சினிமா

விதம் விதமாக தயாராகி ரசிகர்களை கவர்ந்த கபாலி டி–சர்ட்

Published On 2016-06-06 13:10 IST   |   Update On 2016-06-06 14:30:00 IST
ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி ‘டி–சர்ட்’கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

ரஜினியின் ‘கபாலி’ படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரை 2 கோடிக்கும் அதிகமானோர் இணைய தளத்தில் பார்த்தனர். இது உலக அளவில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‘கபாலி’ பாடல் வெளியீட்டு விழா வருகிற 12–ந் தேதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி இளமையாகவும், இப்போதைய தோற்றத்திலும் நடித்திருக்கும் இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘ரிலீஸ்’ ஆகிறது. மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடந்ததால் அந்த நாட்டு ரசிகர்களிடம் இந்த படத்துக்கு தனி மவுசு இருக்கிறது.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், ‘கபாலி’ படத்தின் ‘டி–சர்ட்’ அணிந்து போஸ் கொடுப்பது போன்ற படம் சமீபத்தில் இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விதம் விதமாக கபாலி ‘டி–சர்ட்’கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இதில் ரஜினியின் பல்வேறு கபாலி தோற்றம், மலேசிய பின்னணியிலான கோபுரங்களுடன் ரஜினி படம் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

இந்த ‘டி–சர்ட்’டுகள் ரூ. 350 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ‘டி–சர்ட்’ விற்பனை சூடு பிடித்திருக்கிறது.

Similar News