சினிமா

கோவைத் தம்பி படங்களில் மீண்டும் இளையராஜா

Published On 2016-06-07 22:26 IST   |   Update On 2016-06-07 22:26:00 IST
இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.
இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.

சமரசம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-

"இளையராஜா இல்லாமல் இனி படம் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததும், இளையராஜா இதுபற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன். அவர் வீட்டுக்கு என் மகன் மோகன் துரையையும், என் மனைவி சீதாவையும் அனுப்பி வைத்தேன்.

அவர்களை இளையராஜாவும், அவர் துணைவியாரும் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்.

"என் அப்பா, உங்கள் இசை அமைப்பில் படம் தயாரிக்க விரும்புகிறார்...'' என்று என் மகன் ஆரம்பித்ததுமே, "நானா உங்கள் அப்பாவுடன் கோபித்துக் கொண்டேன்? அவர் அல்லவா கோபித்துக்கொண்டு என்னைப் பார்க்க வராமல் இருந்தார்! இதை உங்கள் அப்பாவிடம் கூறுங்கள். நாம் எப்போதும் ஒரே குடும்பம்தான். உங்கள் அப்பாவை வரச்சொல்லுங்கள்'' என்று இளையராஜா கூறியிருக்கிறார்.

இதை என் மகன் என்னிடம் வந்து கூறியதும், நான் இளையராஜாவை நேரில் சந்தித்தேன். இருவரும் மனம் விட்டுப் பேசினோம். எங்களிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் அகன்றன. எங்கள் நட்பு மíண்டும் தொடர்ந்தது.

அடுத்து நான் தயாரித்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'' என்ற படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் பார்த்திபன், சுமாரங்கநாத் நடித்தனர். ஸ்ரீதேவ் டைரக்ட் செய்தார். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

அடுத்து, ஆர்.கே.செல்வமணியுடன் கூட்டாக "செம்பருத்தி'' படத்தைத் தயாரித்தேன். இதற்கு இளையராஜா இசை அமைத்தார்.

இந்தப் படத்தில்தான் ரோஜா அறிமுகமானார். கதாநாயகனாக பிரசாந்த் நடித்தார்.

செல்வமணி டைரக்ட் செய்த இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

10 ஆண்டுகளில் 13 படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு தொடர்ந்து படம் எடுக்கக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை திரை உலகில் இல்லாததால், படம் எடுப்பதை நிறுத்தினேன்.

நல்ல சூழ்நிலைக்காக காத்திருந்தேன். இப்போது காலம் கனிந்திருப்பதால், மீண்டும் படத்தயாரிப்பில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் ஈடுபட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற "உயிர்'' படத்தின் டைரக்டர் சாமியின் டைரக்ஷனில் "சதம்'' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதில் விக்ராந்த் (நடிகர் விஜய்யின் தம்பி) கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.''

இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.

கோவைத்தம்பி -சீதா தம்பதிகளுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள்.

சீதா கோவையில் `மதர்லேண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி'யை நடத்துகிறார்.

மூத்த மகன் கோ.மோகன் துரை, சென்னையில் மதர்லேண்ட் வீடியோ ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். மனைவி பெயர் சியாமளா.

மூத்த மகள் பெயர் இந்திரா. இவருடைய கணவர் தெய்வசிகாமணி, கம்ப்ïட்டர் டிசைனர்.

இளையமகள் நித்யாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. கணவர் டாக்டர் ரமேசுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

Similar News