள்ளனர்.
பின்னர் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியான ராஜீவ் காந்தி மற்றும் போலீசார் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன், நாங்கள் அதை நினைத்து பல வருடங்கள் வருத்தப்பட்டோம்.
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் என்னைச் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் என்னைப் பார்க்க வேண்டிய நேரம் கடந்து விட்டதாக நான் நினைக்கிறேன்.
அவர்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துவிட்டனர். அந்த சோகத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
பிரியங்கா காந்தி என்னை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் பத்திரமாக செல்ல வேண்டும் என நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்.
நரகம், சாக்கடை, புதைக்குழி, சுடுகாடு அப்படித்தான் சிறை வாழ்க்கையை நினைத்தேன். ஆனால் ஜெயில் ஒரு பெரிய பல்கலைக்கழகம். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன்.
சிறையில் இருந்த போது முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். வழக்கு நடந்த போதும் சிறையில் இருந்த போதும் இந்த வழக்குக்காக நான் ஒருபோதும் பயப்படவில்லை. ஏனென்றால் நான் தவறு செய்யவில்லை. நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார்கள்.
என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி. சத்தியமாக பொது வாழ்க்கைக்கு வரமாட்டேன். எனது மகளுடன் லண்டனில் தங்கவே விரும்புகிறோம்.
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. இந்த 10 மாத பரோல் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஜெயிலில் இருந்த போது ஆன்மீகம், யோகா போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினேன். இந்த விடுதலையை ஒரு மிராக்கிளாகவே எனது கணவர் பார்க்கிறார்.
இன்னும் தாமதம் ஆகும் என நினைத்திருந்த நிலையில் இந்த விடுதலை பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பேரறிவாளனும் நானும் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்திக்கொண்டே இருந்தோம். பேரறிவாளன் என்னென்ன செய்கிறார் என்பதை நானும் தொடர்ந்து அறிந்து வந்தேன்.
7 பேர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் மட்டும் விடுதலையான தகவல் வந்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது.
கெங்கையம்மன் கோவிலுக்கு போக வேண்டும். தீமிதிக்க வேண்டும் எனது மகளுக்கு துலாபாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
நீ என் மகாராணி நீ யாரிடமும் கையேந்த கூடாது நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று எனது கணவர் கூறியுள்ளார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.