சினிமா
மீரா மிதுன்

சாதியை குறிப்பிட்டு சர்ச்சை பேச்சு.... நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2021-08-08 13:25 IST   |   Update On 2021-08-08 15:38:00 IST
நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் அறியப்பட்டவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நடிகை மீரா மிதுன் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார். அதில், குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை குறிவைத்து அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசியும், அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் பேசியிருந்தார். 

மேலும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மீரா மிதுனின் இப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சார்பில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 



புகாரில், குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொச்சையாகப் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் மீரா மிதுன் மீது சாதி வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்காக மிஜி பிரிவின் கீழும் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகார் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News