சினிமா

நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல்: வாலிபரை தூண்டி விட்ட பெண்ணும் சிக்குகிறார்

Published On 2016-09-06 17:27 IST   |   Update On 2016-09-06 17:27:00 IST
நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தூண்டிவிட்ட பெண் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...

'சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதாவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. போனில் பேசிய நபர் புழல் சிறையில் இருந்து நான் வைரம் பேசுகிறேன், முனிவேலை (ராதாவுடன் பழகியவர்) நீ திருமணம் செய்தால் உயிரோடு இருக்க முடியாது என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா இதுபற்றி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில், முனிவேலின் மனைவி உமாதேவி மற்றும் தனது முன்னாள் கணவரான பைசல் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் ரவுடி வைரம் கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ரவுடி வைரம் இல்லை என்பது தெரிய வந்தது.

அவரது பெயரை சொல்லி செங்கல்பட்டை சேர்ந்த ஆன்டனி பெனடிக்ராஜ் என்ற வாலிபர் மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஆன்டனியிடம் நடத்திய விசாரணையில் முனி வேலின் மனைவி உமாதேவியின் தூண்டுதலின் பேரிலேயே அவர் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து உமாதேவியையும் இந்த வழக்கில் கைது செய்ய போலீசார் தேடினர். அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ராதாவின் முன்னாள் கணவர் பைசல் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, பைசலுக்கு இதில் தொடர்பு இல்லை என்று தெரிவித்தனர்.

Similar News