search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதான வாலிபர் இன்று கோர்ட்டில் ஆஜர்
    X

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதான வாலிபர் இன்று கோர்ட்டில் ஆஜர்

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் கைதான வாலிபரை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார்(வயது 35) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (வயது 37), சாய்பாபாகோவில் அருகே உள்ள கருணாநிதி நகரை சேர்ந்த சதாம் (27) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இருவரையும் போலீசார் தேடிச் சென்ற போது தலைமறைவாக இருந்தனர். இருவரின் புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் நோட்டீசுகள் அச்சிட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது. முபாரக், சதாம் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் அறிவித்தனர்.

    இதற்கிடையே முபாரக், சதாம் ஆகியோரது செல்போன் எண்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் சதாம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்றுமாலை அங்கு விரைந்து சென்ற போலீசார் பஸ் நிலைய பகுதியில் வைத்து சதாமை கைது செய்தனர். அவரை கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சசிகுமார் கொலையில் முபாரக் மூளையாக செயல்பட்டதாகவும், அவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து சசிகுமாரை வெட்டிக் கொன்றதாகவும் கூறினார்.

    கணபதியில் நடந்த ஒரு கொலைக்கு பழிதீர்ப்பதற்காகவும், இந்து முன்னணி இயக்கத்தில் சசிகுமார் தீவிரமாக செயல்பட்டதால் அவரை கொலை செய்ய வேண்டும் என கூறி முபாரக் திட்டம் தீட்டினார். நான் அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றேன், முபாரக்குடன் வந்த 2 பேர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். அவர் கூறிய தகவல்களை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர்.

    கொலைக்கு பின்னர் 4 பேரும் தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர். சதாம் ஆந்திர மாநிலம் ஐதராபாத், விஜயவாடா, செகந்திராபாத் நகரங்களில் கடந்த 11 மாதங்களாக பதுங்கி இருந்துள்ளார். அங்கு சாலையோர நடைபாதை பகுதியில் டார்ச் லைட், செல்போன் சார்ஜர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ரம்ஜான் பண்டிகை நேரத்திலேயே ஊருக்கு திரும்ப திட்டமிட்ட இவர் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதை அறிந்து திட்டத்தை கைவிட்டார். தற்போது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை பார்க்கும் ஆசையில் ஊர் திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் முபாரக்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டால் அவரின் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் முபாரக்குடன் வந்த 2 பேர் யார்? அவர்களை அழைத்து வந்தது யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சதாம் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.


    Next Story
    ×