சினிமா செய்திகள்

நடிகை பூஜா பட் நில விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2023-11-03 14:30 IST   |   Update On 2023-11-03 14:30:00 IST
  • ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட் வழக்கு தொடர்ந்தனர்.
  • நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவில், குப்பன் என்பவருக்கு 1978-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ந்தேதி ஒரு ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. அப்போது, 10 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.

இதன்படி, இந்த நிலத்தை 1988-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி பவர் ஏஜெண்ட் மூலம் குப்பன் விற்பனை செய்தார். அதன்பின்னர், அந்த நிலத்தை பகுதி பகுதியாக பலர் வாங்கியுள்ளனர். அதில், 27 சென்ட் நிலத்தை அரவிந்த தேவி என்பவர் 1999-ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.

அதில், 13.84 சென்ட் நிலத்தை தன் மகள் பிங்கிள் ரமேஷ் ரெட்டிக்கு எழுதி கொடுத்தார். இதற்கிடையில், குப்பன் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று, இந்த நிலத்துக்குரிய பட்டாவை ரத்து செய்து கோத்தகிரி தாசில்தார் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பிங்கிள் ரமேஷ் ரெட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த ஒரு ஏக்கரில் மற்றொரு பகுதியை வாங்கிய நடிகை பூஜாபட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த நிலம் மட்டுமல்லாமல், நீலகிரி மாவட்டத்தில் தனியாருக்கு நிபந்தனைகளுடன் வழங்கப் பட்ட அரசு நிலங்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் மறுஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அந்த நிலத்தை பொது பயன்பாட்டுக்காக மீண்டும் கையகப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்'' என்று உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிங்கிள் ரமேஷ் ரெட்டி, நடிகை பூஜா பட், ருக்மணி குமாரமங்கலம் ஆகியோர் தனித்தனியாக மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிங்கிள் ரமேஷ் ரெட்டி தரப்பில் மூத்த வக்கீல் அப்துல் சலீம் ஆஜராகி, நிலத்தின் ஒதுக்கீட்டை 45 ஆண்டுகளுக்கு பின்னர் ரத்து செய்துள்ளனர். இதன்மூலம், மனுதாரருக்கு சொத்தின் மீதுள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பா.முத்து குமார், ''நடிகை பூஜா பட் பெயரில் உள்ள நிலம் மட்டுமே இதுவரை அரசு எடுத்துள்ளது'' என்றார். இதை பூஜாபட் தரப்பில் ஆஜரான வக்கீல் மறுப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ''இந்த வழக்கை வருகிற டிசம்பர் 8-ந்தேதி தள்ளிவைக்கிறோம். அதுவரை அனைத்து தரப்பினரும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News