சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழப்பு

Published On 2024-06-21 13:10 IST   |   Update On 2024-06-21 13:10:00 IST
  • கலைத் துறையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியுள்ளார்.
  • பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்களால் மறக்க முடியாதவை.

கனடா நாட்டை சேர்ந்தவரும், புகழ்பெற்ற நடிகருமான டொனால்ட் சதர்லேண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். எத்தகைய கதாபாத்திரத்திலும் மிகவும் நேர்த்தியாக நடிப்பதில் டொனால்ட் வல்லவர்.

இவர் நடிப்பில் வெளியான மாஷ் (M*A*S*H), க்லூட் (Klute), ஆர்டினரி பீப்பில் (Ordinary People) மற்றும் ஹங்கர் கேம்ஸ் (Hunger Games) உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. 1960களில் துவங்கி 2020 வரையிலும் கலைத் துறையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியுள்ளார்.

ஹாலிவுட்டில் 1970-க்களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் டொனால்ட். திரைப்படங்கள் மட்டுமின்றி 80-களில் வெளியான தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பான பங்காற்றினார். இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனங்களில் வாழும்.

டொனால்ட் சதர்லேண்ட் மறைவு குறித்து அவரது மகன் கைஃபெர் சதர்லேண்ட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கனத்த இதயத்துடன், எனது தந்தை, டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழந்துவிட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

"தனிப்பட்ட முறையில் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக அவரை நினைக்கிறேன். எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க தயங்காதவர். அவர் செய்ததை எப்போதும் விரும்பி செய்பவர். ஒருவிஷயத்தை தனக்கு பிடித்தால் மட்டுமே செய்பவர். ஒருவர் தன் வாழ்வில் இதை விட வேறு எதையும் கேட்டுவிட முடியாது. ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துள்ளார்," என்று குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

Similar News