சினிமா செய்திகள்

வெற்றிமாறன் - சீமான்

"ராஜராஜ சோழன் வரலாறு" நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார் - சீமான் அறிவிப்பு

Published On 2022-10-06 04:21 GMT   |   Update On 2022-10-06 04:21 GMT
  • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது விடுதலை, வாடிவாசல் படங்களை இயக்கி வருகிறார்.
  • அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.

 

சீமான் - வெற்றிமாறன்

இந்நிலையில் அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

 

சீமானின் அறிவிப்பு

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News