search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது
    X

    மேட்டூர் அணை மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது

    மேட்டூர் அணையில் இருந்து அணை மின் நிலையம் வழியாக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் அணை மின் நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேராளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 7271 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 7181 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக அணையின் கீழ் மட்ட மதகு வழியாக 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் தேவை ஏற்பட்டதால் நேற்றிரவு முதல் மேட்டூர் அணையில் இருந்து அணை மின் நிலையம் வழியாக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நள்ளிரவு முதல் அணை மின் நிலையத்தில் 40 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

    மேலும் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மறுநாள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் பொது மக்கள் காவிரியில் நீராட வசதியாக இருக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு 7181 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 34.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 35.71 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணைக்கு இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×