மன்சூர் அலிகான் ஆபாச பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம்
- மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.
- மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், லியோ படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபோது திரிஷா குறித்து ஆபாசமாக பேசியுள்ளார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்த நடிகை திரிஷா அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.