விஜயகாந்த் முகத்தை பார்க்க முடியவில்லை- கதறி அழுத சூர்யா
- விஜயகாந்த் மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது.
- இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது.
இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "அண்ணனின் இந்த பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்பகாலக்கட்டத்தில் விஜயகாந்த் உடன் 'பெரியண்ணா'படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தட்டில் இருந்து உரிமையாக எனக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். நீ நடிக்கிறார் உனக்கு சக்தி வேண்டும் என்று கூறினார்.
நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் எல்லோரையும் அருகில் வைத்திருப்பார். அவரை மறுபடியும் சந்தித்து உட்கார்ந்து பேச முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. விஜயகாந்த் போன்று இன்னொருத்தர் இல்லை. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கும் சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.