சினிமா
டப்பிங்கில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்திய சத்யராஜ்
தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை பெற்றிருக்கும் சத்யராஜ், தற்போது நடித்து வரும் படக்குழுவினரை டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
சத்யராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகளும் தற்போது முடிந்துள்ளது. இதில் சத்யராஜ் 12 மணி நேரம் டப்பிங் பேசி பணிகளை முடித்திருக்கிறார். சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து இயக்குநர் தீரன் கூறும்போது, ‘சத்யராஜுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன்.
இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட ஆர்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை 12 மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வெகு விரைவில் டீசர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம்’ என்றார்.