நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரம்: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப முடிவு
- நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. இந்த வழக்கு அக்டோபர் 19-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாக்வும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.