சினிமா

மம்முட்டி இளமை ரகசியத்தை அவரிடமே கேட்ட வரலட்சுமி

Published On 2016-06-07 13:04 IST   |   Update On 2016-06-07 13:04:00 IST
மம்முட்டியின் இளமை ரகசியத்தை அவரிடமே கேட்ட வரலட்சுமி

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வயது 65. ஆனால் அவர் 30 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே தோற்றத்துடன் இப்போதும் இருக்கிறார். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் மம்முட்டியைப் பற்றி கருத்து தெரிவித்த இந்தி நடிகை கரீனா கபூர், ‘‘இதுவரை மம்முட்டி போல் யாரும் இளமையாகவும், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடனும் இருந்தது இல்லை. இந்தி நடிகர்கள் தங்கள் உடலை இதுபோல் வைக்க முடியவில்லை’’ என்று கூறி இருந்தார்.

இப்போது மம்முட்டியுடன் ‘கசாபா’ என்ற மலையாள படத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். 20 நாட்களுக்கு மேலாக அவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வரலட்சுமி, மம்முட்டியின் இளமைத் தோற்றம், சுறுசுறுப்பு, இளம் நடிகர்கள் போல நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை கண்டு அசந்து போனார்.

மம்முட்டியின் இளமை ரகசியத்தை அறிய விரும்பிய வரலட்சுமி, அதை மம்முட்டியிடம் நேரிலேயே கேட்டுவிட்டார். அதற்கு பதில் அளித்த மம்முட்டி, ‘‘இளமை ரகசியம் பற்றி கேட்கிறீர்கள். ரகசியம் என்பதே யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பதற்குத்தான். அப்படி சொல்லி விட்டால் அப்புறம் ரகசியத்துக்கு என்ன மரியாதை. எனவே, அது ரகசியமாகவே இருக்கட்டும்‘‘ என்று சொல்லிவிட்டு தப்பித்துக் கொண்டார். பதில் கிடைக்காததால் வரலட்சுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Similar News