சினிமா செய்திகள்

திரை, அரசியல் களங்களில் "கேப்டன்" விஜயகாந்த்

Published On 2023-12-28 09:19 IST   |   Update On 2023-12-28 09:19:00 IST
  • 2005 செப்டம்பர் மாதம் மதுரையில் தன் கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.
  • இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட கட்சி தே.மு.தி.க.

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் என இரு நடிகர்கள் முன்னிலையில் இருந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரத் தொடங்கியவர் நடிகர் விஜயகாந்த்.

தனது திரைப்படங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதனை துணிச்சலாக தட்டி கேட்கும் கதாநாயகனாக பல வேடங்களில் நடித்தார். அது போன்ற காட்சிகளில் நடிக்கும் போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளை குறி வைத்து கேள்வி கேட்கும் வகையில் பல வசனங்கள் அவருக்கென எழுதப்பட்டு வந்தது. அவை ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்று வந்ததால், தொடர்ந்து தனது படங்களில் இந்த பாணியை விஜயகாந்த் கடைபிடித்து வந்தார்.

அவருக்கு தமிழக அரசியலில் நுழையும் ஆர்வம் இருப்பதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அக்காலகட்டத்தில் இதனை விஜயகாந்த் மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை.

ஆனால், தனது ரசிகர் மன்ற அன்பர்களை கொண்டு சமூக நலப் பணிகளில் இடைநிறுத்தம் இல்லாமல் தொடர்ந்து சமூக சேவையாற்றி வருவதை தொடர்ந்தார்.

திரையுலகில் ஒரு உயர் நிலையை எட்டியிருந்த விஜயகாந்த், 2005 செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார். அதில், அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும், அதற்கு பெயர் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" என்றும் விஜயகாந்த அறிவித்தார்.


அ.தி.மு.க.வில் ஜெயலலிதா, தி.மு.க.-வில் கருணாநிதி உயிருடனும், நல்ல உடல்நலத்துடனும் கட்சி பணி ஆற்றி வந்த காலத்திலேயே இரு கட்சிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக அவர்களை எதிர்த்து செயல்பட்டு தனது கட்சியை முன்னிறுத்தினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்பேட்டில் உள்ள தனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை தனது கட்சியின் தலைமையகமாக கொண்டு தீவிர அரசியலில் நுழைந்தார் விஜயகாந்த்.

2006 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்தின் 234 இடங்களிலும் அவர் கட்சி போட்டியிட்டது. ஆனால், "கருப்பு எம்.ஜி.ஆர்." என அழைக்கப்பட்ட அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வென்றாலும், 8 சதவீத வாக்குகள் மட்டுமே தே.மு.தி.க.வால் பெற முடிந்தது. தே.மு.தி.க.வின் பிற வேட்பாளர்களில் பலர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

2009 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 இடம் என 40 இடங்களில் போட்டியிட்டும் தே.மு.தி.க.-வால் குறைந்த அளவு வாக்குகளே பெற முடிந்தது.

இருபெரும் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை அதுவரை முன்னிறுத்தி வந்த விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வினருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

இக்கூட்டணி 202 இடங்களை பிடித்தது. போட்டியிட்ட 40 இடங்களில் 29 இடங்களில் தே.மு.தி.க. வென்றது. இதன் மூலம், தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சியாக சட்டசபைக்குள் அக்கட்சி காலடி எடுத்து வைத்தது. இந்த வெற்றியின் காரணமாக தே.மு.தி.க.விற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட்டது.


2016 பிப்ரவரி மாதம், 8 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்தார்.

2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. போட்டியிட்டது. ஆனால், விஜயகாந்தின் அரசியல் வியூகம் அவரே எதிர்பாராத விதமாக அவருக்கு அதிர்ச்சி தோல்வியை தந்தது. அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பறி கொடுத்தது.

இதை தொடர்ந்து விஜயகாந்தின் கட்சி இறங்குமுகத்தை சந்திக்க துவங்கியது.

அவரது மைத்துனரான எல்.கே. சுதீஷ் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என பல நிர்வாகிகள் குற்றம் சாட்ட துவங்கினர்; ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறினர்.

விஜயகாந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளால், அவர் தொண்டர்களை சந்திப்பதை குறைத்து கொண்டார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.



அரிதாக தொலைக்காட்சிகளில் விஜயகாந்த் தோன்றும் போது அவரது உற்சாகமான பேச்சை எதிர்பார்த்த ரசிகர்களும் தொண்டர்களும், அதற்கு மாறாக அவர் உடல்நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்படுவதை கண்டு உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

இது மேலும் தே.மு.தி.க.விற்கு சரிவை ஏற்படுத்துவதாக அமைந்தது. சிறிது சிறிதாக அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. மக்களிடையே செல்வாக்கை இழக்க தொடங்கியது. கட்சி பணியை விஜயகாந்தின் மனைவி கவனித்து வந்தாலும் தே.மு.தி.க.வால் செல்வாக்கான கட்சியாக வளர முடியவில்லை.

ஜெயலலிதாவுடன் சுமுக உறவில் இருந்திருந்தால், தே.மு.தி.க. வளர்ச்சி பெற்றிருக்கும் என சில விமர்சகர்களும், மாற்று கட்சியாக முன்னிறுத்தி களம் இறங்கிய ஒருவர் இரு கட்சியினருடனும் கூட்டணி வைத்து கொள்ளாமல் தனது அரசியல் பாதையை வகுத்து சென்றிருக்க வேண்டும் என வேறு சில விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News