அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும்.. இயக்குனர் எச்.வினோத்
- எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
- இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் படம் குறித்து பேசியுள்ளார். அதில், மிகப் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் கண்டிப்பாக இருக்கும். மேலும் வியாபாரம், கதை, ஹீரோ மெட்டிரியல் என பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வியாபாரம் சார்ந்த கதையை செய்தாலும், வியாபாரத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை விதைத்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும். அதை மறுக்க முடியாது, இருந்தும் படத்திற்காக இயக்குனர்கள் உழைப்பது என்பது பொதுவானதுதான். துணிவு திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்றார்.