சினிமா
குழந்தைகளை பயமுறுத்த வரும் சுசீந்திரன்
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுசீந்திரன், தற்போது குழந்தைகளை பயமுறுத்த இருக்கிறார்.
வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது, ‘ஏஞ்சலினா’, ‘ஜீனியஸ்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். பிரபல இயக்குனராக இருக்கும் சுசீந்திரன் தற்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் `தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுசீந்திரன் நடித்து வருகிறார். இதில் இவருடன் விக்ராந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் குறித்து சுசீந்திரன் கூறும்போது, ‘எந்த குழந்தையும் இந்த படத்திற்கு பின், என்னை கண்டாலே பயந்து ஓடுவார்கள் அப்படியொரு வில்லத்தனம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், குழந்தைகளுடன் நடித்த அனுபவர் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தை அக்ஷித்தா மிகவும் சிறப்பாக நடித்தாள். தொடர்ந்து 10 நாட்களாக 4 கேமராக்களை வைத்து படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார் இயக்குனர். இப்படம் உறுதியாக மிக தரமான படமாக வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஹீரோ விக்ராந்த்க்கு மிகவும் பொருத்தமான வலுவான கதாபாத்திரம், ரொம்ப என்ஜாய் பண்ணி நானும் விக்ராந்தும் ஒர்க் பண்றோம்’ என்றார்.