மீண்டும் நடிப்பேனா? ரம்பா கூறிய பதில் இதுதான்
- இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
- ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை ரம்பா. விஜயவாடாவில் பிறந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.
தனது 15 வயதில் மலையாள படத்தின் மூலம் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார் ரம்பா. அதை தொடர்ந்து தெலுங்கில் நடித்தார். தமிழில் 'உழவன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரம்பா. அப்படத்தை தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா', 'சுந்தர புருஷன்', 'செங்கோட்டை', 'விஜபி', 'அருணாச்சலம்', 'காதலா காதலா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக 'பெண் சிங்கம்' என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
100 படங்களுக்கு மேல் நடித்த இவர், தற்போது திரையுலகிலேயே தலைகாட்டாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரம்பா அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை, ரம்பா குடும்பத்துடன் சந்தித்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அதற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நடித்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என பலரும் கேட்கின்றனர். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.