search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை புறநகர் வெள்ளத்தில் மிதக்கிறது: முடிச்சூரில் பொதுமக்கள் மறியல்
    X

    சென்னை புறநகர் வெள்ளத்தில் மிதக்கிறது: முடிச்சூரில் பொதுமக்கள் மறியல்

    மழை பாதிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம்சாட்டி முடிச்சூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோட்டில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

    பெருங்களத்தூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு செல்ல முடியாததால் முடிச்சூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றன.

    இந்த நிலையில் முடிச்சூர் சாலையில் இன்று காலை பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மழை பாதிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீசார் ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து அவ்வழியே வாகனங்கள் செல்ல பொது மக்கள் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு பொது மக்கள் திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    இதேபோல் திருநீர்மலை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மதனபுரம் ஏரிகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ளது.

    வரதராஜபுரம், பி.டி.சி. காலனி, மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், ராயப்பா நகர், அமுதம் நகர் பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

    பெருங்களத்தூர் கண்ணன் அவின்யூ, செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், பொழிச்சலூர் தாங்கல் பகுதி, அனகாபுத்தூர், மப்போடு, திருவஞ்சேரி, இரும்புலியூர் உள்ளிட்ட இடங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.

    பெருங்களத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பொது மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    பஸ்நிலையம், எம்.ஜி.ஆர். நகர், மாங்காட்டில் சாதிக் நகர், ஜனனி நகர், அம்மாள் நகர், செல்வகணபதி நகர், காட்டுப்பாக்கத்தில் செந்தூர்புரம், பி.ஜி.அவின்யூ பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இதேபோல் ஆவடி- பூந்தமல்லி சாலையில் சென்னீர் குப்பத்தில் மழை நீருடன் கழீவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    பழவேற்காட்டில் தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. சூறைகாற்றும் வீசுகிறது.

    பழவேற்காடு ஏரிக்கு மழை தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் சாட்டாங்குப்பம், பசியாவரம், இடமனிகுப்பம், ரகமத் நகர், இடையன் குப்பம், தாங்கல் பகுதியில் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. இதனால் மீனவ கிராம மக்கள் பழவேற்காடுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் படகுகளில் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    பழவேற்காடு ஏரியில் இருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு அதிவேகத்தில் மழைநீர் பாய்கிறது. தொடர்ந்து மழை நீடித்தால் மேலும் தண்ணீர் வரத்து அருகில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மீனவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    திருநின்றவூர், பெரியார் நகர், முத்தமிழ்நகர், திருவெங்கட நகர், ராமதாஸ்புரம், கோமதிபுரம், இந்திரா நகர் இடங்களில் ஆயிரம் வீடுகள் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. வீடுகளுக்குள் பாம்புகள், வி‌ஷபூச்சிகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தண்டுரை ஏரிக்கு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் குடியிருப்புக்குள் தண்ணீர் தேங்கியுள்ளது.

    ஆவடி, கோவில்பதாகை, வசந்தம் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர், தென்றல்நகர், சரஸ்வதி நகர் பகுதியில் சாலையில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருநின்றவூர் ஈஷா ஏரி, தண்டுரை ஏரி, சேக்காடு ஏரி, கன்னடபாளையம் ஏரி, பருத்திப்பட்டு ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் ஏரி தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கன மழையால் பொன்னேரி, கொக்குமேடு, ஏமதூர், ஏறுசிவன், பெரிய காவனம், தேவம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.
    Next Story
    ×